ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2019

நாம் சுவாசிப்பது எல்லாம் நானாகி... தானாகி மீண்டும் நானாகின்றது...! எந்த நானாக நாம் ஆக வேண்டும்...?


உலகத்தினுடைய நிலைகளில் எல்லாமே அந்த உணர்வுகள்தான் இயக்கமே தவிர
1.நான் அதைச் செய்தேன்... இதைச் செய்தேன்...! என்றால்
2.யாரும்... ஒன்றும் செய்யவில்லை...

எப்படி...?

நான் என்ற நிலைகளுக்கு வரப்படும் பொழுது, “தான் யார்... நான் யார்...?” என்று விநாயகனைப் போட்டு பிள்ளையார் சுழி போட்டு ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

புழுவிலிருந்து வளர்ச்சியாகி மனிதனாக வந்தோம் என்ற நிலையில் யானைத் தலையைப் போட்டு மனிதனுடைய உடலைப் போட்டு முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக விநாயகனைக் காட்டினார்கள்.

இந்தப் பிள்ளை யார்...? (பிள்ளையார்) என்று விநாயகனைப் போட்டு நான் யார்...? தான் யார்..? என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வதற்காகச் செய்தார்கள்.

1.”இப்பொழுது” நாம் எதை எண்ணுகிறோமோ... அதைச் சுவாசிக்கும் பொழுது “நான்” ஆகின்றது.
2.அது நம் உடலுக்குள் சென்றவுடன் “தான்” ஆகின்றது.
3.”இந்தத் தானாகி” நம் உடலில் அது செயல்படுகின்றது.
4.”இந்தத் தான்...” உடலுக்குள் உணர்வாக விளையப்படும் பொழுது மீண்டும் நானாகின்றது.

ஆகவே தான் யார்...? நான் யார்...?

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் நாம் எத்தனையோ கோபப்படுகிறோம்... ஆத்திரப்படுகிறோம்... சஞ்சலப்படுகிறோம்... சங்கடப்படுகிறோம்...! இவை அனைத்தும் தானாகின்றது. நாம் எண்ணுவது அனைத்துமே தானாகின்றது.

நான் நல்லதைச் செய்தேன்... ஆனால் எனக்கு இப்படிச் செய்கிறார்களே...! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இந்த உணர்வெல்லாம் உயிருடன் ஒன்றி உயிருடன் சேர்க்கும் போது நானாகின்றது.

அப்படி எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் தானாகி... நானாகி விடுகின்றது. “இந்தத் தான்” என்ற உணர்வின் நிலையாக உயிருடன் சேரும் பொழுது நானாகின்றது.

அதாவது நன்றாக இருக்கும் நாம் கோபத்தையும் ஆத்திரத்தையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் எடுத்த பின்
அந்த நானாக...
கோபப்படுபவனாக..
ஆத்திரப்படுபவனாக..
சஞ்சலப்படுபவனாக...
சங்கக்டப்படுபவனாக... மாறி விடுகின்றோம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா...!

நல்ல மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம் என்ற நிலையில் தான் யார்... நான் யார்...? என்ற நிலைகளை அந்த விநாயக தத்துவத்தை அகஸ்தியன் தெளிவாக்கினான்.

நாம் எண்ணக்கூடியதை எல்லாம் நம் உயிர் உடலாக தானாக நானாக ஆக்கிவிடுகின்றது. அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்...?

இதைப் போன்ற தீமைகளைக் கடந்து சென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் இணைத்தல் வேண்டும். அதை நமக்குள் பெருக்க வேண்டும்.

அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்தால் நம் உயிர் அந்தத் தானாக... நானாக... நம்மை ஆக்கும். ஞானத்தின் உணர்வாக நம்மை இயக்கும்.

இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்...!” என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இதைவிட சாஸ்திரங்கள் நமக்குக் கூற வேண்டும் என்று நினைக்கின்றீர்களா...?

எவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்...? சாஸ்திரங்கள் எதுவும் பொய்யல்ல...! நாம் பொய்யாக்கி வைத்திருக்கின்றோம். உண்மையை நாம் உணராது மறைக்கப்பட்டது... மறைந்தே போய்விட்டது.

அது தெளிவாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இதை உணர்த்துகின்றோம்... உறுதிப்படுத்துகின்றோம். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்... தெளிந்து கொள்ளுங்கள்.

அந்தத் தெளிவின் தன்மை அடைந்த பின் நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கும் இதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
1.இந்தத் தெளிவின் தன்மையை நீங்கள் வளர்க்க வேண்டும்.
2.உங்கள் பார்வை பிறரைத் தெளிவாக்க வேண்டும்... தெளிவாக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்.
3.உங்கள் பார்வை பிறரைத் தெளிந்த நிலைகள் பெறச் செய்யும் சக்தியாக வர வேண்டும்.
4.உங்களைப் பார்த்தாலே அவர்கள் தெளிந்திடும் மனம் பெற வேண்டும்.

அந்தச் சக்தியை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்பதே என்னுடைய (ஞானகுரு) தியானமும் தவமும். ஒவ்வொரு நிமிடத்திலேயும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.