ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2019

நம் சொல்லையும் செயலையும் புனிதப்படுத்தும் பயிற்சி

1.அம்மா அப்பா அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனை வேண்டி ஏங்கி ஒரு நிமிடம் தியானியுங்கள்...!

2.எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்...!

அதாவது நாம் சொல்லும் போது கேட்போரின் உணர்வுகள் புனிதமாக வேண்டும்... மகிழ்ச்சியாக வேண்டும்...! அதே சமயத்தில் நாம் ஒரு செயலைச் செய்யும் போது அந்தச் செயலைப் பார்போருக்கும் அந்த மகிழ்ச்சி உண்டாக வேண்டும் என்பது தான் இதனின் நோக்கம்.

2.நாங்கள் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்...!

நமக்கு ஆகிறவர்களோ... ஆகாதவர்களோ... மற்றவர்களுடைய செயல்களைப் பார்க்கும் போது
1.நல்ல குணங்களும் நல்ல நிலைகளும் அவர்கள் பெற வேண்டும்.
2.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற இந்த எண்ணம் தான் நமக்கு வர வேண்டும்.

காரணம்... அவர்களைப் பார்க்கும் போது நாம் அவர்களுடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ நுகர்ந்துவிடக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் உடல் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழிலில் வளம் பெற வேண்டும் என்ற உணர்வு தான் நமக்குத் தோன்ற வேண்டும்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலரிடம் செல்வம் அவர்களிடம் இல்லை என்றால் முகம் வாடிய நிலைகள் கொண்டு மனம் குறுகிய நிலையில் சோர்வாக இருப்பார்கள்.

அந்தச் சோர்வும் சலிப்பும் சஞ்சலமும் அவர்கள் குடும்ப நிலைகளில் இருக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகொப்ப அவர்களுடைய முக வாட்டங்களையும் அவர்களுடைய செயல்களையும் நாம் உற்றுப் பார்க்கும் போது
1.அது நமக்கும் வேதனை தரும்.
2.அந்த வேதனை என்ற உணர்வை நுகரப்படும் போது நம் சிந்தனையும் குறையும்.

ஏனென்றால் நல்ல மனங்கள் கொண்ட... நல்ல குணங்கள் கொண்ட... நல்லது செய்வோரின் உணர்வுகளுக்கு மற்றவர்களின் இத்தகைய செயல்களைப் பார்க்கும் போது
1.அவருடைய உணர்வுகள் உயிரிலே பட்டு
2.அந்த உணர்ச்சிகள் நம் உடலிலே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் ஓர் இயக்கச் சக்தியாக மாறும்.
3.அவர்களுடைய உணர்வுகள் நம் உடலிலே இரத்தங்களிலே மாறும் போது அதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் ஒவ்வொரு குணங்களுக்கும் ஒவ்வொரு விதமான நிறம் உண்டு. நம் இரத்த நாளங்களிலே அத்தகைய நிறத்தின் உணர்வுகள் உணர்ச்சிகள் பரவும். அந்த நிறத்தின் உணர்வு உணர்ச்சிகளுக்கு ஒப்பத் தான் நம்முடைய பேச்சும் மூச்சும் இருக்கும்.

இதைப்போன்ற நிலைகளை நாம் தடுக்க வேண்டுமென்றால் அவர்கள் வாழ்க்கையில் உடல் நலம் பெற வேண்டும். நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள் இது புகாது.

அவர்களுக்கு நல்லதைச் செய்யக்கூடிய எண்ணங்கள் வர வேண்டும்... அவர்களுக்கு மன பலம் கிடைக்க வேண்டும்...! என்ற உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.அப்படி எடுத்து அதை உறுதிப்படுத்தினால்
2.அவர்கள் கஷ்டங்களையும் துயரங்களையும் நமக்குள் நுகரும் சக்தியைத் தடைப்படுத்தலாம்.

“ஈஸ்வரா...” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் எடுக்க வேண்டும்.

பிறருடைய குற்றமான செயல்களைப் பார்க்கும்போதெல்லாம் இப்படி எடுத்து நாம் இந்த உணர்வுகளைச் செலுத்தினோமென்றால் அவர்களுடைய உணர்வு நமக்குள் வராமல் தடைப்படுத்தி நம் இரத்தங்களில் நல்ல உணர்ச்சிகளாக மாற்றியமைக்கலாம்.

இது மனிதன் ஒருவனால் தான் முடியும்...!

