ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 7, 2016

சொத்தையும் சுகத்தையும் தேடி அதிக நாள் வாழ்ந்தேன் என்பதைவிட அருள் ஒளியைத் தேடி என்றும் பதினாறாக பேரின்ப வாழ்க்கை வாழவேண்டும்

இந்த உடலில் 100 வயது 120 வயது வரை கூட நாம் வாழலாம். அதற்குப் பின் என்ன செய்கிறது? தேடிய செல்வம் இருக்கின்றதா?

120 வயதானால் கொள்ளுப் பேரன் கொள்ளுப் பேத்தி எல்லாம் நீ யார்? நான் யார் என்று கேட்கும்? யாரும் கவனிக்க முடியாத நிலையில் அனாதையாகத் தான் வாழ முடியும்.

எம்மை குருநாதர் ஒரு இடத்திற்குப் போகச் சொன்னார். அந்த இடத்தில் ஒரு அம்மாவிற்கு வயது 108 வயது. அது அனாதையாகப் பிச்சை எடுத்து வாழ்கின்றது.

அந்த அம்மாவினால் நடக்க முடியவில்லை உட்கார்ந்து அப்படியே தரையைத் தேய்த்துக் கொண்டு தான் போகின்றது.

கேட்கும் போது இந்தக் இந்தக் காலத்தில் நான் யுத்தங்களைப் பார்த்தேன். முஸ்லிம் யுத்தங்களையும் வட இந்தியாவில் நடந்த யுத்தங்களையும் பார்த்தேன்.

இன்று எனக்குச் சோறு போட ஆள் இல்லை. நான் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டியதுள்ளது.

கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி என்று நிறையப் பேர் இருக்கின்றார்கள். ஆனால், என்னைக் கவனிப்பதற்கு ஆள் இல்லை.

என் பிள்ளைகள் அனைத்தும் இறந்துவிட்டது. என் பேரப்பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள். அதற்கப்புறம் உள்ள பேரப்பிள்ளைகள் தான் இருக்கின்றனர். “என்னை யார்..,?” என்று கேட்கின்றார்கள்.

உணவு கொடுப்பதற்கு ஆள் இல்லை. நான் இவ்வளவு வயது வாழ்ந்துவிட்டேன். எனக்கு யாரும் இல்லை.

இப்படி இத்தனை வயது வாழ்ந்தாலும் கூட “சொத்தைத் தேடினேன்” என்று செல்வம் இருக்கும் குடும்பங்களில் பார்த்தால் தெரியும். தேடிய செல்வங்கள் வந்த பிற்பாடு இந்த உடலுக்குப் பின் பேரன் பேத்தி காப்பாற்றுவார் என்றால் இல்லை.

“சீ.., போ வெளியே” என்று சொல்லும். சில குடும்பங்களில் பார்த்தால் தெரியும்.

அப்பொழுது நீங்கள் எதைத் தேடுகின்றீர்கள்? ஆகவே, அந்த அருள் ஒளியைத் தேட வேண்டும்.

சில பேர் உடலை விட்டுப் பிரியும் நிலைகளைச் சொல்வார்கள். நான் போகப் போகிறேன் என்ற அந்த ஞாபகம் வரும். எதன் உணர்வு கொண்டு வலு பெற்றோமோ அந்த உணர்வு கொண்டு அங்கே செல்லலாம்.

இல்லையென்றால் பாசம் பற்று கொண்டவர்கள் கடைசி நிமிடத்தில் யார் மேல் அந்த நினைவு வருகின்றதோ “நான் உடலை விட்டுப் போகிறேன்” என்ற நிலையில் அவர்கள் நினைவு வரும், பின் அந்த உடலுக்குள் தான் போகும்.

இதைப் போன்ற நிலைகள் புவியின் ஈர்ப்பில் சிக்காதபடி ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சுவாசியுங்கள். எத்தனையோ சுகம் அமைத்த இந்த உடலும் முழுமையாக இருந்ததில்லை.

முழுமையான உணர்வின் தன்மை இந்த வாழ்க்கையில் நாம் பெறுதல் வேண்டும். ஆக, அந்த அருள் ஒளி பெற இந்த வாழ்க்கையில் இருளை அகற்றுங்கள்.

உங்களை அறியாது வந்த இருளைப் போக்கச் செய்யுங்கள். இனி மெய் வழி வாழ வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லாத நிலை அடைதல் வேண்டும்.

ஏனென்றால், இப்படி மூன்றரை இலட்சம் பேரைச் சந்திக்க செய்து அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர். குரு கொடுத்த ஆற்றல் மிக்க சக்திகளை அரும் பெரும் சக்தியான அருள் ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

அந்த வித்திற்கு அதிகாலை அந்த துருவ தியானத்தில் நீங்கள் சிறிது நேரம் எடுத்து சாப்பாடு கொடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அதிலே வளரும் நல்ல ஞானங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க உதவும். அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் வளரும்.

நிலையற்ற இந்த உடலுக்குள் நீங்கள் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பால் அந்தச் சிந்தனையைச் செலுத்தினால் நிலையான அந்த உணர்வின் தன்மை வரும் போது இந்த நிலையற்ற உடலில் மகிழ்ச்சி என்ற நிலையை ஊட்டவும் இது உதவும். மகிழ்ச்சியுடன் நாம் செல்ல முடியும்.

துயர் என்ற உணர்வு நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள இது உதவும். பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையைப் பெற முடியும்.

அதற்காக வேண்டி நாம் முன்னேற்பாடாக நம் முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். ஏனென்றால், நாம் எதை எடுக்கின்றோமோ அதுதான் வரும்

சிவன் ஆலயங்களில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப் பிள்ளை என்று காட்டியிருப்பார்கள். இந்த வாழ்க்கையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் கணக்கானால் நாம் அதன் ஈர்ப்பு வட்டத்தில் செல்கின்றோம்.