ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 24, 2019

பித்தனைப் போன்று இருந்த “மெய்ஞானியான என் குருநாதரின் செயல்கள்” - ஞானகுரு

“நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” - தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு பித்தனைப் போன்று உலகெங்கிலும் சுற்றி வந்தவர்.

உலகிலுள்ள சாங்கிய நிலைகளைத் தனக்குள் கண்டுணர்ந்து சாங்கியத்தால் பெற்ற தீமைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்ற உணர்வினைத் தனக்குள் பதியச் செய்து கொண்டார்.

விண்ணுலக ஆற்றலைப் பெற்றுணர்ந்த நமது குருநாதர் அந்த உண்மைகள் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான் பித்தனைப் போன்று பல காலம் பல நிலைகளிலும் சுழன்று வந்தார்.
  
என் (ஞானகுரு) தாய் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் அக்காலங்களில் அவருடைய சுழற்சியின் வேகச் சுழல்களில் வரப்படும் போதுதான் என் தாயிற்கு இவர் சுழலும் நிலைகளில் இந்த ஆசியும் கிடைத்தது.

அதன் வழிகளிலே தான் நீ கருவில் இருக்கப்படும் பொழுது பூர்வத்தில் பதிந்த உணர்வுகள் வேதனைகளிலிருந்து உன் அன்னை மீண்டிடும் நிலைகள் கொண்டு ஏக்கத்தால் ஏங்கிக் கொண்டிருந்த அத்தருணம் நான் சந்திக்கும் சந்தர்ப்பமும்  அதற்கு ஆசி கூறும் நிலைகளும் ஏற்பட்டது.

அதன் வழிகளிலே பெற்ற ஆசிதான் அதனுள் வளர்ந்து வளர்ந்து நீ எத்தகையை இன்னலிலிருந்தும் உன்னை மீட்டிடும் எனது உணர்வே உன்னில் வேலை செய்தது என்றார் குருநாதர்.

அதனால் பல இன்னல்களிலிருந்து மீளவும் உண்மைப் பொருளை அறிந்திடவும் உனக்குள் நீ அனுபரீதியிலே பெறும் தகுதியைப் பெற்றாய்.

அதன் தொடர் வரிசையிலே தான் பழனியம்பதியில் உன்னை நான் நெருங்கி வந்தேன். உன்னை என்னுடன் இணைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளில் நீ சிக்காது தப்பினாலும் நான் உன்னை விடவில்லை, உன்னை அணுகினேன் என்று தெளிவுபடுத்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஆகவே, ஈஸ்வராய குருதேவரை நான் (ஞானகுரு) காணும் பொழுதெல்லாம் ஒரு பித்தராகத்தான் எண்ணினேன். ஏதோ மந்திரத்தில் தவறு ஏற்பட்டு அதனால் இப்படி ஆகிவிட்டாரோ என்ற எண்ணத்தில் நான் விலகிச் சென்றேன்.

நான் விலகிச் சென்றாலும் அவர் என்னை விட்டபாடில்லை. என்னைப் பின் தொடர்ந்தே பல நிலைகளிலும் வந்து “இதைக் கற்றுக் கொள்.., அதைக் கற்றுக் கொள்..,” என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர்.

“நான் எனக்கு எதுவும் வேண்டாம், ஆளை விட்டால் போதும்…,”  என்ற நிலைகளில் குருநாதரிடமிருந்து விலகிச் சென்று கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் என் மனைவி கடும் நோயால் (டி.பி.) பாதிக்கப்பட்டார்.

இதனின் தொடர் வரிசையில் தான் நான் உன்னை அணுகி வந்தேன் என்றார் குருநாதர்.

உனது மனைவியின் நோய் தீராத நிலைகளில் இருப்பினும் அதைத் தீர்க்கும் நிலைகளுக்கு உன்னை நான் அணுகி எலுமிச்சம்பழத்தையும், திருநீறையும் கொடுத்து அதைக் காக்கும் நிலைக்குச் செயல்படுத்தினேன்.

உனது மனைவி நோயிலிருந்து எழுந்தபின் உன்னை நம்பும்படிச் செய்து என்னுடன் அழைத்துக் கொண்டேன் என்ற நிலையினை பின்னாளில் குருநாதர் எனக்குத் தெளிவுபடுத்திக் காட்டினார். ஒவ்வொரு உண்மையின் நிலையையும் உணரும்படிச் செய்தார்.

