ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2019

வாடிய பயிரைச் செழிக்கச் செய்ய உரத்தைக் கொடுப்பது போல் விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியை உங்களுக்குக் கொடுக்கின்றோம் – மெய் ஞானியாக வளர்வீர்கள்...!


செடி நன்றாக வளர்வதற்காக நாம் என்ன செய்கிறோம்...? உரத்தைப் போடுகின்றோம். அது ஆவியாகப் போய் செடியில் இணைந்து விடுகிறது.

1.உரத்தின் சத்து செடியில் இரண்டறக் கலந்த பின் தான்
2.அந்தச் செடி தன் இனமான சத்தைக் காற்றிலிருந்து எடுத்து செழித்து வளர்கிறது.
3.ஆகவே அந்தச் செடியைச் செழித்து வளரச் செய்வதற்கு இந்த உரம் உறுதுணையாக இருக்கின்றது.

ஆனால் செடியில் உள்ள சத்துடன் உரம் இணையவில்லை என்றால் காற்றிலிருந்து இழுக்கும் சக்தி இல்லை. செடி செழிப்பாக வளர்வதில்லை.

அதே மாதிரித்தான் உங்களுக்குள்ளும் அந்த மெய் ஞானிகளின் உணர்வலைகளை உரங்களாகக் கொடுத்து காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் ஆற்றலைக் கொடுக்கிறோம்.

“ஈஸ்வரா...!” என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் நீங்கள் அதைப் பரப்ப வேண்டும்.

நான் சும்மா வாயிலே சொல்லிக் கொண்டு போனால் இந்த குண்டு சட்டிக்குள் குதிரையை ஓட்டுவது போல் தான் ஓடிக் கொண்டு இருக்க வேண்டும். யாம் (ஞானகுரு) அப்படிச் சொல்லவில்லை...!
1.அந்த விண்ணுலக ஆற்றலைச் செருக வேண்டும் என்றால்
2.குருவின் அருள் நாம் பெற்று இருக்க வேண்டும்.
3.அதை உங்களிடம் கொடுத்துப் பழக வேண்டும்.
4.அந்தப் பாதை தெரியாமல் நாம் போக முடியாது.

ஆரம்பக் கல்வியும் உயர் கல்வியும் பள்ளிகளில் நமக்குச் சொல்லித் தருகிறார்கள். அதிலே படிப்படியாக வந்த பிற்பாடு விஞ்ஞானிகளிடம் போனால் அந்த விஞ்ஞான அறிவின் கலவைகள் பெருகுகின்றது. அந்த நிலைக்கு வருபவன் விஞ்ஞானியாகவே வளர்வான்.

அதைப் போன்ற பெருக்கத்தின் உணர்வுகளை நமக்குள் கொண்டு வர வேண்டும். அதற்காக வேண்டித்தான்...
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தனக்குள் வளர்த்த மெய் ஞானத்தையும்
2.மெய் ஞானிகள் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகளையும் எடுக்கும் பழக்கத்தை எனக்கு எப்படி ஏற்படுத்தினாரோ...
3.அனுபவ வாயிலாக உணரச் செய்து எனக்குள் மெய் ஞானத்தை எப்படி விளையச் செய்தாரோ...
4.அதைப் போல உங்களுக்குள்ளும் வளர்க்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும். மெய் ஞானியாக நீங்கள் வளர்வீர்கள்.