ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 16, 2024

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து எவ்வாறு செயல்பட வேண்டும்…?

நம் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… சரியாகப் படிக்கவில்லை… அவன் மீது கவலையும் வெறுப்பும் கோபமும் வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்த நிமிடமே ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரிலே அதை மோதவிட்டு
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்து
3.என் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று “நாம் முந்திக் கொள்ள வேண்டும்…”

அந்த வலிமையைச் சேர்க்க சேர்க்கத் தவறான உணர்வுகளிலிருந்து மீட்டிடும் சக்தியாக அது வரும்.

பின் பையனைப் பார்த்து…
1.சிந்தித்து செயல்படும் சக்தி பெற்று நீ ஞானி ஆக வேண்டும்
2.தெளிந்தவனாக வரவேண்டும் தெளிவானவனாக நீ வரவேண்டும்
3.தெளிந்த நிலையில் நீ நிச்சயம் வருவாய்…! என்று இதை நாம் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் அவன் குறைகளை நீங்கள் நுகர்வது இல்லை. அவன் குறை உணர்வு இங்கே வந்து அவனைக் குற்றவாளியாக்கும் உணர்வுகளிலிருந்து நீங்கள் தப்பலாம். இல்லையென்றால் பாசத்தால் குழந்தையை வளர்த்த நிலையில் அவனைக் காக்கும் நிலை வராது

அதே போன்று தொழில் செய்யும் இடங்களிலும் எத்தனையோ இன்னல்கள் வருகின்றது.

நமக்குக் கடன் கொடுத்தவன் நாளைக்கு வந்து கேட்டால் நாம் கொடுக்க வேண்டுமே…! என்ன செய்வது என்று தெரியவில்லையே…? என்று எண்ணினால்
1.அந்த உணர்வு மூலத்தில் (உயிரில்) மோதுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் அது கனலாக எழும்புகின்றது
3.என்ன செய்வது…? ஏது செய்வது…? என்ற பதட்டங்கள் வருகின்றது

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை… உணர்ச்சிகள் இப்படி வரப்படும் பொழுது “உங்கள் எண்ணங்கள் நலமாக சீராக இருக்கின்றதா…? இல்லை…! பலவீனம் அடைகின்றது…”

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரான மூலத்தில் மோதச் செய்து… மோதிய உணர்ச்சிகள் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று..
1.துரிதமாக இந்த உணர்வினைச் செலுத்துதல் வேண்டும்.
2.இப்படிச் செலுத்தி விட்டால் அடுத்து நல்ல சிந்தனைகள் வரும்
3.ஏன்…? எதனால்…? என்ற கேள்விக் குறி வரும்.
4.அப்படி அந்தக் கேள்விக்குறி வைக்கப்படும் பொழுது சிந்தனை சீராகி அதை நிவர்த்திக்கும் “உபாயம்” வரும்.

நிவர்த்திக்கும் உபாயங்கள் வந்த பின் நண்பரிடத்திலே சென்று இதை இப்படிச் செய்ய வேண்டும்… இப்படிச் செய்தால் நிச்சயம் நலமாக இருக்கும்... “அதற்கு உன்னுடைய உதவி வேண்டும்…” என்று சொன்னால் நீங்கள் எண்ணிய வலுவாந உணர்வுகள் நண்பனுக்குள் ஊடுருவி… உதவி செய்யும் பண்பு வரும்.

ஆனால் அப்படி எண்ணாதபடி இங்கிருந்து போகும் பொழுதே… நான் கடன் வாங்கினேன் கொடுக்க முடியாதபடி சந்தர்ப்பம் விரயமாகி விட்டது என்ற வேதனை வந்தால் என்ன ஆகும்…?
1.மூலாதாரத்தில் வேதனைகள் மோதி
2.மூண்டெழும் கனலாக அந்த உணர்வுகள் உடல் முழுவதும் பரவி
3.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பலவீனமடைந்து நண்பரிடத்தில் கஷ்டத்தைச் சொல்வோம்.

அவர் செவிகளிலே படுகின்றது. நம் கஷ்டத்தை எல்லாம் கேட்கப்படும் பொழுது அவருக்கு அந்த சந்தேகம் தோன்றுகிறது. பணம் கொடுத்தால் மீண்டும் வருமா…? என்ற சலனங்கள் அங்கே தோன்றி கேள்விக்குறியாக எழும்பிவிடும்.

“நம்முடைய மனமே” அவர் நமக்குக் கொடுத்து உதவும் அந்தப் பண்பை இழக்கச் செய்து விடுகிறது. அதனால்தான் இதை மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலத்தால் அறிந்து கருத்தறிந்து செயல்படும் அந்தச் சக்தி வேண்டும் என்று சொல்வது.

ஆகவே… அப்போது அந்தக் கருத்தை அறிந்திடும் நிலையாக…
1.அது எப்படி வருகின்றது…? எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று
2.மனவலிமையை நமக்குள் கொண்டு வர வேண்டும்.

அப்படி மன வலிமையைக் கொண்டு வர வேண்டும் என்றால் அதிகாலை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பதிவு செய்து வலு சேர்க்க வேண்டும்.

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலே நினைவினைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.அந்த மூலாதாரத்தில் இந்த அருள் உணர்வுகளைக் கனலாக நாம் மூண்டெழச் செய்தல் வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடல் முழுவதும் பரப்பச் செய்ய வேண்டும்.
3.கண்ணின் நினைவுகளை உடலுக்குள் செலுத்தி சோர்வை அகற்றி
4.வீரிய உணர்வாக எடுத்து நமக்குள் உற்சாகப்படுத்தி… மன வலிமையைக் கொண்டு வருதல் வேண்டும்.

தொழிலை எப்படிச் சீராக நடத்த வேண்டும்…? என்று அதற்குண்டான தெளிவான சிந்தனைகள் வரும். எல்லோரையும் நலம் பெறச் செய்யும் சக்தியாக வரும்.