ஆக.. நாம் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்ற இந்தச் சொல்லுக்குள் இவ்வளவும் அடங்கி இருக்கிறது.

3.எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அமைதி பெற செய்ய அருள்வாய் ஈஸ்வரா...! என்று ஏங்கித் தியானியுங்கள்.

நமக்கு வேண்டிய ஒருவர் சங்கடமாக இருக்கிறார் என்று அவரைப் பார்த்தால் உடனே அவரிடம் “என்ன... ஏது...?” என்று அவருடைய சங்கடங்களைப் பற்றித்தான் கேட்போம். நல்லதைக் கேட்க மாட்டோம்.

ஏனென்றால் அவர்கள் கஷ்டமாக இருக்கிறார்கள்... சங்கடமாக இருக்கிறார்கள்... வேதனையாக இருக்கிறார்கள்... வெறுப்பாக இருக்கிறார்கள்... என்ற நிலையில்
1.அவர்கள் எண்ணத்திற்குத் தகுந்தாற்போல் நாமும் கஷ்டத்தையும் சங்கடத்தையும் வெறுப்பையும் வேதனையும் பட்டு
2.இப்படி ஆகிவிட்டதா...! அப்படியா செய்து விட்டார்கள் பாவிகள்...! என்று நாம் பதிலுக்குச் சொன்னோமென்றால்
3.அது சாதாரண வாழ்க்கைக்கு ஒத்ததாகப் போய்விடும்.
4.அவர்களிடம் அதைத் தூண்டிக் கேட்கக் கேட்க அவர்களின் வேதனையும் சலிப்பும் நமக்குள் அதிகமாக வர நேரும்.

சலிப்பும் வேதனையும் நமக்கு நன்மை செய்யுமா...? அல்லது அவருக்கு அது நன்மையாகுமா...? சற்று சிந்தித்துப் பாருங்கள்...!

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்...?

அவர்கள் முகம் வாடிய நிலையில் சோர்வையோ  சஞ்சலத்தையோ சொல்லும் போது நாம் ஈஸ்வரா..! என்று உயிரை நினைத்து அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்.
1.அந்த மகரிஷிகளின் அருளை நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் குடும்பத்தில் பற்றும் பாசமும் பெருக வேண்டும்.
3.உங்கள் உடல் முழுவதும் அந்த அருள் ஞானம் பெருக வேண்டும்.
4.உங்களுக்கு அமைதி கிடைக்க வேண்டும்.
5.உங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படிச் சொல்லிப் பாருங்கள்.

ஏற்றுக் கொள்ளும் பண்பும் வரும். நாம் சொல்லும் உணர்வுகள் அவர்களுக்குள் பதிவாகும். பதிவானதை எண்ணும் பொழுது அவர்களும் அந்தச் சக்திகளைப் பெறும் சந்தர்ப்பம் உருவாகும்.

ஆனால் நீங்கள் சாதாரண நிலையில் இருந்து புத்திமதிகளைச் சொல்லிப் பாருங்கள். நீங்கள் சொல்கிறீர்கள்...! ஆனால் என் பையன் பேசுவதையும் செய்வதையும் கேட்டால் அப்புறம் தெரியும் உங்களுக்கு...! என்று நல்லதைச் சொல்லும் போதே பதிலுக்கு எதிர்த்துச் சொல்லுவார்கள்.
1.எனக்குக் கஷ்டமாக இருக்கிறது என்று
2.அதையே இறுக்கப் பிடித்துக் கொண்டு பேசுவார்கள்.

ஆகையினால் இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் அவர்களின் உணர்வை நாம் எடுப்பதற்கு முன்பாகவே அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து நமக்குள் வலுவாகச் சேர்த்து கொள்ள வேண்டும்.

எடுத்து அதன் பின் அவர்களுக்கு இந்தச் மாதிரி சொல்ல வேண்டும். ஒவ்வொரு காரியத்திலும் இதே போன்று நாம் செயல்படும் போது
1.நம் பேச்சு உலக மக்களோடு ஒத்து வாழ்ந்தாலும்
2.அவர்கள் உணர்வை ஏற்றுக் கொள்ளாதபடி
3.நமக்குள் நல்ல உணர்வுகளைச் சமைத்து
4.அந்த நல்ல உணர்வுகளை அவர்களையும் பெறச் செய்கின்றோம்...!

அப்பொழுது நம்முடைய பேச்சும் மூச்சும் உலகம் அமைதி பெறச் செய்யும் சக்தியாக மலரும்.