ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 2, 2016

தனக்குள் மோதும் நஞ்சினை துருவ நட்சத்திரம் ஒளியாக்குவது போல நம் மீது மோதும் நஞ்சினை “ஒளியின் சுடராக, ஒளியின் சிகரமாக” மாற்றுவோம்

அகத்திற்குள் அறிந்த உணர்வை முதலில் பெற்றவன் அகஸ்தியன். அவன் அறிந்திட்ட அறிவு அவனில் விளைந்த உணர்வுகள் இன்றும் இங்கே பரவிக் கொண்டுள்ளது.

அந்த அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அருளை ஏங்கிச் சுவாசித்து நம் உயிருடன் இணைத்து அந்த உணர்வின் உணர்ச்சிகளை உடலுக்குள் பரவச் செய்ய வேண்டும்.

அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளை நம் உடலில் உள்ள அணுக்களில் இணைக்கப்படும் பொழுது அவனறிந்த உணர்வும் அவன் ஒளியாக மாற்றிய உணர்வும் நாம் பெறமுடியும்.

இவ்வாறு நம் உடலில் உள்ள அணுக்களை மாற்றினால் அவை அதனுடைய வேலைகளை அதைச் செய்யும்.

கணவன் மனைவி இரு உயிருன் ஒன்றென இணைந்து ஒளியாக மாற்றி விண்ணின் உணர்வின் உணர்வினைத் தனக்குள் ஒளியாக்கி எந்த விண்ணின் நிலை அகஸ்தியன் பெற்றானோ அவன் துருவ நட்சத்திரமாக ஒளியின் சுடராக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

இன்று நட்சத்திரங்கள் பல வகை செய்தாலும் இந்தப் பிரபஞ்சத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் நிலை பெற்றது துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவர்கள் பெற்ற அருள் ஒளியின் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டித் தியானிக்க வேண்டும்.

உங்கள் நினைவு துருவத்தை நோக்கிச் செல்லட்டும். துருவ நட்சத்திரத்துடன் உங்கள் நினைவாற்றல் இணையட்டும்.

சூரியனின் கதிரியக்கங்கள் கவர்ந்து பரப்பும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உயிருடன் இணைத்து உங்கள் உடலிலே பரவச் செய்யுங்கள்.

உங்கள் இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள். உங்கள் உடலிலுள்ள அணுக்களை அவ்வழியில் பெறும்படிச் செய்யுங்கள். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை உங்கள் உடலுக்குள் ஒன்றிடச் செய்யுங்கள். ஒவ்வொரு அணுக்களிலும் ஒன்றிடச் செய்யுங்கள்.


துருவ நட்சத்திரத்துடன் ஒன்றிட வேண்டும் என்று உயிரான ஈசனிடம் உணர்வைச் செலுத்தி ஏங்கிப் பெறச் செய்யுங்கள்.

உங்கள் உடல் அணுக்கள் அனைத்தும் ஏகாந்த நிலை என்னும் உணர்வின் தன்மை கொண்டு மகிழ்ந்திடும் உணர்வுகள் பெற்று பேரின்பப் பெரு நிலை என்ற உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டும்.

இப்பொழுது உங்கள் உடலில் மகிழ்ச்சியும் “மகதம்” என்ற அருள் மகத்தான அருள் அணுக்களாக அருள் சுவையின் உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெறும்.

நஞ்சு மோதி ஈர்க்கும் சக்தி பெற்றது. இதைப் போன்று நமது துருவப் பகுதி வழியாக பூமிக்குள் வரும் உணர்வினை துருவ நட்சத்திரம் அந்த நஞ்சுடன் மோதி அதை ஒளியாக்குகின்றது.

தனக்குள் மோதும் நஞ்சினை துருவ நட்சத்திரம் ஒளியாக்குவது போன்று உங்கள் உணர்வின் தன்மையும் இன்று உங்களில் மோதும் நஞ்சினை ஒளியின் உணர்வாக ஒளியின் சிகரமாக மாற்றும் நிலைக்கு வரும்.

அந்த உணர்வினை உங்களுக்குள் பிரம்மமாக்குங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். ஒளியாக மாற்றும் அந்த உணர்வுகள் உருப்பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

நஞ்சின் மோதலில் ஒளியின் உணர்வாக உருவாக்கிய உணர்வினை உங்கள் உடலில் உள்ள அணுக்களை அவ்வழியில் அதனை பிரம்மத்தை உருவாக்குங்கள்.