ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2019

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதடா…! - குருவின் வாக்கு


நாம் சுவாசிக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வலைகள் உயிரிலே பட்ட பின் தான் நாம் எதையுமே உணர முடிகிறது. ஏனென்றால் அந்த உணர்ச்சிகள் மூலம் உணர வைப்பது நம் உயிர் தான்.

இருந்தாலும் இது இரண்டையும் உணர்த்தி நம்மை ஞானியாக உருவாக்கிக் கொண்டிருப்பது சப்தரிஷி மண்டலத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் ஒளியான அலைகள்.

1.அந்தச் சப்தரிஷி மண்டல அலைகளை நமக்குள் குருவாக இணைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
2.உயிரிடம் அதை உருவாக்கச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

வேப்ப மரம்… ரோஜா… விஷம்… இந்த மூன்று செடிகளின் மணமும் சேர்ந்து சேர்ந்து புதிதாக ஒரு கருவேப்பிலைச் செடியாக ஆனது போல்
1.நமக்குள் ஏற்கனவே விளைந்த உணர்வுகளுக்குள்ளும்
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள்ளும்
3.அருள் மகரிஷிகளின் உணர்வலைகளைச் சேர்த்து இணைத்துக் கொண்டே வந்தால் நாமும் அந்த மகரிஷியாக ஆக முடியும்.

இதைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நம் சாமிகளுக்கு (ஞானகுருவிற்கு) “நாரதனை நீ நட்பாக்கிக் கொள்…! அவன் எல்லாவற்றையும் உனக்கு விளக்கிச் சொல்வான்…!” என்று சொன்னார்.

நட்பு என்றால் எதையுமே உடனுக்குடன் அங்கே மகரிஷிகளுடன் நாம் பகிர வேண்டும்.
1.அங்கே சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.
2.அங்கிருந்து நமக்கு ஞானமாக உயர் ஞானமாக மெய் ஞானமாகப் பதில் வந்து கொண்டேயிருக்கும்.
3.அதை உயிர் வழியாகச் சுவாசித்து உயிரான ஈசனிடம் வேண்டி நமக்குள் சிருஷ்டிக்க வேண்டும் என்று வேண்டிட வேண்டும்.

இவ்வாறு செய்தால் வாழ்க்கையில் வரும் எத்தகைய இன்னல்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் நாம் விடுபட்டு மகிழ்ச்சியாக ஏகாந்தமாக வாழ முடியும்.

முருகா… அழகா…! என்று பாம்பைக் காலடியில் வைத்து "மகிழ்வாகனா" என்று ஞானிகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

சற்று யோசித்துப் பாருங்கள்…! நாம் எத்தனை பேர் தினசரி வரும் தீமைகளை வென்று வேதனைகளை வென்று
1.நான் நன்றாக இருக்கின்றேன்
2.நேற்றை விட இன்று நன்றாக மகிழ்ச்சியாக இருக்கின்றேன்
3.நாளை இன்னும் இதைக் காட்டிலும் பேரானந்த பெரு மகிழ்ச்சியாக நான் இருப்பேன்...! என்று
4.மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம்… மனதளவில் இப்படிப்பட்ட உணர்வு வருகின்றதா…? சீராகச் செய்தால் நிச்சயம் அந்த மகிழ்ந்த நிலை கிடைக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அதற்குத்தான் நம் சாமிகளிடம் "முன்னே வைத்த காலை பின்னே வைக்காதடா..." என்று அடிக்கடி சொன்னார்.

குரு வாக்கு…! என்பது சாதாரணமானதல்ல.
1.குரு வாக்கை மதித்தால்
2.குரு வாக்கினை ஏற்றுக் கொண்டால்
3.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நடக்கும் ஒவ்வொரு நிலைகளையும் குருவை மறக்காது
4.அருள் மகரிஷிகள் உணர்வுகள நமக்குள் கலந்து எல்லாவற்றையும் நல்லதாக்கும் முயற்சிகளைச் செய்து கொண்டேயிருந்தால்
5.குருவுடன் நாம் என்றுமே ஒன்றிய நிலையில் மகிழ்ந்து மகிழ்ந்து பேரானந்த நிலை எய்திட முடியும்.
6.இது மெய்…!

"ஐக்கியத் தொடர் ஜெனிப்பினுள்ளே..
ஐக்கியமாகிவிடு ஈஸ்வரபட்டாய குருதேவா... ஈஸ்வரபட்டாய குருதேவா.." 

ஒலியின் ஒலி நாத விந்தில்...
ஒளியின் ஒளி ஜீவ வித்தாய்...
*ஓங்கி நிற்கும் தெய்வச் செயலாய்...*
நான் ஓங்கிடவே *உமதருள் தாராய்*
குருதேவா... குருதேவா... குருதேவா…!