ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2016

நம் எண்ணம் நம்மை எப்படி ஏமாற்றுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் - நடந்த நிகழ்ச்சி (அனுபவம்)

நான் (ஞானகுரு) சித்தான புதிதில் இது நடந்த சம்பவம். ஒரு கவுண்டர் சிலோனில் போய் கிறிஸ்து மதத்தில் சேர்ந்தவர். அவர் இங்கே பழனிக்கு வந்துவிட்டார்.

அப்பொழுது நான் இந்த ஆசனப் பயிற்சிகளை எல்லாம் செய்வேன். அவருக்கு ஒரு நோய் இருந்தது. அந்த ஆசனப் பயிற்சி மூலம் அவர் உடலிலுள்ள நோய்கள் நீங்கியது. அதிலிருந்து அவருக்கும் எமக்கும் பழக்கம்.

சித்தான புதிதில் இங்கே நம்மை அறியாமலேயே சில அற்புதங்கள் நடக்கின்றது. இங்கே வந்தவுடனே இதை அவர் உற்றுப் பார்த்தார். வயிற்று வலியோ மற்ற நோய்களோ இதுவெல்லாம் நீங்குகின்றது.

சர்ச்சுக்கு எதிர்புறம்தான் அவருடைய சொந்தக்காரரின் கடையில் தான் நான் சைக்கிள் கடை வைத்திருந்தேன். ஆகையினாலே அவர் வந்து என்னைச் சந்திக்க வருவார். அடிக்கடி பார்ப்பார்.

இருந்தாலும் அவர் இங்கே நடக்கக்கூடிய அற்புதங்களைப் பார்த்தாலும், "இயேசு செய்கின்ற மாதிரி நீங்கள் செய்கிறீர்களே.." என்று கூறுவார் இவர். இருந்தாலும் உங்களுக்கும் நமக்கும் ஒத்து வந்துவிட்டது.

நீங்கள் கடவுளே இல்லை என்ற நிலைகளும் நீங்கள் பொதுப்படையாகச் சொல்கிறீர்கள். அதனால் நான் உங்களை நான் பற்றிக் கொள்கிறேன் என்றார்.

சரி என்று நான் சொன்னேன்.

அவருக்கு வேண்டிய சொந்தக்காரர் ஒருவர் வாத நோயால் ரொம்ப அவதிப்பட்டு கேரளாவில் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்தார்கள்.

இருப்பினும் அங்கே அவருக்கு ரொம்ப மோசமாகி கண்கள் எல்லாம் நின்றுவிட்டது இனி பிழைக்க மாட்டார் என்று தூக்கிக் கொண்டு போகச் சொல்லிவிட்டனர்.

இந்த விவரம் தெரிந்தபின் இவர் என்ன செய்தார்? இந்தச் சாமியிடம் கொண்டு வந்தோம் என்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று இங்கே அழைத்து வந்துவிட்டார்.

அவர் கண்கள் ஓட்டமே நின்றுவிட்டது. மூச்சும் சரியாக வரவில்லை. இந்த நிலையில் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தவுடனே கொஞ்ச நேரம் குருநாதர் சொன்ன முறைப்படி சில எண்ணங்களை அவர்பால் பாய்ச்சினேன். அப்போது கண்களில் அசைவு தெரிந்தது.

எப்படி?

இங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் செல்கின்றனர். ஊமைகள் பேசுகின்றனர், வருபவர்களுக்கெல்லாம் அது நடக்கின்றது, இது நடக்கின்றது என்று இப்பொழுது விளம்பரம் பண்ணுகின்றார்கள் அல்லவா.

அந்த மாதிரி யாம் சித்தான புதிதில் சில அற்புதங்களை குருநாதர் திடீர் என்று ஏற்படுத்தப்பட்டதனால் அவரை இங்கே கொண்டு வருகிறார்கள்.

அப்பொழுது நான் ஒரு ரூமில் இருந்து கொண்டு அவரை வேறொரு ரூமில் போட்டுப் பூட்டிவிட்டு குருநாதர் சொன்ன வழி முறைப்படி செய்தேன்.

அவர் எழுந்து பூட்டிய கதவைத் தட்டி “என்னை ஏண்டா மூடிவிட்டீர்கள்..,? என்று கேட்கிறார். அப்பொழுது எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார். 

அதாவது முதலில் ஜீவன் வந்தது. அப்புறம் சிறுகச் சிறுக கை கால்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்தது. அது ஒரு மாதத்தில் நன்றாகி எல்லாம் செய்யத் தொடங்கிவிட்டார்.

