ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 10, 2019

நாத விந்துகள் ஆதி நமோ நமோ... வேத மந்திர ஸ்வரூபாய நமோ நமோ வெகு கோடி...!


உதாரணமாக ஆப்பிரிக்காவில் இருக்கக்கூடிய யானைக்கும் நம் நாட்டில் இருக்கக்கூடிய யானைக்கும் வித்தியாசம் இருக்கும். அதனுடைய தலை சிறுத்தும் காது பெருத்தும் இருக்கும் பார்வையும் வித்தியாசமாக இருக்கும்.

நம் நாட்டில் உள்ள யானைகள் காது சிறுத்தும் தலை பெருத்தும் தும்பிக்கை பெருத்தும் இருக்கும். இதற்குண்டான ஞானம் அதற்கில்லை. இது மனிதனுக்குண்டான ஒத்த நிலைகளில் வரும்.

நம் நாட்டிலே மாவுத்தன் யானையிடம் எப்படிப் பழகிக் கொள்கிறார்கள்...? தன் உடலில் உள்ல வியர்வையைத் தேய்த்து யானைக்கு உணவுடன் கலந்து கொடுத்து விடுவான். கொடுத்தவுடனே இவனுடைய மணத்தை நுகர்ந்து இவனை ஒத்து வரும். இவன் சொல்வதைக் கேட்கும்.

யானையிடம் பழகியவன் அந்த யானை வாசனையை இவன் நுகர்ந்திருந்தான் என்றால் அடுத்த யானையிடம் போனால் இது விடும். யானையிடம் பழகாது போனான் என்றால் இது டப் என்று தட்டி எரிந்து விடும். இந்த வாசனையை அது கண்டு கொள்ளக்கூடிய நிலைகள் நிறைய இருக்கிறது.

ஒரு யானை மாவுத்தன் இன்னொரு யானையிடம் போகலாம். யானை மாவுத்தன் அல்லாது நீங்கள் போனீர்கள் என்றால் உடனே அடையாளம் கண்டு விடும். தட்டி விடும். எல்லாம் இந்த உணர்வினுடைய இயக்கங்கள்.

அதே போல மொழிவாரியாகப் பேசக்கூடிய மாநிலங்கள் நம் நாட்டில் எத்தனையோ இருக்கிறது.
1.கன்னடம் பேசுகிறவர்கள் முகத்தைப் பாருங்கள் ஒரு வித்தியாசமான தோற்றம் வரும்.
2.மலையாளம் பேசுகிறவர்கள் முகத்தைப் பாருங்கள் அதிலே சில மாற்றங்கள் இருக்கும்.

தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டோம் என்றாலும் சென்னையில் தமிழ் பேசுகிறவர்களுக்கும் மதுரையில் பேசுகிற தமிழுக்கும் வித்தியாசம் இருக்கும்.

அதிலே மதுரையில் பேசுகிற தமிழுக்கும் திருநெல்வேலியில் பேசுகிற தமிழுக்கும் அந்த நாத சுருதிகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் முகங்களைப் பார்த்தாலும் அந்த வித்தியாசம் தெரியும்.

நீங்கள் தெற்கத்திக்காரரா..? மதுரைக்காரரா...? தஞ்சாவூர்க்காரரா...? என்று கேட்டு கொள்ளலாம். ஆள் முகத்தைப் பார்த்தே இந்த ஊர்க்காரர் என்று சொல்லிவிடலாம். சொல்வது அர்த்தம் அல்லவா...?

நீங்கள் நல்ல குணத்துடன் இருக்கின்றீர்கள். சண்டை போடுகிறவர்களைக் கூர்மையாகப் பார்க்கின்றீர்கள். இந்த உணர்வு நல்ல உணர்வுடன் சேர்ந்து விட்டது என்றால் என்ன செய்கின்றது...?
1.அந்த சண்டை போடுகிறவர்கள் முகம் எப்படி இருக்கிறதோ
2.அதேபோல உங்கள் முகத்தினுடைய  மாற்றமே  வரும். பார்க்கலாம்.
3.ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் உணர்வின் ஒலிகளுக்கொப்ப
4.அந்தத் தசைகளின் அமைப்பும் கண் விழியின் பார்வைகளும் முகத்தின் தோற்றங்களும் இருக்கும்.
5.இதெல்லாம் உணர்வின் ஒலி அலைகளின் இயக்கங்கள்.

ஆக இயற்கையின் உருமாற்றங்கள் எப்படியெல்லாம் நிகழ்கிறது என்ற இந்தப் பொது விதிகளை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாத விந்துகள் ஆதி நமோ நமோ...
வேத மந்திர ஸ்வரூபாய நமோ நமோ...
வெகு கோடி...! என்று அருணகிரிநாதர் இதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

நாம் எடுத்துக் கொண்ட “ஆதி…” யின் சக்தி நம் உணர்வாக நமக்குள் சேர்கின்றது. அதாவது ஆதியிலே தோன்றிய அந்த உணர்வின் ஒலிகளைச் சுவாசிக்கும் போது உடலாகச் சேர்த்துக் கொள்கிறோம்.

வேத மந்திர சொரூபாய… நமோ நமோ…, வேகு கோடி… சுவாசிக்கும் உணர்வுகளுக்கொப்ப பல பல ரூபமாக… வெகு கோடியாக… ஆகின்றது. சுவாசிக்கும் நிலைகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே வெகு கோடி என்ற இந்தத் தத்துவத்தை அவர் வெளிப்படுத்துகின்றார்.

நாம் கவர்ந்து வெளிப்படுத்தும் உணர்வின் ஒலிகளுக்கொப்பத்தான் நம் உருவத்தின் மாற்றம் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்...!

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் அடிக்கடி எடுத்துக் கொண்டே வந்தால் அதற்குத் தக்க நமக்குள் மாற்றங்களாகி ஒளியின் ரூபமாக நம்மை மாற்றும்...!