இன்றுள்ள மனிதர்களுக்கு ஆயுள் நிலை அதிகரித்துள்ளது என்கிறார்கள். அறிவு நிலையும்
ஆயுள் நிலையும் அவனுக்குள் இருக்கும் ஆண்டவன் அளித்த பொக்கிஷங்கள்.
அறிவினால் ஆயுளை வளர்க்கின்றான் இக்கலியில் உள்ள மனிதன்.
1.அவன் எண்ணம் அவன் வைத்தியத்தில் ஆயுள் வந்தது என்று.
2.இல்லையப்பா... அவன் எண்ணத்தில் வந்ததப்பா ஆயுள் நிலை
3.ஜீவ எண்ணத்தில் வந்ததப்பா அவ்வாயுள் நிலை.
மனித உடலில் ஆசையுள்ளவன்...
1.தான் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் எண்ணுகின்றான் அவ்வீசனை.
2.அவன் எண்ணத்தின் வடிவினிலே அவனுள் இருக்கும் ஈசனே அவனைச் சுற்றுகின்றான்.
3.அவ்வெண்ணத்தின் தன்மையினால் அவனின் ஜீவனும் வாழ்கின்றது.
எண்ணத்தைக் குறுக்கிட்டு வாழ்ந்து என்ன பயன் இருந்து என்ன புண்ணியம் வரும்...?
வியாதியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவ்வெண்ணத்திலேயே சுருங்கி விடுகின்றான். அவன்
உடலில் உள்ள உறுப்புகளும் உணர்வுகளும் இவ்வெண்ணத்தினுள்ளேயே சுருங்கி விடுகின்றன.
1.ஆயுள் முடிந்து இறக்கின்றான்.. என்பதல்ல.
2.அவனின் எண்ணம் சுருங்கி மனம் சுருங்கிப் பெரும் பயத்தில் உள்ளவனிடம்
3.சோர்வு நிலையில் பிரிந்து செல்வதுதான் அவ்வாவியின் நிலை.
வாழ்ந்திட வேண்டும் என்று ஆசையுள்ளவன் வாழ்கின்றான் பல நாட்கள். உயிர் பிரிவதெல்லாம்
காலன் பிரித்துச் செல்வதல்ல. இவனின் எண்ணத்தாலும் சோர்வாலும் சோகையினாலும் வருவதே அவ்வியாதிகள்.
அவ்வியாதியில் உள்ளவன் எண்ணும் எண்ணத்திலேயே தன் உயிர் பிரிந்துவிடும் என்ற பயத்திலேயே
பிரிந்து செல்வதுதான் அவ்வாவி.
எந்நிலையில் உள்ளவனும் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் தன்னுள் இருக்கும் ஈசனின்
சக்தியை ஒரு நிலைப்படுத்தி வேண்டுபவன் எல்லாம் வாழ்கின்றான்.
1.மருந்தும் மாயமும் அல்ல பல நாட்கள் வாழ்வதெல்லாம்.
2.பிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஆண்டவனிட்ட பிச்சை என்கின்றோம்.. இயற்கை என்கின்றோம்...!
3.எதுவப்பா பிச்சை...? எதுவப்பா இயற்கை...?
அணுவின் பாடத்தையும் ஆவியின் பாடத்தையும் எண்ணிப் பார்த்தால் பிறப்பு இறப்பு எல்லா
இரகசியங்களும் புரிந்துவிடும். பிறப்பு இறப்பு என்பதைப் புரிந்து கொண்டீர்களா...?
தன் மன நிலையில் இருந்துதான் மடிகின்றான்... வாழ்கின்றான் இம்மனிதன்...!
ஜெபித்திடுவேன்... ஜெபித்திடுவேன்...!
ஜெப அருளைத் தந்திடுவாய்
ஜெபமெல்லாம் ஜெயித்திடவே
ஜெப அருளைத் தந்திடுவாய்
ஜெபித்திடுவேன் ஈஸ்வரனை
ஜெபித்திடுவேன் அவன் சக்தியை
ஜெபித்திடுவேன் ஓ...ம் என்ற நாதத்தில்
ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் “ஓ...ம் ஈஸ்வரா...!
ஜெபித்த நிலையில் நீ வந்து... ஜெபமாக்கித் தந்திடுவாய்... ஈஸ்வரா.......!