உடல் நன்றாக ஆனவுடன் எங்கள் வீட்டுக்கு நீங்கள் சாப்பாட்டுக்கு வர வேண்டும் என்று கூறி எம்மை அழைத்துச் செல்கிறார். இது நடந்த நிகழ்ச்சி.

அங்கே மானூர் என்ற கிராமத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். சாப்பாட்டில் அவர்கள் வீட்டில் வெண்டைக்காய்க் குழம்பு வைத்துவிட்டார்கள். வெண்டைக்காய் பொறியலும் வைத்துவிட்டார்கள்.

இவரோ கிறிஸ்தவர், அப்பொழுது என்ன செய்துவிட்டார்..,? எங்கள் குலத்துக்கு இந்த வெண்டைக்காய் ஆகாதுங்க என்றார்.

நான் உடனே அவரிடம் கேட்டேன். நீங்கள் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டு உங்கள் குலத்துக்கு ஆகாது என்றால் என்ன இது? முறையில்லையே.., என்றேன்.

இல்லைங்க.., அது எங்கள் பரம்பரையில் வெண்டைக்காயை நாங்கள் சாப்பிட்டால் நிச்சயம் எங்களுக்கு அப்பொழுதே வயிற்றுக்குச் சேராது, பேதி ஆகிவிடும் என்றார் அவர்.

அது என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு இரண்டு தலைமுறையாகப் போய் விட்டேன் என்று சொல்கிறீர்கள். அப்புறம் ஏன் இதை விடமாட்டேன் என்கிறீர்கள்? என்று கேட்டேன்.

அது எங்களுக்குத் தெரியாது. வெண்டைக்காய் சாப்பிட்டால் எங்கள் குலத்திற்கு ஆகாது. இப்பொழுது வேண்டுமென்றால் பாருங்கள். முகர்ந்து வாடையைப் பார்த்தால் பேதி ஆகிவிடும்.

வெண்டைக்காயைக் கொடுங்கள், முகர்ந்து பார்த்தால் எனக்கு பேதி ஆகும். என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று சொன்னால் நான் முகர்ந்து பார்க்கிறேன் என்கிறார் அவர்.

அந்த உணர்வு அவருக்குள் பதிவாகி இருக்கின்றது. அதனால் அவர் எழுந்து போய்விட்டார். சாப்பிடவே இல்லை.

அப்புறம் சிறிது சாப்பிடுங்கள் என்று சொன்னேன்.

இந்த வாடை பட்டாலே எனக்கு பேதிக்குப் போகும் என்றார். அடுத்தாற்போல் இப்பொழுது எனக்கு வயிற்றைக் கலக்கின்றது, நான் வெளியே போகிறேன் என்று சொன்னார். அதே மாதிரி போகவும் செய்தார்.

நான் இனி சாப்பாடே சாப்பிட முடியாது. எங்கள் குலத்தில் யாருக்கும் இந்த வெண்டைக்காய் வாசனை ஆகாது என்று சொல்லிவிட்டார்.

நான் சரி என்று சொல்லி விட்டுவிட்டேன். அப்புறம் நான் என்ன செய்தேன்.

மறுநாள் இன்னொருத்தர் வீட்டில் வெண்டைக்காயை ரொம்ப நைஸா ஆட்டச் சொன்னேன். வெண்டைக்காய் ரூபம் இல்லாதபடி கடலைப் பருப்பு இதெல்லாம் போட்டு நன்றாக அரைத்து வடையாகச் சுடச் சொன்னேன்.

அந்த வடையச் சுட்டு அவருக்குக் கொடுக்கச் சொன்னோம். பார்த்தோம் என்றால் அந்த வடையை நிறையச் சாப்பிட்டார். “ஜோராக இருக்கின்றது” என்று சொல்லிக் கொண்டு 10 வடையைச் சாப்பிட்டார்.

பத்து வடையைச் சாப்பிட்டு முடித்தவுடனே அப்புறம் நான் கேட்டேன். வெண்டைக்காய் உங்களுக்கு ஆகாது இல்லையா.., என்றேன்.

ஆமாம்.., ஆகாது.., என்று அவர் கூறினார்.

நீங்கள் சாப்பிட்ட வடையில் என்ன இருக்கின்றது என்று தெரியுமா? என்று கேட்டேன்.

நீங்கள் பொய் சொல்கிறீர்கள். வெண்டைக்காய் கொஞ்சம் ஒரு துளி உள்ளுக்குள் போனாலே எனக்குப் பேதிக்கு வரும். எனக்குத் தெரியும் என்றார்.

அதைத்தான் இப்போது நீங்கள் நன்றாக சாப்பிட்டீர்கள் என்று நான் சொன்னேன்.

