ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 8, 2024

உடல் வலு… உயிரான்ம வலு… இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

மனிதன் “செயற்கையாக” வலுக்கொண்ட உணர்வுகளைச் சுவாசிப்பதற்காகத் தன் உடல் தசைகளை இயக்குகின்றான். எப்படியும் உடலில் வலுவைச் சேர்க்க வேண்டும் என்று அந்த உணர்வின் தன்மை கொண்டு “கை கால் அங்கங்களை மூட்டையைக் கட்டி அடிப்பதும்… கை கால்களை ஓங்கி அசைப்பதும்…” இந்த உணர்வின் தன்மை சிறுகச் சிறுக எடுக்கப்படும் பொழுது… தசைகளில் வலுவின் தன்மை வருகின்றது.

வலுவான நிலையினை உருவாக்கும் நிலையாகப் பித்த சுரப்பிகள் அதிகமாகச் சுரக்கின்றது. இப்படிச் சுரக்கப்படும் பொழுது என்னவெல்லாம் நடக்கிறது…?

1.சாதாரண மனிதன் கால் கிலோ கறியைச் சாப்பிடுவதே சிரமம்.
2.ஆனால் இவன் பத்துக் கோழியைச் சிறுகச் சிறுக ஒவ்வொன்றாக கூட்டி தன் உணவாக உட்கொண்டு தன் உடலிலே (தசைகளில்) வலு சேர்ப்பான்.

மிருகத்தின் விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை இவனுக்குள் சேர்க்கச் சேர்க்க பித்த சுரப்பிகளும் அதிகமாகச் சுரக்கப்பட்டு… மிருகங்களுக்கு எப்படி வலு இருக்கின்றதோ அதைப் போல் அவன் உடலில் தசைகளில் வலு உருவாகி… “சாதாரண மனிதனைக் காட்டிலும் மிருக பலம் கொண்டிருப்பான்…”

சாதாரணமாக… இரண்டு இன்ச் (2”) கனமுள்ள ஒரு கம்பியை வலுவான கருவி கொண்டு தான் வளைக்க முடியும். ஆனால் இவனோ தன் கையிலேயே ஒரு முறுக்கைச் சுழட்டுவது போன்று சுற்றி வளைத்து விடுவான்.

யானைக்கு எந்த வலு உண்டோ… அது போல பல மிருகங்களின் உணவை உட்கொள்ளும் பொழுது அவனின் உழைப்பும் இந்த உணர்வின் தன்மை நினைவும்… இவனுக்குள் வலு சேர்க்கும் உணர்வாக வளர்கின்றது.

இப்படி வளர்ச்சி அடைந்தவன் சாதாரண மனிதனைக் காட்டிலும் வலுக்கொண்டவன் ஆகிவிடுன்றான். ஆனால் அனேகமாக அவனுக்கு நோயே அதிகமாக வருவதில்லை…!

கடுமையான விஷம் இருக்கும் பொழுது மிருகங்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. நாளடைவில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாகி முதிர்வடையப்படும் பொழுது மிருகங்கள் அதனுடைய வளர்ச்சியின் தன்மை வாழும் காலம் குறுகியதாக இருக்கின்றது…. அதற்குள் மடிந்து விடுகின்றது

அதே போன்று ஒரு மனிதன் இப்படி விஷத்தன்மையைத் தனக்குள் வலுவாக்கிக் கொண்டாலும்…
1.விஷத்தின் தன்மை உடலில் அதிகரிக்கப்படும் பொழுது
2.இருதய வாயில்களிலோ சிறு மூளை பாகங்களிலோ உடனடியாகத் தெறித்து இரத்தக் கசிவாகி
3.நோய்வாய்ப் படாதபடி அவன் மடிந்து விடுவான்.

ஆக… அசுர உணர்வு கொண்டு மனித உடலை விட்டுச் சென்றால் எந்தக் கோழிகளை அதிகமாக உட்கொண்டானோ இறந்த பின் உயிரான்மா கோழியின் ஈர்ப்புக்குள் தான் செல்லும்.

பெரும்பகுதி பயில்வானாக இருப்பவர்கள் அனைவருமே கோழியைத்தான் அதிகமாக உட்கொள்வார்கள். மற்ற பறவை இனங்களையும் உட்கொள்வார்கள் பறவை இனங்கள் அனைத்தும் விஷத்தன்மைகளை அதிகமாக உட்கொண்டாலும் அதை ஜீரணிக்கக் கூடிய வல்லமை பெற்றது.

ஆகவே அந்த உடல் உறுப்புகளை இவன் உணவாக உட்கொள்ளும் பொழுது அது எப்படி விஷத்தினை அதனின் உணர்வு கொண்டு தனக்குள் வலுவானதோ இதைப் போன்று இவனுக்குள் உணவாக உட்கொள்ளும் ரசங்கள் பித்த சுரப்பிகளின் வளர்ச்சி அதிகமாகின்றது.

அதன் வழி கொண்டு அவன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் விஷத்தன்மையாக வருகின்றது. யானைக்கு எப்படி வலுவோ புலிக்கு எப்படி வலுவோ மற்ற மிருகங்களுக்கு எப்படி வலு வருகிறதோ இதைப்போல இவனுக்குள் வலு வருகின்றது.

1.ஆனால் இவன் மிருக குணம் கொண்டு தான் இருப்பான்
2.அவனிடம் யாராவது சாந்தமாகப் பேச முடியுமா என்றால் இல்லை.
3.அசுர உணர்வு கொண்டு பேசுவதும்… அவனை எதிர்த்துக் குறையாகப் பேசும் நிலை வந்தால்… அவனைத் தாக்கும் நிலையில் தான் வருவான்.

ஆகவே… அவனை மதித்து நடக்க வேண்டும். குத்துச்சண்டை வீரர்களிடம் நாம் அணுகினால் அசுர உணர்வைத் தான் அவன் காட்டுவான் மனித உடலிலேயே மிருகமாக மாற்றிக் கொள்கின்றனர்.

மற்றவர்கள் தன்னைப் போற்ற வேண்டும் என்று எண்ணுகின்றான். கோழி மற்ற பறவைகள்… விஷத்தை முறிக்கும் உணர்வுகள் அவன் உடலில் விளைந்ததால்… விஷத்தன்மையை ஒடுக்கும் தன்மை வருகிறது. வலுக் கொண்டவனாக இருக்கின்றான்.

ஆனாலும் விஷத்தை அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது “அடுத்த பிறவி எது…?” என்றால் கோழியாகத்தான் பிறப்பான்.
1.இன்று ரசித்து அதை உணவாக உட்கொள்கின்றான்.
2.எதை ரசித்து உட்கொண்டானோ உடலில் விளைய வைத்த அந்த உணர்வுகள் உயிருடன் சேர்த்து ஆன்மாவாக மாறும்.
3.எந்த மணத்தின் தன்மை ஆன்மாவிலே பெருகியதோ உடலை விட்டுச் சென்ற பின் அங்கே கோழிக்குள் தான் செல்வான்.