ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 7, 2024

அறியாது நமக்குள் வரும் தீமைகளையும் வேதனைகளையும் “நாம் துடைக்க மறுக்கக்கூடாது”

மனிதன் பல கோடிச் சரீரங்களில் தேர்ந்தெடுத்த ஆறாவது அறிவாகப் பெற்ற நிலையில் பிறிதொரு மனிதன் வேதனைப்படுவதை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல அறிவை அப்போதே அது மறைத்து விடுகின்றது.

1.அந்த வேதனையை நாம் துடைக்க மறுத்து விட்டால்… துடைக்கத் தவறிவிட்டால்…
2.அது சிறுகச் சிறுக நமக்குள் வளரத் தொடங்கி தேய்பிறையாக
3.அமாவாசைக்கு பின் சந்திரன் குறைவது போன்று குறைந்துவிடும் (கண்ணுக்கு புலப்படாது.

ஆகவே உயிரின் தன்மை கொண்டு ஒளி ஒடுங்கி விடுகின்றது மீண்டும் நல்ல உணர்வை நுகர்ந்தால் தான் நல்ல அறிவாகக் (பிரகாசத்தை) காண முடியும்.

உயிரணு தோன்றிய பின் மனிதனாக வரும் பொழுது பூரண சந்திரனைப் போன்று அனைத்தையும் அறிந்திடும் அறிவாகப் பெறுகின்றோம். ஆனாலும்
1.அந்த அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு பிறிதொரு கஷ்டங்களைக் கேட்டறிந்தால்
2.சிறுகச் சிறுக நம்முடைய நல்ல குணங்கள் அனைத்தும் நஞ்சு கலந்து நாம் தேய்பிறையாக மாறிவிடுகின்றோம்.

அதை மாற்ற வேண்டுமல்லவா…!

பௌர்ணமியைப் போன்று பூரண ஒளி பெற்ற துருவ நட்சத்திரம் பேரருள் பேரொளியாக நம் துருவப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பதும் அதைப் பின்பற்றிய அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைப் பெறக்கூடிய தகுதிக்கே உங்களுக்குள் இப்போது உபதேசிக்கப்படுகின்றது. உணர்வின் தன்மை பதிவாக்குகின்றோம்.
1.யாரெல்லாம் இதை மீண்டும் “கூர்மையாக நினைவுக்குக் கொண்டு வருகின்றார்களோ”
2.”துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்கின்றார்களோ…” அவர்களே அதைப் பெறும் தகுதி பெறுகின்றார்கள்.
3.அவ்வாறு தகுதி பெற்ற பின்… தான் பெற்ற அந்தச் சக்தியைத் தன் மனைவிக்கும் அதே போன்று கணவனுக்கும் கிடைக்க வேண்டும் என்று
4..யாரெல்லாம் இருவரும் ஒன்றிச் செயல்படுகின்றனரோ அவரே தீமைகளை வெல்லும் அருள் சக்தி பெற்றவர்களாகின்றார்கள்.
5.விண்ணின் நிலைகளை யாரெல்லாம் கூர்மையாகப் பார்க்கின்றார்களோ அவரே பிறவில்லா நிலை அடைகின்றனர்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்காகத் தான் விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நாம் கிழக்கே பார்த்து அதை விண்ணை நோக்கி எடுக்கும்படி வைத்தனர் அன்றைய ஞானியர்.

இன்று நாம் மனிதச் சரீரம் பெற்ற நிலையில் பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி அடைந்து வந்திருந்தாலும் அன்பு பரிவு பாசம் என்று பேரன்பு கொண்ட நிலையில்… பிறருடைய துயரத்தைக் கவர்ந்த பின் அதைத் துடைக்கத் தவறினால்… துடைக்க மறுத்தால்… அந்த உணர்வின் தன்மை நமக்குள் தீயவினைகளாகச் சேர்ந்து விடுகின்றது.

1.ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால் “அதை நாம் துடைக்க மறுத்து விடுவோம்…” இருக்கட்டும்… அவனை இரண்டில் ஒன்று பார்க்கிறேன்…! என்போம்.
2,ஒருவர் மீது பாசமாக இருந்து ஏதாவது ஆகிவிட்டால்… அவன் படும் வேதனையைப் பார்த்து
3.அவனுக்கு இப்படி ஆகிவிட்டதே… ஆகிவிட்டதே… என்று தான் சொல்வார்கள்… “வேதனைப்பட்டதைத் துடைக்க மறுப்பார்கள்…”

அவரிடம் நீங்கள் சொல்லிப் பாருங்கள் அதைத் துடைக்க மறுப்பார்கள்…!
1.மறுத்து விட்டால் அல்லது மறந்து விட்டால் அது தீமையின் உணர்வாக விளையத் தொடங்கும்
2.மனிதனின் வளர்ச்சியைத் நம்மைத் தேய்பிறையாக மாற்றிவிடும்.

இதை உணர்த்துவதற்குத்தான் அங்கே விநாயகருக்கு அருகில் வேம்பை வைத்துக் காட்டினார்கள். அதன் அருகிலே அரச மரத்தையும் வைத்திருப்பார்கள்.

இந்த பிரபஞ்சத்தில் உருவான நஞ்சினை அடக்கி ஒளியாக மாற்றியவன் துருவ மகரிஷி… அரசைப் போன்று அவன் ஓங்கி வளர்ந்தவன்… துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்
1.ஆகவே அதனின்று வரும் அருள் ஒளியின் தன்மை எடுத்தால் எத்தகைய நஞ்சின் தன்மையையும் அது பிளந்து விடும்
2.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் தகுதி நாம் பெறுகின்றோம்.

கணவனும் மனைவியும் அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான உணர்வை இருவருமே எடுத்து இணைத்துக் கொண்டால்… ஒளியின் அணுக்களாக மாற்றி விட்டால்… நஞ்சினை வென்றிடும் அணுவாக அது விளைகிறது.

அந்த உணர்வின் ஒளியைப் பெருக்க முடியும் அந்தத் தகுதியை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துவதற்கு தான் விநாயகர் தத்துவமாகக் கொடுத்தது.

அந்தத் தத்துவப் பிராகரம்… சாதாரண மனிதனும் தன் வாழ்க்கையில் தன்னை அறிதல் என்ற நிலைக்குத் தனக்குள் வரும் தீமைகளை… மேல் அழுக்கைப் போக்குவது போல ஆன்மாவில் படும் அழுக்கைப் போக்கி… தன் உடலுக்குள் ஜீவான்மாவை மறைத்திருக்கும் தீமையின் அழுக்குகளையும் நீக்க முடியும்.

ஆகவே அருவ நிலைகள் செயல்படுவதை அறிந்து கொள்ள விநாயகரை உற்றுப் பார்க்கப்படும் போது (அது துவைதம்) ஞானிகள் காட்டிய காவியத்தின் பிரகாரம் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
1.அங்கே காட்டப்பட்டிருக்கும் உண்மைப் பொருள்களை நாம் உணர்ந்து அதன் வழியில் நாம் நுகர்ந்தால் அத்வைதம்
2.இந்த உணர்வுகள் உயிரிலே பட்டு உடலில் விளைந்து மீண்டும் நுகந்தறியப்படும் போது விசிஷ்டாத்வைதம்
3.அந்த உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டு அதன் வழி நாம் விண் சொல்லும் நிலையாகப் பிறவியில்லா நிலை அடைய அது உதவும்.