எனக்கு என்ன அறிவு இல்லை என்று நினைக்கின்றீர்களா? என்றார் அவர். அறிவில்லை என்றாலும்கூட வெண்டைக்காயை நான் கொஞ்சம் போல சாப்பிட்டாலும் உடனே எனக்குத் தெரியும்.

வெண்டைக்காய் போட்டிருக்கின்றதா இல்லையா என்று நான் உடனே சொல்லிவிடுவேன் என்றார்.

அப்படியா..,? சரி.., என்று சொல்லிவிட்டு வெண்டைக்காயை அவர்கள் வடையாக எப்படிச் செய்தார்கள்? பாருங்கள்.., என்று மறுபடி அதைச் செய்யச் சொல்லிக் காண்பித்தேன்.

அதே மாதிரி வடையைச் செய்த பின் அந்த வடையை அவரிடம் கொடுத்து சாப்பிடுங்கள். என்ன ருசி இருக்கின்றது..,? என்று சொல்லுங்கள் என்றேன்.

அவ்வளவுதான்..,, எனக்குப் பேதி ஆகியிருக்க வேண்டும். ஆனால் அதை நான் சாப்பிட்டேனே என்ற இந்த எண்ணம் அவருக்கு ஜாஸ்தி வந்துவிட்டது. அடுத்து அவருக்கு பேதிக்கு ஆனது அளவே கிடையாது.

உங்களிடம் வந்ததற்கு நான் இறந்து போய்விடுவேன் போலிருக்கின்றது என்றார் அவர்.

 அப்புறம் நான் அவருக்கு ஆசிர்வாதம் செய்து சரி செய்தேன். நீங்கள் மதம் மாறிச் சென்றீர்கள். உங்கள் குலம் இப்படி வந்துவிட்டது என்று விளக்கத்தைச் சொன்னேன்.

இதெல்லாம் அரசர் காலங்களில் அரசன் எதற்காக வைத்தான்? நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  

உதாரணமாக ஆந்திராவில் இருந்து ஒரு அரசன் கீழ் போர் செய்ய வருகிறோம். பரம்பரையாக இங்கே வரப்படும்போது “தன் இனம் தன் குலம்” தெரியாது. அதற்காக வேண்டி அவர்கள் முக்கியமான காய்கறிகளை விலக்கி வைத்திருப்பார்கள்.

தன் நாட்டிற்கு அவர்கள் போனாலும் அல்லது எங்கே சென்றாலும் சாப்பிடும் போது அந்தப் பந்தியில் வைக்கும்போது இது என் குலத்துக்கு ஆகாது என்று ஒதுக்கி வைப்பார்கள்.

அப்பொழுது தன் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்து கொள்வதற்காக அன்று மறைமுகமாக அரச காலங்களில் ஏற்படுத்தியது இது.

 இவர் கிறிஸ்தவராக மாறிப் போனாலும் இவருக்குள் இந்த உணர்வு பதிவு செய்தது என்ன செய்கின்றது? முதலில் வடையைச் சாப்பிடும் போது அவர் வெண்டைக்காயை நினைக்கவில்லை, பேதி ஆகவில்லை.

ஆனால், அந்த நினைவின் பதிவு வருகின்றது. வந்தபின் என்ன சொல்கிறார்? எண்ணத்தில் பதிவு செய்ததை அவர் நுகர்ந்து உள்ளுக்குள் போனவுடனே “வெண்டைக்காய் வேண்டாம்..,” என்ற சொல் வருகிறது.

ஆகவே, எது நமக்குள் பதிவோ அதனின் இயக்கமாகத்தான் நாம் செயல்படுவோம். நாம் நுகரும் உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

உள் நின்று இயக்கும் சக்தி உயிர் கடவுள். எந்த உணர்வை நுகர்கின்றோமோ அது நமக்குள் நின்று தெய்வமாக அந்த குணத்தின் செயலாக நம்மை இயக்கும்.

நாம் இயங்குகின்றோமா? மற்றொன்று நம்மை இயக்குகின்றதா? என்று இதையெல்லாம் நம் வாழ்க்கையில் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் அவசியம்.

நாம் நுகரும் உணர்வு நம்மை எப்படியெல்லாம் இயக்குகின்றது? நமது வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அனுபவப்பூர்வமாக உணர்த்திய மூலக்கூறுகளை நீங்களும் அறிந்து குரு காட்டிய அருள் வழியில் என்றுமே நீங்கள் வாழ்ந்திடல் வேண்டும். எமது அருளாசிகள்.