ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 19, 2016

தீமை நீக்கும் உணர்வை நுகர்ந்து உயிர் வழி அனுப்பி இரத்தத்தில் கலந்து உடலுக்குள் நல்ல அணுக்களை நீ உருவாக்கு - ஆலயப் பண்பு

குழந்தைகள் மேல் பாசமாக உள்ளவர்கள் தன் குழந்தை சொன்னபடி கேட்கவில்லை என்றால் வேதனைப்பட்டு என்ன சொல்வார்கள்?

என் கை கால் எல்லாம் குடைகின்றது. இரவு நேரத்தில் தூக்கம் வரவில்லை, இந்தச் சனியன்.., தொலைந்து போகிறவனால் எனக்கு இப்படி ஆகிறது என்பார்கள்.

எப்பொழுது பார்த்தாலும் இவனால்தான் நான் நரக வேதனைப்படுகின்றேன் என்று சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள்.

நீங்கள் இதை மாற்றுகின்றீர்களா?

சாமியை நாம் எதற்காகக் கும்பிடுகின்றோம்? கோவிலில் ஏன் கும்பிட வைத்தார்கள்?

சூட்சமத்தில் நமக்குள் என்ன நடக்கின்றது? என்பதைக் காவியமாக எழுதி வைத்து இதை நுகர்ந்து குழந்தை அடுத்து நல்லவனாக வர வேண்டும் என்று நம்மையறியாமல் வரும் தீமைகளைத் துடைப்பதற்கு ஆலயமாக வைத்தது.

நம் குழந்தையும் ஆலயத்திற்கு வரும் போது அவனுக்கும் கோவிலில் கும்பிட வேண்டிய முறைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறவேண்டும். பாலைப் போல மணம் பெறவேண்டும். இந்தச் சந்தனத்தைப் போல நறுமணம் பெறவேண்டும். என் அம்மா அப்பா அருளாசி எனக்கு வேண்டும் என்று “இப்படிக் கேள்” என்று சொல்லிக் கேட்கும்படி நம் குழந்தையைத் தூண்ட வேண்டும்.

இந்த ஞாபகத்தைக் கொடுத்துத்தான் வளர்க்க வேண்டும். தாய் சொல்வதைத்தான் அவன் கேட்பான். நான்கு தரம் சொல்லிப் பாருங்கள். பழக்கத்திற்கு வந்துவிடும்.

ஆனால், கோவிலில் இப்பொழுது எப்படிக் கும்பிடச் சொல்கிறார்கள்? “விழுகுடா.., சாமி காலில் விழுந்து கும்பிடுடா..,” என்று இப்படித்தான் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

அந்தத் தெய்வீகக் குணத்தை நான் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். குழந்தை அவன் எண்ணி இதை நுகர்ந்தால் அவன் உயிரில் அபிஷேகம் நடக்கின்றது.

யாம் சொன்ன இந்த முறைப்படி தாய் தந்தையர் சொல்லிக் கொடுத்துக் குழந்தைகளுக்கு ஒரு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஏனென்றால் நாம் தெரிந்து எப்படி வாழவேண்டும் என்பதைத்தான் மறைமுகத்தில் இருப்பதை உருவம் அமைத்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

அங்கே காட்டிய உயர்ந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அத்வைதம். நம் உயிரிலே பட்டால் விசிஷ்டாத்வைதம். அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடலாகின்றது.

ஆகவே, தீமைகளை நீக்கும் உணர்வுகளை நுகர்ந்து உயிர் வழி அனுப்பி இரத்தத்தின் வழி கொண்டு வந்து உன் உடலில் நல்ல அணுக்களை நீ உருவாக்கு என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது ஆலயப் பண்புகள்.

ஆலயத்தில் இந்த முறைப்படி வணங்குகின்றோமா? நல்ல யோசனை செய்து பாருங்கள்.

யாம் சொல்வதை எல்லாம் கேட்பார்கள். ஆனால், ஆலயத்திற்குள் சென்றவுடன் என்ன செய்கிறார்கள்?

கோவிலில் போய்க் “கஷ்டத்தைச் சொல்லாமல் எப்படிக் கும்பிடுவது?” கஷ்டத்தைச் சொன்னால் தானே.., தெய்வத்திற்குத் தெரியும், இல்லாவிட்டால் தெரியாது அல்லவா.., என்பார்கள்.  

இப்படித்தான் வாதம் செய்து கொண்டிருக்கின்றோமே தவிர நாம் பதிவு செய்த உணர்வுகள்தான் நம்மை இயக்குகின்றது என்பதை நாம் அறியவில்லை.

தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பதிவு செய்தால் அதனின் நினைவு வந்து நம்மை நல்வழியில் அழைத்துச் செல்ல உதவும்.

தொழில் செய்யும் போது சந்தர்ப்பத்தால் ஏற்படும் வெறுப்பு, வேதனை சலிப்பு எல்லாத் தீமைகளை நீக்கக் கற்றுக் கொள்ளும் இடம் தான் ஆலயம்.

இதைப் போல நீ நுகரும் உணர்வுகள் உன் உடலில் எப்படி வருகின்றது என்பதைத்தான் அன்று ஆலயப் பண்புகளைப் பற்றித் தெளிவாகக் கூறினார்கள்.

இதை யாரும் நாம் இப்பொழுது செய்வதில்லையே. ஏதாவது இப்படிச் செய்கிறோமா? சிந்தித்துப் பாருங்கள்.