ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 25, 2016

தீமையை நீக்கும் உணர்வை “அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை” நாம் பெற்றுப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்

நாம் எண்ணும் உணர்வுக்கொப்ப இந்த மனித உடலை இயக்கத் தெரிந்து கொண்டவர்கள் நாம், நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா.

ஒரு தையல் இயந்திரத்தில் தைக்கும்போது நாம் நுகர்ந்து செயல்படுத்தும் போது முதலில் நாம் கூர்மையாக எண்ணி அதை உற்றுப் பார்த்துத் தெரிந்து, தைக்கும் நிலைகளைப் பழகிக் கொள்கின்றோம்.

 அந்தப் பழக்கத்தின் உணர்வை உணர்த்திவிட்டால் நாம் எண்ணும் போது அந்தத் தையல் விலகிச் செல்லாதபடி இந்த உணர்வுகள் தான் இயக்குகின்றது.

அப்பொழுது அந்த உணர்வுக்கு இந்த ஆறாவது அறிவுதான் அதை உணர்த்தப்பட்டு அதைப் பழக்கப்படுத்தி அதற்குத்தக்க அந்தக் கை மற்ற அங்கங்களை இயக்கச் செய்கின்றது.

இதைப் போல்தான் கையில் பின்னலாடை செய்வோரும் அந்தப் பழக்கப்படுத்திவிட்டால் நம்முடன் பேசிக் கொண்டே அந்த உணர்வுகள் இயக்கிப் பின்னி விடுவார்கள்.

 இப்படி ஒவ்வொருவரும் அவர்கள் பழக்கப்படுத்திய நிலைகள் கொண்டு செயல்படுத்துகின்றார்கள். ஆக, நாம் பழக்கப்படுத்திய உணர்வுதான் அங்கே இயக்கப்படுகின்றது.

இதைப் போலத் தீமையை நீக்கிய உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதைப் பழக்கப்படுத்திவிட்டால் நாம் எத்தகைய நிலைகளில் இருந்தாலும் அந்தத் தீமையை நீக்கும் உணர்ச்சிகள் வந்து தீமையை நீக்கி அந்த உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் தன்மை பெறுகின்றது.

நாம் பிறருடைய கஷ்டத்தை நுகர்ந்தால் நமது உயிர் அந்த உணர்வின் தன்மையை நமக்குள் இயக்கிவிடுகின்றது. அப்பொழுது அந்த உணர்வுதான் நம்மை இயக்குகின்றது.

கோபப்படுவோரைப் பார்த்தால் அவனை நுகர்ந்தால் நமக்கும் கோபம் வருகின்றது. அப்பொழுது யார் இயக்குவது? நாம் நுகர்ந்த உணர்வுதான் நம்மை இயக்குகின்றது.

ஆகவே, இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையின் உணர்வு நமக்குள் வராமல் தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலையை நாம் இயக்கி இந்த உடலை நமக்குகந்ததாக நம் எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளை மாற்றியமைத்துப் பழகுதல் வேண்டும்.

அதற்காகத்தான் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் எத்தனைவிதமான குறைபாடுகளை அறிய நேர்கின்றதோ அதை நீக்க அடுத்த நிமிடமே உங்களுடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் பால் இணைத்து தீமையை அப்பொழுதே தூய்மைப்படுத்திக் கொள்ளும் அந்த உணர்வின் தன்மையைப் பழக்குதல் வேண்டும்.