ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2019

நம்முடைய உமிழ் நீருக்குத் தக்கவாறு தான் ஜீரணிக்கும் சக்தியும் அதன் மூலம் உடலுக்குச் சத்தாகவும் அமைகின்றது…!


மனித உடலுக்குள் எத்தனையோ உணர்வுகள் உண்டு. எத்தனையோ விதமான தாவர இனங்களைச் சாப்பிட்டு விட்டுத் தான் இன்று மனிதனாக நாம் வந்திருக்கிறோம்.

இப்பொழுது வேறு ஒன்றும் வேண்டியதில்லை…! நீங்கள் மாங்காயைச் சாப்பிட்டிருக்கின்றீர்களா…? வெயில் காலங்களில் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…?

சொன்னவுடனே இப்பொழுது எச்சில் எப்படி ஊறுகிறது…?

லேசாக அந்தப் புளிப்பு கலந்து வரும். மாங்காயை வெயில் காலத்தில் சாப்பிட்டிருக்கின்றீர்களா…! என்று சொன்னவுடனே இந்த உணர்வை நுகரப்படும் போது உடனே எப்படி புளிப்பான உமிழ் நீராக மாறுகிறது…?

இதே மாதிரித் தான் நாம் நுகரக்கூடிய எண்ணங்கள் அனைத்தும் உமிழ் நீராக மாறும். உணவாக உட்கொள்ளும் போது நீங்கள் சங்கடமாகவோ வெறுப்பாகவோ இருந்து பாருங்கள். சரியாக ஜீரண சக்தி ஆகாது. விஷத் தன்மைகள் ஆகும்.

அவன் அப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்… என்று சோர்வாகி வேதனையுடன் சாப்பிட்டீர்கள் என்றால் உடலுக்குள் எதிரியான அணுக்கள் உருவாகி உங்களுக்குள் நோயை உருவாக்கும்.

இப்பொழுது சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதா…!

நாம் சாப்பிடும் ஆகாரத்துடன் உமிழ் நீர்கள் அனைத்தும் சேர்கின்றது. அப்போது இந்த உமிழ்நீர் எதுவோ அதற்குத் தகுந்த மாதிரி இந்த ஆகாரத்தை மாற்றுகின்றது. இது ஒரு திரவத்தை போன்று கலக்கின்றது,

நீங்கள் கடினமான நிலைகள் கொண்டு சலிப்புடன் இருந்து பாருங்கள். உங்கள் உணவை ஆகாரத்தைச் சரியாக ஜீரணிக்காது.

குருநாதர் இப்படி எல்லாம் உணர்வுகள் நுகரப்படும் போது உமிழ் நீர்கள் எனக்குள் எப்படிச் சுரக்கிறது…? என்று அனுபவபூர்வமாகக் காட்டினார். அதில் மகரிஷிகளின் அருள் உணர்வை நீ எண்ணி அந்த உணர்வின் தன்மையை உமிழ் நீராகக் கூட்டு என்று உணர்த்தினார்.

அதை உனக்குள் கூட்டும் பொழுது உனக்குள் அது சக்திவாய்ந்ததாக மாறும். சாப்பிட்ட ஆகாரத்தையும் சரியாக ஜீரணித்து நல்ல இரத்தமாக மாற்றும். நோயாக மாற்றாது.

ஆகவே வாழ்க்கையில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து உயர்ந்த ஞானத்துடன் பேசினீர்கள் என்றால் நல்ல சக்தியாக உங்களுக்குள் வளரும்.

ஏனென்றால் இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.