ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2019

தெய்வத்தைக் காவல் காக்கும் தெய்வங்கள்...!


துவாரபாலகர்கள் என்றால் நாம் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பகுதி ஆலயங்களில் முன்னாடி இது இருக்கும்.

துவாரபாலகர்களைக் காவல் தெய்வம் (வாயிலைக் காப்போர்) என்றும் சொல்வார்கள். சந்நிதானத்தில் இருக்கும் கடவுளைப் பார்க்கச் செல்லும் முன் துவாரபாலகர்களைக் கடந்து தான் செல்ல முடியும்.

1.நம் உயிரே ஈசனாக கடவுளாக உள் நின்று இயக்குகிறது.
2.அந்த உயிர் இருக்கும் இடம் நம் புருவ மத்தி.
3.அந்தப் புருவ மத்திக்குக் கீழே தான் நம் மூக்கின் இரு துவாரங்களும் இருக்கின்றது.. (துவாரபாலகர்கள்...!)
4.அதாவது... இரண்டு துவாரங்கள் (துவார) வழியாக நாம் சுவாசிப்பதை எல்லாம்
5.நம உயிர் அணுவாக உருவாக்கும் கருவாக (பாலகர்கள்) உடலுக்குள் மாற்றிக் கொண்டே இருக்கின்றது என்று
6.நாம் புரிந்து கொள்ள ஞானிகள் அவ்வாறு காட்டுகின்றார்கள்.

நாம் சுவாசிக்கும் உணர்வலைகள் (காற்று) மூக்கின் வழி கூடி புருவ மத்தியில் பட்டால் தான் எண்ணம்... உணர்வு... உணர்ச்சி... சொல்... செயல்... எல்லாமே இயங்கும்...!

சுவாசிக்கவில்லை என்றால் உயிரிலே எதுவும் படாது. உயிரிலே படவில்லை என்றால் எதையுமே நாம் அறியவோ உணரவோ முடியாது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம்முடைய சுவாசத்தை... அதாவது துவாரபாலகர்களை நாம் கொஞ்சமாவது எண்ணிப் பார்க்கின்றோமோ...? என்றால் இல்லை...!

ஏனென்றால் நம்முடைய சகஜ வாழ்க்கையில்
1.கண்களில் பார்ப்பதையும்
2.காதில் கேட்பதையும்
3.வாயில் சுவையை அறிவதையும்
4.உடலின் உணர்ச்சிகளையும் பரிசீலனை செய்கின்றோம்.
5.அதைச் சரி செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து கூடுமானவரை சரியாக்குகிறோம்.

ஆனால் இலவசமாக நாம் சுவாசிக்கும் இந்தக் காற்றைப் பற்றி துவாரபாலகர்களைச் சிறிது கூடக் கவலைப்படுவதில்லை. எது ஒன்று இலவசமாகக் கிடைக்கின்றதோ... அதை நாம் சிறிதும் சட்டை செய்ய மாட்டோம்... இது தான் நம்முடைய் வழக்கம்.

கெட்ட வாசனை ஏதாவது வந்தால் தான் என்ன...? என்று பார்ப்போம். மற்றபடி நாம் சுவாசிக்கும் சுவாசத்தில் எது வந்தாலும் எல்லாவற்றுக்கும் அனுமதி கொடுத்துவிடுகின்றோம்.

நம்முடைய சுவாசத்தின் வழி நல்ல உணர்வுகள் உடலுக்குள் செல்கிறதா... அல்லது தீமையான உணர்வுகள் செல்கிறதா...? என்று பரிசீலிப்பதும் இல்லை...! அதைப் பற்றிய சிந்தனையும் இல்லை.

நம் மூக்கின் வழியாகச் செல்லும் அந்த உணர்வுகளைத் தடுத்து நிறுத்தி உயரிய சுவாசமாக நல்ல உணர்வாக ஈசன் வீற்றிருக்கும் உடலான ஆலயத்திற்குள் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் காவல் தெய்வமாக வைத்துக் காட்டியுள்ளார்கள்.

1.ஏனென்றால் மனிதனுடைய ஆணிவேரே இந்தச் சுவாசம் தான்.
2.நம்முடைய அந்தச் சுவாசத்தைச் சரி செய்தாலே
3.வாழ்க்கையில் வரும் எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம்.

அத்தகைய சுவாசத்தைச் சரி செய்யத்தான் நம் குருநாதர் உயிர் வழி சுவாசம் என்று ஆத்ம சுத்திப் பயிற்சியைக் கொடுத்துள்ளார்.

உயிர் வழி சுவாசம் என்றால்
1.நமக்குள் ஈசன் இருக்கின்றான்... நம்மை அவன் தான் இயக்குகின்றான்... அவனுக்குள் எந்த அசுத்தத்தையும் கொடுக்கவே கூடாது..! என்ற எண்ணம் கொண்டு
2.புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரிடமே கண்ணின் நினைவைச் செலுத்தி அதை வேண்டி (ஏங்கி)
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
4.அந்த மகரிஷிகளீன் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்று
6.இத்தகைய உணர்வுகளைத் திரும்பத் திரும்பச் சுவாசித்தால் இதுவே உயரிய சுவாசமாகும்... “உயிர் வழி சுவாசமாகும்...!”

இதனால் நம் ஈசனும் மகிழ்ச்சி அடைகின்றான். இந்த உடலான சிவமும் மகிழ்ச்சி அடைகின்றான். நாம் பார்க்கும் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

ஆண்டவனுக்குச் செய்யும் பணி என்பது இது தான்.

இப்படிப்பட்ட சேவையை நம் உயிரான ஆண்டவனுக்குச் செய்தால் அவனுடன் ஐக்கியமாகலாம். அவனுடன் ஒன்றிடலாம். அவனைப் போன்றே அழியாத நிலை பெறலாம்.

ஏனென்றால் உயிருக்கு என்றுமே அழிவில்லை. உடல் தான் அழிகிறது. உயிர் போய்விட்டது என்று நாம் சாதாரணமாக விட்டுவிடுகின்றோம்.
1.உடலைக் காக்கத்தான் ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றோமே தவிர
2.உயிரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை.

ஆனால் மெய் ஞானிகள் உயிருடன் ஒன்றியே இன்றும் விண்ணிலே ஒளியாகப் பேரொளியாக ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் சென்ற வழியில் நாமும் நம்முடைய சுவாசத்தைச் (துவாரபாலகர்களை) சீர்படுத்தினால் நிச்சயம் அவர்கள் அடைந்த எல்லையை அடையலாம்.

ஆலயங்களில் அதனால் தான் உள்ளே இருக்கும் அந்தத் தெய்வத்தையே காக்கும் தெய்வமாகக் காவல் தெய்வமாகக் காட்டி நாம் எல்லாம் எளிதில் புரிந்து கொள்ளும்படி செய்தார்கள்.

இனியாவது அந்த ஞானிகள் சொன்ன முறைப்படி உயிரான ஈசனுக்கு உயர்ந்த சுவாசத்தைக் கொடுப்போம். உயிருடன் ஒன்றுவோம்...!

ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா...!