ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2024

தியானம் செய்வது என்பது சொத்துக்கும் சுகத்திற்கும் அல்ல…!

உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லா நிலை அடையும் பருவம் பெற்றவர்கள் தான் நாம்… இதே உயிர் தான்…!

1.அந்த உயிருடன் ஒட்டி ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தினால்
2.இந்த வாழ்க்கையில் கண்டறிந்த தீமையான உணர்வுகளை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்த முடியும்.

ஆனால் தூய்மைப்படுத்தத் தவறினால் ஒவ்வொரு குணத்திலும் அழுக்குகள் சேர்ந்து… பூரண நிலா அது பௌர்ணமிக்கு பின் எப்படிச் சிறுகச் சிறுகக் குறைந்து… கடைசியில் முழுமையாக இருட்டாவது போன்று நம் உடலில் அனைத்து உணர்வுகளும் சிறுகச் சிறுக இருள் அடைந்து விடுகின்றது.

இருளடைந்து விட்டால் அதை இயக்க முடியாத நிலைகள் கொண்டு இந்த உயிர் வெளியே சென்று விடுகின்றது. அந்த அடிப்படையில் உயிர் வெளியே சென்றால் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு… அதற்குத் தகுந்த உடலாக… “மனிதனல்லாத உடலை” இந்த உயிர் உருவாக்கி விடும்.

மனிதனல்லாத உடலை உருவாக்கி விட்டால் மீண்டும் அந்த உடலைக் காக்கும் உணர்வுகள் பெற்றுத் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உடலிந் உணர்வுக்கே செல்லும். ஆனால் மனிதனாக வர முடியாது.

நம் பையனை (குழந்தைகளை) நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் நாம் எண்ணியபடி குழந்தைகள் சரியாக வரவில்லை என்றால்
1.தவறு செய்கின்றான் என்று ஆவேசமான உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்படுகின்றது.
2.அப்பொழுது பேய் மனமாக மாறுகின்றது.

முதலில் நல்ல முறையில் வளர்க்கத் துடித்தோம். ஆனால் தவறு செய்கிறான் என்று தெரிந்த பின் பேயைப் போல அவனைத் தாக்கவும்… அறிவை இழக்கச் செய்வதும்… இதைப் போன்ற நிலைகள் வந்து விடுகின்றது.

நமக்குள் வளர்ந்த அறிவினை… “நாமும் நல்ல முறையில் வளர்க்க முடியாது” தடைப்படுத்தும் நிலையாக ஆகிவிடுகின்றது.

பூரண நிலா சிறுகச் சிறுக எப்படி மறைகின்றதோ… அதைப் போல் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு குணங்களையும் செயலற்றதாகவே மாற்றி வரக்கூடிய நிலையாகி விடுகின்றது அப்படிச் செயலற்றதாக ஆகிவிட்டால் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டி இருக்கும்.

ஆகவே… இந்த உடலில் முழுமையான ஒளியாக மாற்றும் நம்முடைய ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குப் பயிற்சி கொடுத்து… மகரிஷிகள் ஆற்றலை அருள் வாக்குகளாகக் கொடுக்கின்றோம்

பூரண நிலா போன்று நமது உயிர் என்றும் பரிபூரண நிலையை அடைவதே மனிதனின் முதிர்வு நிலை.
1.இந்தச் சந்தர்ப்பதை இழந்தால்
2.இந்த உடலில் படும் துன்பத்தைக் காட்டிலும் எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்துவிடும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி… நல் உணர்வுகளை உயர்வாக்கி… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்
1.அதற்குத்தான் நமது தியானமே தவிர
2.சொத்து வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.
3.அருள் ஞான சொத்தை அந்தப் பேரின்பச் சொத்தைத் தான் நாம் தேட வேண்டும்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்