ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 2, 2024

அபிஷேகம்

உயிருக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… அதனால் ஏற்படும் காந்தம் லட்சுமி… நாம் சுவாசிப்பதை இழுத்துத் தனக்குள் உருவாக்கும் நிலை வரும் பொழுது “பிரம்மமாகின்றது…”

சுவாசித்த உணர்வு எதுவோ அதனின் ஞானப்படி மணமாக நுகர்ந்து “அணுவாக உருவாக்கப்படும் பொழுது” அதன் செயலாக நம்மை இயக்குகின்றது.
1.வேதங்கள் இதைத்தான் கூறுகின்றது
2.சைவ சித்தாந்தமும் இதைத்தான் கூறுகின்றது.

நாம் நுகரும் சத்து சைவம். அந்த உணர்வின் சக்தியை நுகரப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம் நமக்குள் உணர்ச்சியைத் தூண்டும் உணர்வின் தன்மை மறைமுகமாக நமக்குள் இயக்குகின்றது.

நுகர்ந்த உணர்வின் தன்மை விசிஷ்டாத்வைதம்… அது அணுவாகி நம் உடலாகின்றது… அது (திடமாகும் போது) துவைதம்.

இதை எல்லாம் ஆலயத்தின் பண்புகளாகக் காட்டினார்கள் ஞானிகள். ஆலயங்களில் பக்தி கொண்டு நல்ல உணர்வுகளை நாம் பெற வேண்டும்.

தீப ஆராதனை காட்டும் போது அங்கே பொருள் தெரிகின்றது. அதைப்போல பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று நுகர்ந்து அதை நமக்குள் அணுவாக மாற்ற வேண்டும்.

1.தீபத்தின் ஒளி எப்படி மற்ற இருளை விலக்குகின்றதோ…
2.மறைந்த பொருளை அதனால் எப்படிக் காண முடிகின்றதோ
3.நமது நினைவாற்றல் தீமையின் உணர்வுகளை உள் புகுந்து அதை நீக்கிடும் அறிவின் ஒளியாகப் பெற வேண்டும்
4.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்படி வைத்தார்கள் ஆலயங்களில்.

அதே சமயத்தில் தீபத்தால் அங்கிருக்கும் (தெய்வ) உருவங்களைக் காட்டப்படும் பொழுது துவைதம். சிலையாக வடித்து வைத்தாலும் அந்தத் தெய்வ குணத்தின் தன்மை காவியமாகப் படைக்கப்பட்டுள்ளது.

அந்தக் காவியப்படி…
1.தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்
3.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும்
4.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் இந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும்.
5.ஆலயம் வரும் குடும்பம் முழுவதும் தெய்வ நிலை பெற வேண்டும்
6.அவர் உடல் முழுவதும் இந்த தெய்வ நிலை பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இது பக்தி…!

அதே சமயத்தில் அபிஷேகம் செய்கிறோம் என்றால் அந்தக் கல் சிலைக்கு அல்ல…! அங்கே அபிஷேகம் செய்யும்போது அதை உற்றுப் பார்த்து அந்த உணர்வை நாம் சுவாசித்தோம் என்றால் உயிரிலே பட்டு இந்த உணர்வுகள் உடல் முழுவதும் அபிஷேகம் ஆகிறது. நல்ல குணங்களுக்கு அது அமுதாகக் கிடைக்கிறது.

உதாரணமாக… பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம்… அவர் படும் வேதனைகளைச் சுவாசிக்கப்படும் பொழுது நஞ்சு கலந்ததாக நம் உடலுக்குள் பரவி விடுகின்றது.

குளவி ஒரு புழுவைக் கொட்டி விட்டால் புழுவின் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் விஷத்தன்மைகள் பாய்ந்த பின் அதைத் தாங்காதபடி புழு குளவியையே நினைத்துத் துடிக்கின்றது. குளவியின் விஷத்தின் தன்மை ஊடுருவி… புழு - குளவியாக மாறுகின்றது.

அதே போன்றுதான்
1.வேதனைப்பட்ட ஒரு மனிதன் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் இந்த உணர்வின் தன்மை அபிஷேகமாகி
2.விஷத்தன்மை உடலுக்குள் பரவி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் விஷமாக மாறுகின்றது
3.விஷம் என்ற அந்த வேதனையை நுகரச் செய்கின்றது… அதன் வளர்ச்சி பெறுகின்றது
4.வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வேதனையை உருவாக்கும் அணுக்களாக மாறுகின்றது
5.பின் நோயாகி மீண்டும் வேதனையைத் தான் நாம் அனுபவிக்க வேண்டி வருகின்றது.

ஆகவே வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்து விட்டால் அது நம் உயிரிலே பட்டு… அந்த உணர்வு உடல் முழுவதும் விஷ அணுக்களாகப் பரவுகிறது… அது துடிக்கின்றது பதறுகின்றது மயக்கம் அடைகின்றது.

ஆகவே அபிஷேகிக்க வேண்டியது எது…?
1.வேதனையை அல்ல.
2.அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து
3.இந்த உணர்வை உடலுக்குள் பரப்புதல் வேண்டும்… அபிஷேகித்தல் வேண்டும்.