ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 21, 2016

“நீ பாம்பாகப் போ..,” ரிஷி சாபமிடுவதாக காவியங்கள் உண்டு - விளக்கம்

நாம் அடிக்கடி வேதனைப்படுவோரின் உணர்வுகளையோ, வேதனைப்படச் செய்து அதைக் கண்டு ரசிப்போருடைய உணர்வுகளையோ அதிகமாகச் சேர்க்கப்படும்போது அந்த வேதனை உருவாக்கும் அணுக்கள் நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது.

இந்த உயிர் எத்தனையோ கோடிச் சரீரங்களில் மீண்டிட வேண்டுமென்று உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது.

தீமைகளை வென்றிடும் உணர்வின் ஆற்றல் பெற்ற இந்த மனித உடலை உருவாக்கிய உயிர் யார்? அவனை ரிஷி என்று காரணப்பெயர் வைத்துச் சொல்லுகின்றார்கள் ஞானிகள்.

அதாவது, ஒருவர் வேதனைப்படுவதைப் பார்த்து நாம் ரசித்துக் கொண்டிருப்பதும், ஒருவரை வேதனைப்படச் செய்து அதைப் பார்த்து ரசிப்பதும், அதே மாதிரி நமக்கு வேண்டாதவராக இருந்தால் எதாவது தூண்டுதலாகி வேதனைப்படும்போது அவனுக்கு அப்படித்தான் வேண்டும் அப்படி என்று நாம் இப்படியெல்லாம் ரசிப்போம்.

இதைப் போன்ற உணர்வின் தன்மைகளை நம் உயிர் நுகர்ந்தால் அந்த வேதனை உணர்வுகள் தனக்குள் நம் உடலுக்குள் உருவாக்கிவிடும். ஆக அத்தகைய நிலைகள் நாம் எண்ணும்போது இந்த விஷத்தின் தன்மை கலந்தபின் அதைச் “சாபமிடுவதாகக் காட்டுகின்றார்கள்”.

எத்தனையோ கோடிச் சரீரங்கள் கடந்து இன்று மனிதனாக உருவாக்கிய நிலைகளில் பாசத்தால் நாம் வேதனைப்படுவோம்.

ஆக, வேதனை உணர்வுகள் நமக்குள் வந்த பின் பிடிக்காதவன் மேல் விஷத்தைப் பாய்ச்சுவதும் அவர்களைத் துன்பப்படச் செய்வதும் துன்பப்படுவதைப் பார்த்து ரசிப்பதும் இதைப் போன்ற நிலைகள் இன்று சமுதாயத்தின் மத்தியில் நிறைய உண்டு.

இப்படிப்பட்ட உணர்வுகளை அதிகமாக நாம் நுகர்ந்தபின் நமது உயிர் சொல்லும். "நீ பாம்பாகப் போ..," என்று உயிர் சாபமிடுவதாக பின் வந்த ஞானிகள் இதைக் காவியமாகப் படைத்து நமக்குத் தெளிவாக்குகின்றார்கள்.

அப்போது அவன் கேட்கின்றான், "ஐயனே..! நான் தெரியாமல் செய்த தவறை, அறியாது செய்த இந்தப் பிழையை மன்னித்து அருள வேண்டும். மீண்டும் நான் மனித உடலைப் பெறவேண்டும். அதற்கு உங்களுடைய ஆசி வேண்டும் என்று கேட்கும்படி இதைக் காவியத்தில் காட்டுகின்றார்கள்.

அப்போது அந்த ரிஷி சொல்லுகின்றார், நீ நல்ல மனிதனைத் தீண்ட எண்ணுவாய். அவன் கை படும். அப்போது நீ மனிதனாவாய்.

ஒரு நல்ல மனிதன் பாம்பை அடித்தால், பாம்பு வேதனைப்பட்டு இறக்கின்றது. அந்த உயிர் ஆன்மா வெளி வந்தபின் யார் அடித்தார்களோ அவரைக் குறி வைத்து அவன் உடலுக்குள் சென்றுவிடும். அந்த உணர்வின் சக்தி கொண்டு அது மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.

இதே பாம்பை ஒரு கோழி கொத்தி அல்லது கருடன் கொத்தி தின்றால் அந்த வேதனைத் தாங்காது அந்த கருடன் நிலைகளில் அது சென்று அதனுள் அது கருவாகி அது கருடனாகப் பிறக்கும்.

பாம்பைக் கோழி கொத்தினால் அது கோழியின் தன்மை அடையும். ஆகவே இந்த உபாயத்தைச் சொல்லுகின்றான். இப்பொழுது மனிதன் அதை அடித்தால் மனிதனாகப் பிறக்கின்றது. இவ்வாறு காவியத் தொகுப்புகளைத் தெளிவாக்குகின்றனர் ஞானியர்.

ஆகவே, எத்தனையோ கோடி விஷத்தன்மையை அடக்கிவிட்டு விஷத்தை அடக்கும் உடலைப் பெற்ற மனிதனாக உருவாக்கிய இந்த உயிரை நாம் மதித்தல் வேண்டும்.

அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து உயிர் வழி சுவாசித்து, இந்த வாழ்க்கையில் வரும் வேதனை என்ற நஞ்சினைப் பிளந்திடல் வேண்டும். உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியின் சுடராக மாற்றிடல் வேண்டும்.