ஒவ்வொரு நாளும் அந்தத துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் பிறவியில்லா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம். இந்த வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் பெறுகின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் மீது நாட்டம் செலுத்தினால்
2.அந்தப் பேரருள் உணர்வுகள் நம் உயிரிலே அரங்கநாதனாக மாறி
3.அதன் வழியில் தீமைகளை அகற்றிடும் உணர்ச்சிகளாகப் பரவி அந்த உணர்வே நம்மை ஆளும்… ஆண்டாள்...!
இதை அறிந்து கொண்ட நிலையில் நாம் அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்.
ஆனால் தீமை என்ற உணர்வை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அது அரங்கநாதனாக இயக்கி அடுத்துத் தீமையின் நிலையாகத்தான் நம்மை ஆளும் ஆண்டாள்.
தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் பெருக்கினால்
1.தீமையை நீக்கும் உணர்ச்சிகள் நம்மை ஆளும்... ஆண்டாளாக மாற்றி அமைக்கும்
2.இவ்வாறு நாம் வாழ்ந்தால் நமக்குள் ஆழ்வார் என்ற நல்ல உணர்வின் தன்மை அணுக்கள் உருவாகினால்
3.நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும்... நம் உடலும் தெளிந்த நிலைகள் பெறும்.
உடலை விட்டுப் பிரிந்தால் இந்த உடலில் விளைந்த சூட்சம சரீரம் (உயிராத்மா) துருவ நட்சத்திரத்தின் இணைப்பில் பிறவியில்லா நிலை அடையும் தன்மை வரும்.
எத்தகைய விஞ்ஞான அறிவு கொண்டாலும் இந்த உண்மையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற பகைமை உணர்வுகள் நம் உடலில் விளையப்படும் பொழுது (மாற்றியமைக்கவில்லை என்றால்) அது நாளடைவில் கேன்சர் டி பி. ஆஸ்த்மா சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு இருதய நோய் போன்ற நோய்களாக நமக்குள் விளைந்துவிடும்.
உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை மாற்றித் தீய உணர்வின் தன்மையாகி நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகளை அழித்து விடுகின்றது.
ஆடு மாடு மான் போன்ற உயிரினங்களை சாந்தம் கொண்டு அவைகள் தன் உடலை வளர்த்தாலும் புலியோ மற்ற மிருகங்களோ அவைகளை அடித்துக் கொல்லும் போது அந்த உடல்கள் அழிந்து விடுகிறது.
அதைப் போன்று தான்... நாம் சந்தர்ப்பத்தால் நுகர நேரும் வேதனை வெறுப்பு கோபம் பயம் போன்ற உணர்வுகள் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நம் உடல் உறுப்புகளைக் கொன்று புசித்துவிடும்.
இது போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து நாம் மீள்வதற்கு நம் முன்னோர்கள் மூதாதையர்களை அவசியம் விண் செலுத்த வேண்டும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தால் நாம் அங்கிருந்து எளிதில் சக்தி பெற முடியும்.
அதன் மூலம் நமக்குள் அறியாது வரக்கூடிய தீமைகளை எல்லாம் மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை என்ற நிலையை நாமும் அடைய வேண்டும்.
1.கோடிச் செல்வம் தேடினும் அந்தச் செல்வம் நம்முடன் வருவதில்லை
2.இந்த உடலும் நம்முடன் கூட வருவதில்லை
ஆகவே பேரருள் என்ற உணர்வின் தன்மையைக் கூட்டக் கூட்ட அந்த உணர்வின் ஒளியாக பிறவியில்லா நிலை நிச்சயம் அடையலாம்.
1.இதை விரும்புவோர் தான் இதைச் செயல்படுத்த முடியும்
2.உடலின் இச்சை கொண்டால் பலன் இல்லை...!
அருள் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் எடுத்தால் தீமைகளை அகற்றிச் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தேடிய செல்வத்தைக் காக்கும் சக்தியும் கிடைக்கும்.
இந்த உடலையும் சீராக வைக்கும். சிந்தித்துச் செயல்படும் தன்மையையும் செல்வத்தை நாம் தேடாது செல்வமே நமக்குள் வந்து குவியும் தன்மையும் வரும்.
1.ஆனால் “செல்வம் குவிகிறது...” என்று செல்வத்தின் மீது ஆசை வைத்தால்
2.நம் உணர்வின் தன்மைகள் அனைத்தும் இந்த உடலின் பற்றுக்கே வந்துவிடுகிறது.
ஆகவே நாம் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் சென்று இருளை அகற்றி அருள் வழியில் வளர்ந்து நாம் மெய்ப் பொருளைக் காண்போம்.