மனித குல மேன்மையின் சிறப்புக்கு வழி காட்டிய மகான்கள் பலரும் உண்டு.
மனிதர்கள் வாழும் வாழ்க்கை நெறி முறைக்கு அன்பின் வழியாக ஜீவகாருண்யத்தையும் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியும் நல் நடத்தையும் பல வகைகளிலும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
அதைச் செவ்வெனச் செய்யத் தியான முறைகளையும் அதன் மூலம் தெளிந்து கையாள வேண்டிய வழி வகைகள் இன்னென்னெது தான்...! என்று
1.தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு
2.இவைகளே ஏணியாக நின்று உயிரான்மாவின் சக்தியை உயர்த்தும் என்ற போதனா முறைகளையும் கொடுத்தார்கள்.
ஆனால் தன் வாழ்க்கையையே தியானமாக்கும் நிலைக்கு அந்த எண்ண வலுவை கூட்டிக் கொள்ளும் ஆத்மாக்கள் எத்தனை பேர்களப்பா...?
உலகோதய வாழ்க்கை நடைமுறை இல்லற நெறிகளில் வாழ்ந்திடுபவர்கள் “தன்னைத் தாக்கிடும்...” எதிர் மோதல்களையே எண்ணித் தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தால் வரும் துன்பங்கள் விலகிவிடுமாப்பா...?
1.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே “தியானம்...!” என்பதை உணர்ந்து கொண்டு
2.நன் நெறிகளைக் கடைப்பிடிப்போன் - வரும் துன்பங்களைப் பெரிதாக எண்ணிடாமல்
3.அவைகளை விலக்கித் தன் ஆத்மாவையும் காத்துக் கொண்டு
4.வாழ்க்கைச் சுவைதனைச் சுவைத்து வாழும் வாழ்க்கையில் முழுமையை (பேரானந்தத்தை) அடைகின்றான்.
அப்படி இல்லாது துன்பங்களை எண்ணிக் கலக்கமுறும் செயலால் உயிரையே மாய்த்திட வேண்டும் என்ற தற்கொலையின் எண்ணச் செயலில் எதை உன்னால் அழித்திட முடிந்திடும்…?
1.ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையின் வளர்ச்சியில்
2.ஒன்று தன் செயலில் மற்றொன்றாக உருவெடுக்குமே அல்லாது
3.எதை அழித்திட முடியும்...?
நீ எடுத்த துக்க அலைகள் உன் உடலுக்குள் வலுவாக வீரியமாகச் செயல் கொண்டு ஆவிகளின் பிடியில் (இறந்த மனிதர்கள்) சிக்குண்டு அல்லலுறும் நிலையே வேண்டாமப்பா…!
1.சகலத்திற்குமே தீர்வுண்டு...!
2.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே இந்த முறைகளை உணர்த்துகின்றோம்.
மகான்கள் அளித்திட்ட நல் நிலையான அந்தப் பேறுகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் வழியில் நின்று அன்பு கொண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வைராக்கியமான சிந்தனையைக் கொண்டால் தான் ஆக்கம் அளிக்கும்.
மகாவீரர் காட்டிய உயிரின் பரி நிர்வாண நிலை என்ன...?
உலகோதயப் பேராசைகள் என்ற மாயப் பிடிப்பில் இருந்து விடுபட்டு உயிராத்மாவின் சக்தியை வலுக்கூட்டி வைராக்கிய சிந்தனையை வலுக்கூட்டவும் ஜீவகாருண்ய வழியில் ஒழுகும் முறை ஏற்படுத்திக் கொண்டதும் “தன் உயிராத்மாவின் சக்தியை உயர்த்தவே…!”
1.மகாவீரர் பட்டினி கிடந்தது
2.தன் ஆத்மாவில் எத்தகைய தீதும் சேராது... எண்ணம் கடந்த செயல் நிலையே.
ஆனால் இந்தக் கலியில் புறச் செயல்களின் (வேலைப் பளு) ஆதிக்கம் மிகுந்துள்ள சூழலில் உடலை வருத்திடும் செயலில் (விரதம்... நேர்த்திக் கடன்) எண்ணம் கூடி விட்டால் நல் ஆக்கம் பெறுவதில் தேக்கம் தான்.
மனிதச் சரீர உடல் உறுப்புக்கள் இல்லற ஒழுக்க நெறியில் கடமைகளும் ஆற்றிடச் செயல் கொள்ளும் பொழுது
1.உடல் உழைப்பு கொள்ளும் பொழுது
2.அந்தச் சரீரத்தில் குறைவுபட்ட சக்தியின் சேமிப்பிற்கு ஆகாரமும் தேவைதான்.
3.நாவின் சுவைக்காக அல்ல…!
4.ஆகாரம் புசித்தலில் அதிக அளவும் விஷம் தான்.
5.ஆகாரத்தை அமுதமாக உட்கொண்டே நல் நிலை பெற்றிடுங்கள்.
“காற்றிலிருந்து ஆகாரம் பெற்றிடும் செயலுக்கு...” ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் முறையும்... யாம் காட்டிடும் தியான வழியில் வழி உண்டு...!