மீண்டும் மீண்டும் யாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துவது…
1.ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை…
2.அவர்கள் வழியிலேயே அதை அறிந்து… நாம் எவ்வாறு வாழ வேண்டும்…?
3.இந்த வாழ்க்கையில் எவ்வாறு தெளிவுடன் செயல்பட வேண்டும்…?
4.இந்தப் பிறவிக்குப் பின் அடுத்து நாம் எந்த உடலைப் பெற வேண்டும் என்பதனைத் தான்…!
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்… சந்தர்ப்பத்தால் அவனுக்குள் விளைந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றலைத் தனக்குள் பெற்றான்.
அந்த உணர்வின் துணை கொண்டு “வான இயலின்” ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்து… அது “புவி இயலாக” மாறும் பொழுது தாவர இனங்களாக உருவாகுவதையும்… அந்தத் தாவர இனங்களின் சத்தினை உயிரணுக்கள் (உயிர்கள்) நுகர்ந்து தனக்குள் அணுக்களாக மாற்றி உடல்களாக உருவாகுவதையும்… “உயிரியலாக” மாறுவதையும் அறிந்துணர்ந்தான்.
அதே சமயத்தில்
1.உயிரணு தோன்றி பல கோடிச் சரீரங்கள் பெற்ற பின்
2.அதனுடைய கடைசி முடிவு… அதனுடைய கடைசி எல்லை எது…? என்பதனையும் அகஸ்தியன் அறிந்து கொண்டான்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி பேரருள் பேரொளியாக துருவ நட்சத்திரமாகி… துருவத்தை எல்லையாக வைத்து இன்றும் தனது வாழ்க்கையை வழி நடத்திக் கொண்டு… அகண்ட அண்டத்திலிருந்து வருவது அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக…!
அதாவது உயிரணு தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனான பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி… அதையே கடைசி எல்லையாகப் பிறவி இல்லா நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.
அவனின்று விளைந்த உணர்வுகளை… அவனுக்குப் பின் வந்த மக்கள் யார் யாரெல்லாம் அதை நுகர்ந்து கொண்டனரோ… ஆறாவது அறிவை ஏழாவது நிலை ஒளியாக மாற்றும் திறன் கொண்டு… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றனர்.
ஆதியில் விண் சென்ற முதல் மனிதனான அகஸ்தியன்
1.அவன் வாழ்ந்த காலத்தில் தன் வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்தினானோ அவன் வழிப்படி நாமும் சென்றால்
2.மனிதனின் கடைசி எல்லையான சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து பிறவி இல்லா நிலை அடையலாம்
3.இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சூரியனே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் என்றும் நிலை கொண்டு வாழலாம்.
உயிரணு தோன்றி மனிதனான பின் உணர்வினை ஒளியாக மாற்றி அமைத்து உயிருடன் ஒன்றி வாழும் துருவ மகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து… நாம் அனைவரும் அதனின் ஈர்ப்பு வட்டதில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ முடியும்.