ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 6, 2016

பணச் செல்வம் இருந்தாலும் இல்லையென்றாலும் அருள் செல்வத்தைக் கூட்டினால் தான் துன்பத்திலிருந்து மீள முடியும்

மனிதனானபின் பார்க்கின்றோம். இன்று எத்தனையோ பேரிடம் செல்வம் இருக்கின்றது. அப்படிச் செல்வத்துடன் இருப்போர் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்?

செல்வச் செழிப்புடன் இருக்கும் குடும்பங்களில் நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு குடும்பங்களிலும் எடுத்துக் கொண்டால் பல துயரங்கள், பல வேதனைகள் பல சலிப்புகள், பல சங்கடங்கள் இவை அனைத்தும் உண்டு.

இதற்கெல்லாம் காரணம் மனிதனுடன் ஒன்றி வாழும்போது சில சந்தர்ப்பங்களில் “எனக்கு இப்படித் தீங்கு செய்தான்” என்ற நிலைகளில் உருவாக்கப்படும் பொழுது இறக்கப்படும் பொழுது சாபமிட்டுச் செல்லும் நிலை ஆகின்றது.

“இந்தக் குடும்பம் நாசமாகப் போகவேண்டும், அதன் தொடர் கொண்ட உணர்வுகளில் பதிவாக்கிவிட்டால் இவர் இறந்தபின் இதே உணர்வின் தன்மை அவர் உடலிலிருந்து வெளி வந்தபின் உணர்வுகள் சாப அலைகளாகப் படரப்பட்டுவிடுகின்றது.

அந்தச் சாப அலைகள் இவருக்குள்ளும் தொடர்ந்து அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் நல்ல குணங்கள் எது இருப்பினும் அதைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது.

ஆக, செல்வம் நிறைய இருக்கும். செல்வத்தை வளர்த்துக் கொண்டாலும் மன நிம்மதி இருக்காது. மன நிம்மதியற்ற நிலைகளில் வேதனையும் வெறுப்பும் சலிப்பும் சங்கடத்தையும் வளர்த்துக் கொள்வார்கள்.

இந்த உணர்வின் தன்மை அதிகரித்தால் கடைசியில் உடல் நலிந்து இதன் உணர்வுக்கொப்ப செல்வத்தைப் பாதுகாக்கும் செயலையே இழந்துவிடுகின்றோம்.

ஆனால், இந்த உடலை விட்டுச் சென்றபின் செல்வம் கூட வருவதில்லை.

இவர் எடுத்துக் கொண்ட வேதனை இவர் கூட வந்து எதன் உணர்வை நுகர்ந்தனரோ அதற்குத்தக்கவாறு வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால் விஷப் பாம்பாகவும், சிந்தனையில்லாது தாக்கி உணவாக எடுக்கும் புலியாகவும் நரியாகவும் நாயாகவும் உயிர் மாற்றிவிடுகின்றது.

இதன் கணக்கின் பிரகாரம் மாற்றிவிடுகின்றது.

ஆனால், செல்வம் இருப்பினும் செல்வம் இல்லாது இருப்பினும் அருள் ஞானச் செல்வத்தை நமக்குள் கூட்டி துன்பம் வரும் பொழுது அருள் உணர்வின் தன்மையைக் கூட்டி நம்மைப் பாதுகாத்தல் வேண்டும்.

செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றாலும் ஞானம் வேண்டும். ஞானம் இல்லையென்றால் வேதனை வெறுப்பு என்று வளர்ந்து தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் நிலையும் இழந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதன் நாம் மீள வேண்டும் என்றால் அருள் ஞானத்தைப் பெறவேண்டும். அருள் ஞானத்தைப் பெருக்கச் செய்யும் நிலையாக அருள் ஞான உணர்வுகள் உங்களுக்குள் பதிவு செய்யப்படுகின்றது.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை செவி வழி உந்தி கண் வழி ஈர்த்து மூக்கு வழி நுகரச் செய்து உயிரிலே மோதச் செய்து உணர்வின் ஒளி அலைகளைப் பெறச் செய்து நுகர்ந்த உணர்வுகளை இரத்தத்தில் கலக்கச் செய்து அந்த உணர்வின் தன்மையை அணுவாக மாற்றச் செய்யும் நிலைக்கே இப்பொழுது யாம் உபதேசிக்கும் நிலைகள்.

உங்கள் உடலுக்குள் பல பகைமை உணர்வை நுகர்ந்தாலும் நல்ல குணங்களை மறைத்திடும் சித்திரைகளை, சிறு திரைகளை நீக்கிடல் வேண்டும். பூரண நிலா எப்படி இருக்கின்றதோ உங்கள் நல்ல மனதைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இந்த மனிதனின் வாழ்க்கையில் நமக்குள் குறைகளையோ, சலிப்போ, வெறுப்போ, வேதனைகளோ சங்கடமோ, பயமோ, ஆத்திரமோ கொதித்தெழும் உணர்வுகளையோ நுகர்ந்தால் இவை நம் நல்ல குணங்களை மறைத்துவிடுகின்றது.

இந்தத் திரைகளை நாம் நீக்கிப் பழகுதல் வேண்டும். அப்படி நீக்கினால் நம் நல்ல குணங்களின் தன்மை தெளிவாகின்றது. ஒவ்வொரு குணங்களும் தூய்மையாக்கப்படுகின்றது.

உயிரின் உணர்வு கொண்டு எந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கின்றோமோ இந்த ஒளியின் சரீரமாக என்றுமே அழியாச் சரீரமாக அனைவரும் பெற முடியும்.  

பூரண நிலாவக இருந்த நாம் அது தேய்பிறையாக ஆகின்றதோ இதைப் போல மனிதனான பின் பிறருடைய தீமைகளைக் கேட்டறிந்து கேட்டறிந்து நமக்குள் அறிந்திடும் அறிவின் தன்மை மங்கி மங்கி நமக்குள் அது குறைந்து குறைந்து அடுத்து மனிதப் பிறவியில்லாத நிலைகள் கொண்டு தேய்பிறையான நிலைகளை மனித உருவையே மாற்றிவிடும் நம் உயிர்.

முழுமையடைந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற்றோம் என்றால் நிச்சயம் நாம் என்றும் ஒளியின் சுடராக நிலைத்திருக்க முடியும்.