ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 19, 2016

நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் செய்யச் சொன்னார்கள் ஞானிகள், நாம் செய்கிறோமா?

குறுகிய காலமே இந்த உடலில் வாழ்கின்றோம். எத்தனையோ கோடி உடல்களில் பல துயர்களை அனுபவித்து மற்றொன்றுக்கு இரையாகி அதிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்துத் சேர்த்துச் சேர்த்து இந்த  உணர்வுக்கொப்ப நம் உயிர் உடல்களை மாற்றி மாற்றி வந்தது.

 தீமைகளிலிருந்து தப்பிடும் பல எத்தனையோ உடல்களை மாற்றி தீமையிலிருந்து தப்பிடும் இந்த மனித உடலை உருவாக்கியதை அந்த உயிரான ஈசனுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டுமா இல்லையா..,?

அவனை நாம் மறந்து தவறான நிலைகளில் இன்று போய்க் கொண்டிருந்தால் என்ன நடக்கும்?

சூட்சமத்தில் நடப்பதை மனிதன் உணர்ந்து தன்னை அறிந்து செயல்படும் முறை எவ்வாறு என்பதைத் தெரியப்படுத்துவதற்காக நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களைச் சிலையாக்கி காவியத்தைப் படைத்து அந்தக் காவியத்தை நமக்குள் அதன் உணர்வுப்படி பார்க்கப்படும் பொழுது சிலைக்குப் பால் அபிஷேகம் செய்கின்றனர்.

சிலைக்குப் பால் அபிஷேகம் செய்யும் போது பாருங்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருந்தால் பாலை எண்ண மாட்டார்கள். அந்தக் கஷ்டத்தைத்தான் எண்ணுவார்கள்.

என் பையன் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றானே. கடன் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லையே. அங்கே பால் அபிஷேகம் செய்யும் போது பாலை ஊற்றும் பொழுது தன் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களையும் குறைகளையும் தான் சொல்லி முறையிடுவார்கள்.

அந்த நல்ல மணத்தை எடுக்கக்கூடிய சக்தி இல்லை.

ஏனென்றால் மனிதன் ஆசை முன்னனியில் வரப்படும் பொழுது அந்த மெய் உணர்வைப் பெறும் தகுதியை நாம் இழந்துதான் இருக்கின்றோம். இந்த ஆசைதான் முன்னனியில் வருகின்றது.

ஆசைப்பட வேண்டியதுதான். ஆசையில்லாமல் எதுவும் நடக்காது. ஆக, எதன் மேல் ஆசைப்பட வேண்டும்?

அந்தப் பாலைப் போல மணம் பெறவேண்டும். மகிழ்ந்து வாழும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று அந்த ஆசைப்படவேண்டும்.

பாலிலே எப்படிச் சுவை இருக்கின்றதோ கனி எப்படி சுவையாக இருக்கின்றதோ அதைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும்.

அந்தச் சுவைமிக்க நிலைகளாக எங்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணினால் உங்கள் உயிரிலே இங்கே அபிஷேகம் நடக்கும். அந்தச் சந்தனத்தைப் போல நறுமணத்தை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கினால் உங்கள் உயிரிலே அந்த அபிஷேகம் நடக்கின்றது.

உயிரிலே அபிஷேகம் இவ்வாறு நடந்தபின் அந்த உணர்ச்சிகள் உங்கள் இரத்தநாளங்களிலே கலக்கின்றது.

பின் இரத்தநாளங்களிலே கலக்கப்படும் பொழுது உங்களை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு இந்த உயர்ந்த உணர்வை ஆகாரமாக ஊட்டுகின்றது.

உயர்ந்த உணர்வுகளை நமக்குள் அணுவாக உருவாக்கவே கோவிலிலே அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேகம் செய்யும் போது நாம் எத்தனை பேர் இப்படிச் செய்கிறோம்?