நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு அந்த நினைவினை நாம் அடிக்கடி எடுத்துப் பழகிக் கொள்ள
வேண்டும்.
கஷ்டப்படுவோரையோ, வேதனைப்படுவோரையோ பார்க்க நேர்ந்தால், அதே மாதிரி நண்பர்கள்
பழகியவர்கள் உடலை விட்டுப் பிரியும் பொழுதோ அந்த நேரமெல்லாம் நாம் அதைத் தடுக்க ஈஸ்வரா
என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து ஏங்கித் தியானிக்க வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று
உயிர் வழி சுவாசித்து, நம் உடலுக்குள் கண்ணின் நினைவச் செலுத்தி நம் உடலிலுள்ள
அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று உள்முகமாகப் பாய்ச்சப்படும்போது அந்தத்
துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நம் இரத்தத்தில் பெருகுகின்றது.
இப்படிச் செய்யும்போது நம் உடலிலுள்ள அணுக்களுக்கும் அதைக் கொஞ்சம் கொஞ்சமாகச்
சேர்த்து வருகின்றோம்.
நாம் எத்தனை கோடித் தவறுகளைப் பார்த்தாலும் அந்தந்தச் சமயத்தில் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று உள் செலுத்தி நம் உடலுக்குள் வரும் பொழுது தூய்மைப்படுத்தி
இந்த உணர்வை நாம் வலு சேர்த்துக் கொண்டு வர வேண்டும்.
இதைத்தான் இராமேஸ்வரத்தைக் காட்டியுள்ளார்கள். நாம் பல உடல்களைக் கொன்று தின்று
இங்கே வந்தாலும் கோடிக்கரையாக வந்தது தனுசு கோடி.
நாம் தீமை என்று தெரிந்த பின் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதைத்
தாக்கி அதன் வலுவை இழக்கச் செய்ய வேண்டும். அது தான் விஷ்ணு தனுசு. உயிரைப் போல
நம் உடலின் அணுக்களை உருவாக்க வேண்டும்.
எத்தனை கோடி விதமான உணர்வுகள் வந்தாலும் அத்தனையும் மாற்றியமைத்தது துருவ
நட்சத்திரம். அதன் உணர்வை அவ்வப்பொழுது நமக்குள் எடுத்து இந்தத் தீமைகளை நீக்கிடல்
வேண்டும்.
ரோட்டில் போகும் போது ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். அதைப்
பார்க்காமல் இருக்க முடியுமா?
அந்த நிமிடமே நம் கண்ணின் நினைவை ஈஸ்வரா என்று புருவ மத்தியில் வைத்து அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும், எங்கள் இரத்தங்களில்
கலக்க வேண்டும் உள் முகமாக இந்த வலுவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வலுவாகச் சேர்வதற்கு முன் அதைத் தடுத்து
நிறுத்திவிட்டு அந்த வேதனைப்படுபவருக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெறவேண்டும், அவர் உடல் நலமாக வேண்டும் நாம் எண்ணி அந்த உணர்வைப் பாய்ச்சிடல்
வேண்டும்.
அப்பொழுது அவன் உணர்வு நமக்குள் வராது.
அதே மாதிரி இரண்டு பேர் கொடூரமாகத் தவறு செய்கின்றனர் என்று வைத்துக்
கொள்வோம்.
அதைப் பார்த்தபின், அதைத் தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிப் புருவ மத்தியில் நம் உயிரான ஈசனிடம் வேண்டும்
பொழுது தவறின் உணர்வுகள் உட்புகாமல் தடுக்க முடிகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க
வேண்டும், உடல் முழுவதும் படரவேண்டும் என்ற உணர்வினைச் செலுத்திவிட்டால் உள்
புகுவதில்லை.
பின் அந்தத் தவறின் தன்மை நமக்குள் ஈர்க்காது ஒதுக்கிவிட்டு அவர்கள் இருவரும்
ஒன்றுபட்டு வாழும் தன்மையும் பண்புடன் வாழும் தன்மையும் பெறவேண்டும் என்று நாம்
விலகிவிட வேண்டும்.
ஏனென்றால் நாம் தவறைப் பார்க்காமல் இருக்க முடியாது. ஆனால், இந்த முறைப்படி
செய்துவிட்டால் அந்தத் தீமைகள் நமக்குள் வராது. நம்மை நாம் காத்துக் கொள்கின்றோம்.