சமையல் செய்யும் பொழுது எத்தனையோ சுவையான பதார்த்தங்களைச் செய்கிறோம். ஒரு மாவை
எடுத்து அதிலே வெல்லத்தைப் போட்டு வடையாகச் சுட்டால் அது ஒரு ருசி. அதே சமயத்தில் சீனியைப்
போட்டால் அப்போது வேறு ருசி.
அதே மாதிரி தோசையைச் சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். எத்தனை வகையில் தோசையைச்
சுடுகிறோம்...?
லேசாக எண்ணையைத் தடவித் தோசையைச் சுட்டால் அது ஒரு ருசி. அதிலேயே எண்ணையை அதிகமாக
விட்டுச் சுட்டால் அது ஒரு ருசி. அது மொந்தையாக ஊற்றி எண்ணையை லேசாகத் தடவிச் சுட்டால்
அது ருசி.
ஒரே மாவிலே எத்தனை ருசி வருகிறது...? அந்தந்த எண்ணெய்ப் பருவங்கள் அதனுடைய தாக்கும்
உணர்வு கொண்டு அந்தச் சுவையின் தன்மை மாறுகிறது.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இதைப் போன்று தான் எத்தனையோ
விதமான குணங்களின் கலவைகளை எடுத்துச் செயல்படுத்திக் கொண்டேயிருக்கின்றோம்.
1.இருந்தாலும் அதிலே சுவை கெட்டு விட்டால் என்ன ஆகிறது...?
2.மகிழ்ச்சி வருகிறதா இல்லை...!
ஆகவே இரக்கம் அன்பு பண்பு பாசம் என்ற உணர்வுகள் கொண்டு துன்பப்படுவோரை நாம் நுகரப்படும்
போது அந்த உணர்வின் தன்மை நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை எல்லம் அடக்கி விடுகின்றது.
சுவையற்றதாக்கி விடுகிறது...!
ஐயோ பாவமே...! என்று அவனை நம்முடன் இணைத்துக் கொள்கின்றோம். பிரிகிறோமா என்றால்
இல்லை. ஆகவே அந்த விஷத்தின் தன்மை நமக்குள் அரவணைத்தோம் என்றால் என்ன நடக்கும்...?
பாம்புக்குப் பாலை வைத்து எவ்வளவு நாள் தான் வளர்த்தாலும் பால் கிடைக்கவில்லை என்றால்
நம்மைச் சீறித் தாக்கத்தான் செய்யும். அதைப் போல் எத்தனை பேருக்கு நீங்கள் இரக்கப்பட்டு
உதவி செய்கின்றீர்களோ அந்த வேதனை எல்லாம் நமக்குள் வந்து விடும்.
1.எத்தனை பேருக்கு உதவி செய்தாலும் அந்த உதவி செய்தது பெரிதல்ல.
2.அந்த வேதனை நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம்.
ஏனென்றால் வேதனைப்படுகிறார்கள் என்ற உணர்வைச் சேர்த்தபின் நம் நல்ல குணங்களுக்குள்
அது இணைந்து விடுகிறது. அப்போது அவன் உடலில் விளைந்த தீமைகள் நமக்குள்ளும் விளையும்.
நுகர்ந்து பார்த்த பின் தான் தக்க உபகாரத்தைச் செய்கின்றோம். மனிதன் அது செய்யத்தான்
வேண்டும். இதற்காக வேண்டி நோயாளியையோ வேதனைப்படுவோரையோ நான் பார்க்க மாட்டேன்... உதவி
எல்லாம் செய்யக் கூடாது...! என்று சொல்ல முடியாது.
நாம் பார்த்தாலும்... சரியான உதவி செய்தாலும் அடுத்த நிமிடம் என்ன செய்ய வேண்டும்...?
1.நமக்குள் அந்தத் தீமைகள் புகாது தடுத்து நிறுத்தி
2.அந்த உணர்வுடன் அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்து அதை அடக்க வேண்டும்.
நாம் பார்த்த மாத்திரத்திலேயே நமக்குள் செயல்படும் அந்த நிலையைத் தடுப்பதற்கு அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்.. அது எங்கள் உடல் முழுவதும்
படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று நாம்
இதை எடுத்து அதைத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும்.
பின் துன்பப்படுவோர் அனைவரும் அந்தத் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
ஈஸ்வரா...!
1.அது அவர்கள் உடலிலே படர வேண்டும்.
2.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ வேண்டும்.
4.அவர்கள் அருள் ஞானம் பெற்று அருள் வழியில் வாழ வேண்டும்
5.அவர்கள் அறியாத நிலை இருளை அகற்றும் சக்தி பெற வேண்டும் என்று
6.இத்தகைய உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் அந்தத் தீமைகளை மாற்றிப் பரிசுத்தப்படுத்துகின்றது.
நமக்குள் விளைந்த இந்த வலிமையான உணர்வுகளை அவனிடம் சொல்லாகச் சொல்லப்படும் போது
அவன் காதில் கேட்கும் போது நம்மிடம் உருவான அருள் சக்தியை அவன் பார்க்கிறான்.
அப்பொழுது நீ இந்த மாதிரித் துருவ நட்சத்திரத்தை நினையப்பா... உனக்கு நல்லாகிவிடும்...!
என்று சொல்ல வேண்டும்.
1.அந்த எண்ணத்தை அவன் கொண்டு வரப்படும் போது
2.அவன் உடலிலே வந்த தீமையைத் தடுத்து
3.அவனும் நினைவை அங்கே துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு போகிறான்.
இப்படி நீங்கள் சொல்லாதபடி அவனுக்கு உதவிகளைச் செய்தீர்கள் என்றால் அவன் என்ன நினைப்பான்...?
மகராசன்...! எனக்குத் தக்க நேரத்தில் இத்தனை உதவிகளைச் செய்தார்...! என்று உங்களை நல்லவராக
எண்ணுவான்.
“மகராசன்...!” என்று நம்மைச் சொன்ன பின் அப்படிக் கலந்த உணர்வு அவனுக்குள் விளைந்து
கடைசியில் இறந்தான் என்றால் அந்த ஆன்மா நேரே இங்கே வந்துவிடும். உதவி செய்த உடலுக்குத்
தான் நன்றிக் கடனாக வரும்.
வந்த பின் அவன் உடலில் வந்த தீமைகளையும் நோய்களையும் தான் நமக்குள்ளும் உருவாக்கும்..
இதிலிருந்து மீளவேண்டுமா இல்லையா...?
ஆகவே தீமைகள் நமக்குள் உருவாகாதபடி அருள் ஞானத்தின் உணர்வை நமக்குள் உருவாக்கத்
தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை
நமக்குள் செலுத்திக் கொண்டேயிருந்தால் இது நமக்குப் பாதுகாப்பாக வரும்.
ஏனென்றால் இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல... செல்வமும் சொந்தமல்ல...! என்று திரும்பத்
திரும்பச் சொல்கிறோம்.
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வை உயிருடன் ஒன்றி நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டால்
2.அது என்றும் நமக்குள் இணைந்தே வாழுகின்றது
3.பேரின்ப நிலையை என்றும் ஊட்டிக் கொண்டே இருக்கும்.
உங்கள் அனுபவத்தில் நிச்சயம் இதைப் பார்க்கலாம்... உணரலாம்...!