ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 20, 2019

இலக்கு இல்லாதோர் விளக்கு இல்லாதோர்…!


மனித வாழ்க்கையின் எல்லை எது…? என்று அறிய முயற்சிக்க முடியாதபடி மனம் போகும் (நம் எண்ணங்கள்) வழியில் எல்லாம் நாம் சென்று கொண்டிருந்தோம் என்றால் நாளை என்ன ஆகும்…?

ஒரு நெல் பயிரை விளைய வைக்க இவ்வளவு காலம் என்று உள்ளது. குறைத்தாலும் விளையாது… கூட்டினாலும் பலன் இல்லை…! அது போல்
1.மனிதனின் பிறப்பின் பலனைப் பற்றிச் சிந்திக்காமலும்
2.அந்தப் பலனை  அடையக்கூடியதாக வாழ்க்கை வாழாமலும்
3.மனிதனாகப் பிறந்து எத்தனை வருடம் வாழ்ந்தாலும் எப்படி வாழ்ந்தாலும்
4.அது “இலக்கு இல்லாதோர்... விளக்கு இல்லாதோர்…!” போன்ற நிலை தான்.

ஆனால் புறத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒரு இலக்கை வைத்துத்தான் செயல்படுகின்றோம். அப்படி இல்லை…! என்று யாரும் சொல்ல முடியாது. அதுவே அகத்திற்குள் என்றால் அதில் எந்த இலக்கும் இருப்பதில்லை.

இருக்கும் வரை எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும்… இறந்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியும்...? நாம் என்ன பார்க்கப் போகின்றோமோ…? என்று அதை மிகவும் சாதாரணமாக நினைக்கின்றோம்.
1.ஆக இந்த உடலில் வாழ்வதற்கு நமக்கு “இலக்கு…” தேவைப்படுகிறது.
2.ஆனால் உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலைக்கு இலக்கு தேவையில்லை.

மகாபாரதத்தில் துரோணர் வில் வித்தையைக் கற்றுக் கொடுக்கும்போது துரோணரின் மகனான அசுவத்தாமன் வந்து… “எனக்கு வித்தைகளைக் கற்றுக் கொடுக்காமல் அர்ச்சுனனுக்கு அதிகமான வித்தைகளைக் கற்றுக் கொடுக்கிறீர்கள்… அது ஏன்…? என்று துரோணரிடம் கேட்பான்.

அதற்காக அவர் ஒரு செயல் மூலமாக அவனுக்கு உணர்த்துவார். மரத்தில் ஒரு கிளி பொம்மையை வைத்து பாண்டவர்கள் கௌரவர்கள் எல்லோரையும் அழைத்து “அங்கே என்ன தெரிகிறது…?” என்று கேட்பார்.

ஒவ்வொருவரும் “மரம் தெரிகிறது…! கிளை ஆடுகிறது…! கிளி இருக்கிறது…! என்று என்னென்னமோ சொல்வார்கள்.
1.அர்ச்சுனன் ஒருவன் மட்டும் “எனக்குக் கண் தெரிகிறது…!” என்பான் (கிளியின் கண்).
2.அர்ச்சுனன் என்றால் கூர்மை… அந்த இலக்கு…!

அந்தக் கூர்மை சரியாக இருப்பதால் தான் “அவனுக்கு அதிகமாக வித்தையைக் கற்றுக் கொடுக்கிறேன்…!” என்று துரோணர் அசுவத்தாமனுக்கு விளக்குவார்.

ஆகவே நம்முடைய கூர்மை உடல் பெறக் கூடியதில் சிந்தனை இருக்குமானால் அந்த வித்தைகளைத் தான் நாம் கற்றுக் கொண்டே இருப்போம். மீண்டும் மீண்டும் இந்தப் பூமிக்குள் பிறந்து பல பல உடல்கள் எடுத்து ஒவ்வொரு சரீரத்திலும் பல வேதனைகளைப் பட்டுக் கொண்டே இருக்க முடியும்.

மாறாக நம்முடைய கூர்மை நம்மைப் போல் மனிதர்களாக வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையில் உணர்ந்து ஒளியாக விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் பால் இருக்குமானால்
1.அவர்கள் அடைந்த பிறவியில்லா நிலை என்ற
2.என்றுமே அழியாத ஒளி உடல் பெறலாம்.
3.நம்முடைய எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலமாகத் தான் இருக்க வேண்டும்…!