உதாரணமாக மைக் (MIC) மூலம் ஒருவர் பேசப் போகிறார்
என்றால் அவர் பேசுவதற்கு முன் அதைப் பல முறை பரிசோதிப்பார்கள்.
சப்தம் எப்படி வருகிறது…? எக்கோ (ECHO) இல்லாமல்
இருக்கிறதா..? எல்லா இடங்களிலும் சப்தம் கேட்கிறதா…? இரைச்சல் இல்லாமல் இருக்கிறதா…?
என்றெல்லாம் பார்த்து அதைச் சரி செய்து வைப்பார்கள்.
ஏனென்றால் அது சரியாக இல்லை என்றால் பேசுபவர் முக்கியமான
விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தாலும் கேட்பர்களுக்கு அது முழுவதும் போய்ச் சேராது.
அர்த்தமும் ஆகாது… எரிச்சலாகும் உணர்ச்சிகளைத் தான் தூண்டும்.
1.இது போல் தான் நம்முடைய குருநாதர் மூலம் (ஞானகுரு)
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அப்படியே தங்கு
தடையில்லாது முழுமையாகப் பெறவேண்டும் என்றால்
3.அதைக் கிரகிப்பதற்கு நம் நினைவுகளைச் சீர்படுத்திக்
கொள்ள வேண்டும்.
எப்படி…?
ஓ…ம் ஈஸ்வரா.. குருதேவா…! என்று அடிக்கடி சொல்லச்
சொல்வதே இதற்குத்தான். அதாவது
1.எங்கெங்கோ செல்லும் நினைவுகளைப் புருவ மத்திக்குக்
கொண்டு வந்து
2.நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றும் பொழுது
3.நம் ஆன்மாவில் இருக்கும் மற்ற உணர்வுகள் உயிரிலே
படாதபடி தடுக்கப்படுகின்றது.
அதே சமயத்தில் (கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றிய
நிலையில்) ஞானகுரு உபதேசத்தைக் கேட்கும் பொழுதோ அல்லது படிக்கும் பொழுதோ அல்லது அதை
எண்ணித் நினைத்துத் தியானிக்கும் பொழுதோ
1.அந்த அருள் உணர்வுகளை மட்டும்
2.காற்றிலிருந்து பிரித்துக் காட்டும்.
அந்த உபதேசக் கருத்துக்களில் உள்ள நுண்ணிய உணர்வுகள்
உயிரிலே பட்ட பின் அதே உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது. அதன் மூலம் நாம் எந்த மகரிஷி அந்த
உணர்வைத் தனக்குள் ஆற்றலாக வளர்த்துக் கொண்டாரோ அதை நேரடியாக நாம் பெறும் சந்தர்ப்பம்
உருவாகின்றது.
அதன் மூலம் நமக்குள் மெய் ஞானத்தின் வளர்ச்சி கூடுவதற்கு
ஏதுவாகின்றது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிந்தித்துச் செயல்படும்
அறிவாற்றல் பெறுகின்றோம்.
இப்படி வளர்த்துக் கொண்டால் நம்முடைய அறிவாற்றல்
முதலில் செயல்பட்டதற்கும் இப்பொழுது செயல்படும் தன்மையிலும் அதிகமான உயர்வைக் காண முடியும்.
1.சரியான ஆலோசனை கேட்பதற்காக யாரையோ (நமக்கு நம்பிக்கையானவர்களை)
தேடுவதற்குப் பதிலாக
2.நமக்குள் நாமே அந்த மெய் வழியைக் கண்டுணர முடியும்.
3.அதைச் சீராகச் செயல்படுத்தி வெற்றியையும் அடைய
முடியும்.
என்னுடைய அனுபவம் அது தான்…!