இன்று இதையெல்லாம் நீங்கள் அமர்ந்து கேட்கிறீர்கள். ஆனால், நான் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்துதான் தெரிந்து கொண்டேன்.

காட்டுக்குள் செல்லும் பொழுது பல விலங்குகள் ஒன்றுக்கொன்று தன்னைத் தற்காத்துக் கொள்ள எவ்வளவு இம்சைகள் படுகிறது? அதன் வழியில் மிருகங்கள் மற்ற உயிரினங்கள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைகின்றது? என்ற நிலையை அங்கே காட்டுக்குள் சென்று காட்டினார் குருநாதர்.

அதன் வளர்ச்சியில் மனிதனான பின் தனது வாழ்க்கையில் செல்வத்தில் பல வகையில் செழித்திருந்தாலும் பிறருடைய சாபக்கேடுகளில் சிக்கப்பட்டு அவர்கள் எவ்வாறு நலிகின்றனர்?

தான் சேர்த்து வைத்த செல்வத்தால் தன்னைக் காக்க முடியாது பல இன்னல்களில் எவ்வாறு சுழன்று கொண்டுள்ளார்கள்? என்ற நிலையைத் தெளிவுபடுத்திக் காட்டுகின்றார்.

தவறு செய்யவில்லை என்றாலும் சாப உணர்வுகள் எவ்வாறு அவர்களைத் தாக்குகின்றது? அது பின் தொடர்ந்து அவர்களுக்குள் எவ்வாறு விளைகிறது? என்றும் காட்டுகின்றார் குருநாதர்.

நீ உன் தாயின் கருவிலிருக்கப்படும் பொழுது உன் தாய் தீமைகளிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது. அந்த ஏக்கத் தொடரில் நான் கொடுத்த ஆசீர்வாதம் (உனக்குள்) கருவிற்குள் பூர்வ புண்ணியமாக அமைந்தது.

அதனின் வளர்ச்சியின் தொடரில் நீ மெய்ஞானத்தைப் பெறுகின்றாய்.

இதைப் போல ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவர்கள் தவறே செய்யவில்லை என்றாலும் மற்றவர்கள் ஒருவருக்கொருவர் சாபமிடும் பொழுது அதனை உற்று நோக்கும் பொழுது கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அது அமைகின்றது.

தாய் வேடிக்கைதான் பார்த்தது. ஆனால் யாரையோ ஏசிப் பேசி சாபமிட்ட உணர்வுகள் அதைத் தாய் கேட்டறியும் பொழுது அந்த உணர்வுகள் கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிடுகிறது.

சாபமிட்ட உணர்வுகள் எந்த வயதில் அவர்கள் இட்டார்களோ அதன் தொடர் வரிசையில் குழந்தைக்கு அந்த வயதில் விளைந்துவிடுகின்றது.

அப்பொழுது தவறு இல்லாமலே தவறின் நிலைகள் அவர்களின் வாழ்க்கையில் இயங்கி அதனால் எத்தகைய நிலைகளில் அல்லல்படுகின்றார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றார் குருநாதர்.

இதைப் போல தனது வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தாய்மார்களும் பிறர் மேல் அன்பு கொண்டு பலருக்குப் பல உதவிகள் செய்தாலும் பிறர்படும் கஷ்டங்களையும் துயரங்களையும் கேட்டறியும் பொழுது அது கருவிலிருக்கும் குழந்தைக்குள் எவ்வாறு பதிவாகின்றது?

ஒருவர் தாயை ஏசிப் பேசிய அந்த தீமையின் விளைவுகளை செய்து கொண்டிருக்கப்படும் பொழுது ஒரு கர்ப்பிணி உற்றுப் பார்த்தால் அவர்கள் செய்யும் தீமைகளே கருவிலிருக்கும் குழந்தைக்குள் பதிவாகிவிடுகின்றது.

அதனால், குழந்தை வளரும் பருவத்தில் தாய்க்கு எதிரியாக அது  உருப்பெறுகிறது. அதனின் வளரும் பருவத்தில் அந்தக் குழந்தை அதே தீமையைச் செய்யும் நிலை வருகின்றது.

ஆனால், கருவிலே வளரும் பொழுது அந்தக் குழந்தை தெரிந்து செயல்படுத்தவில்லை.

இதைப் போன்ற நிலைகள் எவ்வாறெல்லாம் உருவாகின்றது? என்ற நிலைகளைத் தெளிவாக எமக்கு உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.