ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 29, 2016

பிரதோஷத்தை (பிறருடைய தோஷத்தை) அதிகாலை நான்கு மணிக்குக் கழிக்கச் சொன்னார்கள் ஞானிகள்...!

பிறருடைய நோய்களை நாம் ஏற்று பரிவுடன் பண்புடன் கேட்டால் அந்த உணர்வின் தன்மை நாம் நுகர்ந்தால் நம்மை அது இயக்கிவிடும். அவன் உடலிலே வலிமை பெற்றது நோய்.

ஆனால், சாந்த உணர்வின் நிலைகள் அதனுடைய வலிமையை இழந்ததுதான். நல்லதைச் செய்ய வலிமை பெற்றது தீமை என்ற உணர்வுகள் பெற்றால் சாந்த உணர்வுகள் வலிமை இழக்கின்றது.

ஆகவே இவர் நோகும்போது நமக்குள் தோஷம் வந்துவிடுகின்றது. இதைத் துடைக்க வேண்டும் அல்லவா?

இந்தத் தோஷத்தை நீக்குவதற்குத்தான் காலை 4 மணிக்கு எல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுப்பதற்கு ஞானிகள் காட்டினார்கள். ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்?

ஈஸ்வரன் கோயிலில் போய் சாயங்காலம் 4 மணிக்கு அபிஷேகம் செய்து நந்தீஸ்வரனிடம் சொன்னால் அவன் ஈஸ்வரனிடம் சொல்லி நமக்கு நன்மை செய்வான் என்று இப்படி நம்மைப் பைத்தியக்காரர் ஆக்கியுள்ளார்கள்.

இந்தத் தீமையை வென்றவன் அகஸ்தியன். அதன் உணர்வை நுகர்ந்து பாருங்கள். இதன் வழி நீங்கள் செய்யுங்கள். உங்கள் உயிர் செய்யும்.

என்னைப் பார்த்து, நீ சாமி, சக்தி பெற்றவர் சாமி செய்வார் என்றால் நான் செய்ய முடியாது. நீங்கள் நலம் பெற வேண்டுமென்று நான் பிரார்த்திக்கலாம்.

அந்தப் பிரார்த்தனையின் உணர்வுகள் நான் சென்ற பாதையை உங்களுக்குள் பதிவாக்கலாம். இதை எண்ணினால் குரு சென்ற அருள் வழியில் தீமைகளை நீக்கும் நிலைகளைச் செய்யும்.

பள்ளிக்கூடத்தில் போய் படிப்பையெல்லாம் படித்த பிற்பாடு வாத்தியார் சொல்லிக் கொடுத்தார். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துவிட்டார். நான் இப்பொழுது எங்கு போனாலும் வாத்தியாரே வந்து சொல்லுவார் என்றால் வாத்தியார் சொல்லுவாரா?

பள்ளிக்கூடத்தில் போய் இஞ்சினியருக்குப் படிக்கின்றீர்கள். ஆசிரியர் எல்லாம் கற்றுக்கொடுக்கின்றார். அவரை நினைத்தால் போதும் எல்லாம் அவர் செய்து கொடுத்து விடுவார் என்று சொன்னால் வந்துவிடுவாரா?

அவரை நினைத்துவிட்டுச் சும்மா இருக்க முடியுமா?

சொல்லிக் கொடுத்த நிலைகளை அவரை நினைப்பதை எப்படி நினைக்க வேண்டும்?

அவர் எதையெல்லாம் செய்யச் சொன்னாரோ அந்த உணர்வின் தன்மை நாங்கள் பெறவேண்டும் என்று அதை நுகர்ந்தால் அந்தச் செயலின் தன்மை இந்த உணர்வுகள் நமக்குள் உயிர் அந்த உணர்வை எடுத்து நம்மைச் செயல்படுத்த வைக்கும்.

ஏனென்றால், இங்கே இப்பொழுது (உலகம் முழுவதுமே) பெரும்பகுதி சாமி செய்வார் சாமியார் செய்வார் யாகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் யாரோ செய்வார்கள் என்ற நிலைகளில் தான் நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.

அருள்ஞானிகள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள் ஆலயங்களில் காட்டப்பட்டுள்ளது. உனக்குள் இருக்கும் ஈசனை நீ மதி. அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலைக் கோயிலாக மதி. மனிதனால் உருவாக்கிய நற்குணங்களை நீ மதி.

அதன் உணர்வு கொண்டு நல்ல குணங்களைக் காக்கப்பட வேண்டுமென்றால் தீமைகளைப் பார்க்கும்போது பிறருடைய தீமைகள் நமக்குள் வந்தால் அதை எப்படி தூய்மையாக்க வேண்டும் என்று உணர்வினைத்தான் ஆலயத்தில் பதிவாக்கி உள்ளார்கள்.

தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் அதிலுள்ள செம்பையும் பித்தளையையும் அது கரைக்கின்றது. இதைப்போலதான் அருள்ஞானியின் உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் இருக்கும் தீமைகளைக் கரைக்கின்றது.

நஞ்சை வென்றவனின் இந்த உணர்வின் தன்மை நம் தீமைகளை அடக்குகின்றது.

நல்ல குணம் கொண்டு தீமையின் உணர்வை நாம் நுகரப்படும்போது நல்ல குணத்தை அது அடக்குகின்றது அதர்வண. அதே சமயத்தில் இவை எல்லாம் அடக்கியது துருவ நட்சத்திரம்.

அதாவது துருவ நட்சத்திரம் ரிக். அதிலிருந்து வரக்கூடிய மணம் சாம. அதன் உணர்வை நாம் நுகர்ந்தால் இந்தத் தீமைகளை அடக்கக்கூடிய வல்லமை பெற்றது அதர்வண.

இந்த உணர்வின் தன்மை இழுத்துக் கொண்டபின் மீண்டும் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணும்போது அது நமக்குள் வித்தாகின்றது யஜூர். அது வித்தானபின் மீண்டும் சாம.

எந்த உணர்வின் தன்மையை நாம் பெற்றோமோ அதன் ஈர்ப்பு வட்டத்தில் இந்த உணர்வுகள் அழைத்துச் சென்று அந்த அகஸ்தியன் பிறவியில்லா நிலை கொண்டு எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றானோ அங்கே அழைத்துச் செல்லும்.