ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2024

விண்ணுக்குச் செல்லும் “உந்து விசை”

உந்து விசை கொண்டு புவியின் ஈர்ப்பைக் கடந்து இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றனர். புவியில் விளைந்த எரிபொருளின் துணை கொண்டு அதை இயந்திரத்தில் அடக்கி அழுத்தத்தால் உந்தி விண்வெளியில் வீசுகின்றனர்.

இராக்கெட்டை விண்ணிலே பறக்கும்படி செய்து. விண்ணிலிருக்கும் பல நிலைகளை எளிதில் கவர்ந்து அதை அறிகின்றனர். உடல் வாழ்க்கைக்காக (சுகத்திற்காக) விஞ்ஞானிகள் இதைச் செய்கின்றார்கள்.

மெய் ஞானிகளோ விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அதனின் வலு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆனார்கள்
1.ஆதியில் அகஸ்தியன் இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்தாலும் தன் அருகில் உள்ள சீடர்களுக்கு இதனை உபதேசித்தருளி
2.அதனின் நினைவு கொண்டு நீங்கள் உடலை விட்டு அகலும் போது “உந்து விசையால்… என்னை உந்தித் தள்ளுங்கள்…!” என்றான்
3.முதல் முதலிலே அகஸ்தியன் அவ்வாறு விண்ணுலகம் சென்றான்.
4.அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் விண்ணுலகில் ஏழாவது அறிவாக அவரின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக விளைந்தார்கள்.

அக்காலங்களில் எழுத்தறிவு இல்லாததால் “உடலில் விளைய வைத்த உணர்வின் தன்மை கொண்டு பிறருக்குள் பதிவு செய்து…” அந்தப் பதிவின் நினைவின் ஆற்றலால் அவர்கள் வாழ்க்கையை இயக்கி… அவ்வாறு ஆரம்ப நிலையில் வளர்ந்தவர்கள் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

பிற்காலங்களில் மனிதனின் அறிவின் ஞானம் வளர… மனிதனின் உடலுக்கு இச்சைகள் சேர… இதுவே சொர்க்கம் என்ற நிலையில் அரசர்கள் சென்று விட்டார்கள்.

அரசனும் சரி… அவன் காட்டிய வழியில் சிக்கியவர்களும் சரி… அனைவரும் விண் செல்லாது அவர்கள் எடுத்துக் கொண்ட ஆசையின் உணர்வுகள் பேயாகச் சுழன்று… பேயின் உணர்வு கொண்டு தாக்கும் நிலைகளும்… பின் மிருக நிலைகளுக்கே சென்றனர். அரசன் வழியில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் ஞானிகள் காட்டிய அருள் வழியினை உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம் (ஞானகுரு).
1.அருள் வழியில் உங்கள் உணர்வுகளை உந்தச் செய்து… உணர்ச்சிகளைச் தூண்டும்படி செய்து
2.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நினைவு கொண்டு உங்களைத் தியானிக்கும்படி சொல்கிறோம்.

ஆகவே வேகா நிலை பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வினை நமக்குள் வினையாகச் சேர்த்து அதை நாயகனாக ஆக்க வேண்டும்.

வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகள் நம்மைச் சாடுகின்றதோ அத்தருணத்தில் “ஈஸ்வரா…” என்று அந்த மகரிஷிகளை எண்ணி அந்தச் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று உள் செலுத்தி நாம் கேட்டறிந்த தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

அதே சமயத்தில் தீமை செய்தவர்களுக்கும்… அதிலிருந்து அவரை மீட்டிட மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வுகளை நாம் பாய்ச்ச வேண்டும்.

இது தான் அன்றைய மகரிஷிகள் செய்த நிலைகள். அதனை நீங்கள் அனைவரும் பற்றிட முடியும் சாதாரண மக்களும் விண்ணின் ஆற்றலைப் பெரும் வண்ணம் தான் எளிதாகக் கொடுத்துள்ளார்கள் நமது தத்துவ ஞானிகள்.