ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2019

நேற்று மகிழ்ச்சியாக இருந்திருந்தாலும் அதே மகிழ்ச்சியாக இன்றும் இருக்க முடிகிறதா...? இன்று மகிழ்ச்சியாக இருப்பதால் நாளையும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன்...! என்று சொல்ல முடியுமா...?

இந்த வாழ்க்கையில் நாம் நல்ல மனதுடன் நல்ல குணங்கள் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் கண்ணுக்கு முன்னாடி ஒருவன் வேதனைப்படுவதைப் பார்த்தாலோ அல்லது நம் குழந்தை வேதனைப்படுவதைப் பார்த்தாலோ அந்த உடலில் இருந்து வெளி வரும் உணர்வுகளை நாம் பதிவாக்கிக் கொள்கிறோம்.

அவர்கள் வேதனையுடன் வெளிப்படுத்தும் உணர்வலைகளை நம் கண்ணின் காந்தப்புலன் அறிவு கவர்கின்றது. உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சிகள் எண்ணம் சொல் செயலாக இயக்குகின்றது.

அவ்வாறு இயக்கப்படும் பொழுது நம்மிடம் இருக்கும் மகிழ்ச்சியான எண்ணமும் வேதனையும் இரண்டையும் கலந்து நாம் சுவாசித்த பின் அது ஒரு புதுக் கருவாக உருவாக்குகின்றது.
1.அப்பொழுது இன்றைய செயல் நாளை இல்லை...!
2.இன்றைய செயல் நாளை...! (அதாவது வேதனை வேதனை என்று எண்ணினால் நம்மைச் சதா வேதனைப்படுபவராக அது மாற்றிவிடும்)

இன்றைக்கு நாம் சந்தோஷமாக இருக்கிறோம் என்று சொன்னால் நாளைக்கு நாம் சந்தோஷமாக இருக்க முடியுமா என்றால் முடியாது. எத்தனை பேர் தினமும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்...!

இதை எதற்காகக் கேட்கிறோம் என்று சொன்னால்....
1.ஒவ்வொரு நிமிடமும் நம் உணர்வுகள் மாறிக் கொண்டே இருக்கும்.
2.அதை நாம் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
3.சந்தர்ப்பத்தில் நாம் நுகரும் உணர்வுகள் நம்மை மாற்றும்.
4.அதை மாற்ற மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த உபாயத்தின் துணை கொண்டு
5.அருள் மகரிஷியின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளை இணைத்து
6.வரும் தீமையின் வலுவை இழக்கச் செய்தால் அந்த மகரிஷிகளின் உணர்வின் அணுவாக நமக்குள் பிறக்கும். (தீமையை உருவாக்குவதற்குப் பதில் நன்மையை உருவாக்கும்)
7.அருள் உணர்வினை நமக்குள் பெறும் பொழுது அருளானந்தத்தை என்றுமே பெற முடியும்.

இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா...?

இப்படி இணைக்காமல் சாமி (ஞானகுரு) எனக்கு ஆசீர்வாதம் கொடுத்தார் நடக்கவில்லையே... சாமி ஆசீர்வாதம் கொடுத்தார் நடக்கவில்லையே...! என்று சொன்னால் எப்படிச் சரியாகும்...!

இது மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் சென்று “சாமி ஆசி கொடுத்தாரே... உங்களுக்கு நல்லது நடந்ததா...?” என்று இதே கேள்வியைக் கேட்பார்கள். இப்படிக் கேட்டதும் அவர்களும் ஆமாங்க...! எங்களுக்கும் ஒன்றும் நடக்கவில்லை...! என்பார்கள்.

ஆக இவர்கள் ஆசையை அடுத்தவருக்கும் கொட்டி இரண்டு பேருமே ஆசையை வளர்த்துக் கொண்டு போகும் ஞானப் பாதையைக் கெடுத்து மற்றவர்களையும் கெடுத்து அடுத்தவர்களையும் மெய் வழியைப் பெறாத நிலைகள் செய்கின்றது.

ஏனென்றால் லட்சங்களையும் கோடிகளையும் வைத்து எத்தனையோ சுகமாக இருங்கள். இன்னும் பல ஆயிரம் ரூபாயைச் செலவழித்துச் சுவையான பதார்த்தத்தை ரசித்துச் சாப்பபிடுங்கள்.

இந்த உடல் நிற்கிறதா...? இல்லையே...! கை நிறையச் சம்பாதித்தேன்... பணத்தைச் செலவழித்தேன்... நன்றாகச் சாப்பிட்டேன் என்ற பெருமை இருக்கும். ஆனால் அதே சமயத்தில்
1.வேதனைப்படுவோரை சிறிது நாம் உற்று நோக்கினால்
2.அந்த வேதனையான உணர்வை நுகர்ந்து விடுகின்றோம். (வேதனை என்பது விஷமான உணர்வு)

அந்த விஷத்தின் தன்மை நமக்குள் வளர்ந்த பின் சுவையாகச் சாப்பிட்ட உயர்ந்த சத்தையும் இது கெடுக்கின்றது. கெடுத்த பின் நம் உடல் நலிகின்றது. நலிந்த பின் மீண்டும் அந்த உயர்தர உணவைச் சாப்பிட முடிகிறதா...? முடியவில்லை...!

இருந்தாலும் சாப்பிடும் ஆசையை வளர்த்து அப்புறம் அந்த எண்ணத்தின் ஆசைகள் வளர்ந்து விட்டால் நாம் எதை சமைத்து ரசித்துச் சாப்பிட்டோமோ
1.உதாரணமாக உயிரினங்களை (ஆடு மீன் கோழி...) எதை அதிகமாக நேசித்துச் சாப்பிட்டுப் பழகினோமோ
2.அந்த எண்ணங்கள் வந்தபின் உடலை விட்டுச் சென்றால் அந்த உடலுக்குள் தான் நாம் போகின்றோம்.

ஆகவே நாம் எவ்வளவு தான் செல்வம் சேர்த்து வைத்து இருந்தாலும் இந்தச் செல்வம் நமக்குச் சொந்தமல்ல. இந்த உடலும் நமக்குச் சொந்தமல்ல.

ஆனால் இன்று நாம் சொந்தம் கொண்டாடும் இந்த உடலை வைத்துத் தான்
1.நல்ல குணங்களை - அருள் மகரிஷிகள் அவர்கள் எடுத்து ஒளியாக மாற்றிய உணர்வினை
2.நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது தான் நமக்கு அழியாச் சொத்து. இதைப் பெற்றால் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் அழியாத நிலைகள் கொண்டு வேகா நிலை பெறலாம். ஒளியின் சரீரமாக என்றுமே பேரானந்த பெரு வாழ்க்கை வாழ முடியும்.

இல்லை... இன்றைய வாழ்க்கை தான் பிரதானமானது...! நாளை நடப்பதை யார் அறியப் போகிறார்கள்...? என்றால் அதன் வழியிலேயே செல்லலாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய மெய் வழியை உங்களுக்குக் காட்டுகின்றோம். அதை வளர்த்தால் மகரிஷிகள் ஈர்ப்பு வட்டத்தில் இணையலாம்.