ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 2, 2024

தன்னைத் தான் உணர வேண்டியது மிகவும் முக்கியமானது

சொல்லாக எழுத்து வடிவில் எத்தனையோ சூட்சமங்களை “ஈஸ்வரபட்டனாகிய யான்” இங்கே வெளிப்படுத்தி வரும் நிலையில் நீங்கள் இதைக் கேட்டுப் படித்து அதைச் செயல்படுத்துவது என்பது மேன்மை தான்,

ஆனாலும் சொல்லப்பட்ட சூட்சமங்களைத் தன்னுடைய சிந்தனைத் திறனால் தன்னில் அறிந்துணர்ந்து தெளிதலே அதிமேன்மையாகும்.
1.”வாயு ஸ்தம்பம்...!” என்றிட்ட
2.ஸ்தூல சரீரத்தையே மிதக்க வைத்திடும் செயலுக்கும் பொருள் உண்டு.

பைராகிகளின் தொடர்பால் போகப் பெருமான் வைத்திய சாஸ்திரங்களை அறிய முற்பட்டார். பல கோடித் தாவரங்களின் சத்துக்களைப் பற்றியும் அதனின் இயல்புகளையும் அறிந்து கொண்டார்.

அது எல்லாவற்றையும் அறிந்த பின் அனுபோக முறை (தனக்குள் அனுபவபூர்வமாக உணர்ந்து) மருத்துவ ஸ்வரூபம் காட்டியது அவர் பெற்ற உயர் ஞான வளர்ச்சியால் தான்,

மூலிகைகளின் சாறு கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கில் வேறு சில மூலிகைகளையும் பதப்படுத்திப் பக்குவமாக இணைத்து திரியைப் போட்டு தீபமாக ஏற்றப்படும் பொழுது அந்தத் தீபத்திலிருந்து புகை வெளி வருகின்றது. (இன்று இராக்கெட்டில் வெளி வரும் அடர்த்தியான புகை போல)

காற்றின் அடர்வைக் காட்டிலும் மெலிதான அந்தப் புகை மேல் நோக்கிக் கிளம்பும் சூட்சமத்தை உணர்ந்து உலோகக் கூண்டுகளில் உள்ளே நிரப்புகின்றார்கள்.

நிரப்பிய அந்தக் கூண்டுகளை வான்வெளியில் பறக்கச் செய்யும் செயலாக அந்தக் கூண்டுகளுடன் இணைக்கப்பட்ட தூளியில் அமர்ந்து காற்றின் போக்கில் வான்வெளியில் சஞ்சரித்தார்கள் “அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும்…”

இன்று பூமியில் உள்ள கனி வளங்களை எடுத்து அதை எரி பொருளாக எரித்து இராகெட் மூலம் செயற்கைக் கோள்களை அனுப்புவது போல்
1.ஞானிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த மெய் ஞானத்தின் அடிப்படையில் இயற்கை முறையில் செய்வித்தார்கள்.
2.அதாவது பூமித் தாயின் இயற்கைச் சக்தியை “இன்றைய விஞ்ஞானம் நச்சாக மாற்றிக் கேடாக்கும் செயலைப் போன்று அல்லாமல்…”
3.தன்னுடைய அறிவின் ஞானம் கொண்டு அன்றைய சித்தர்கள் செயல்படுத்தினார்கள்.

அவர்கள் வெளிப்படுத்திய சூட்சமங்களையே இன்றைய விஞ்ஞானிகள் நுகர்ந்து தங்களுடைய கண்டுபிடிப்புகளாக உருவாக்குகின்றார்கள். இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு மூலமே அன்றைய சித்தர்களின் மெய் ஞானம் தான்.

மெய் ஞானம் கொண்டு உயிரான்மாவின் சக்தியை வலுக் கொண்டு சரீரத்தையே மிதக்க வைக்கும் செயலாக
1.சிவஸ்வரூபத்தைத் தன்னுள் கண்டு தெளிந்து
2.சிவஸ்வரூபத்தின் மூலத்தை அறிந்து
3.அதனுள் அதுவாகத் தான் ஒன்றி “தான் வேறல்ல... ஈசன் வேறல்ல...!” என்ற மனப்பக்குவம் கொள்வதே
4.அகத்தின் பொருளை... அந்தப் பரம் பொருளை அறியும் மார்க்கம் ஆகும்.

இதைச் சொல்லால் வெளிப்படுத்துவ்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது...!
1.அறிந்ததை உனர்ந்து கொண்டு
2.தானே ஈஸ்வரனுடன் ஒன்றும் “பிரம்ம சாயுஜ்யம்...!” பெறும்
3.ஆனந்த லயத்தை அனுபவிக்கும் எண்ண வலுவிற்கு ஒவ்வொருவரும் வலுக் கூட்ட வேண்டும்.
(சாயுஜ்யம் என்றால் உயிருக்குள் (ஈசனுக்குள்) புகுந்து அவனை ஆகர்ஷிப்பது)

மிருகங்கள் பறவை முதற் கொண்டு ஐந்தறிவு பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் ஞானம் உண்டு. இயற்கையுடன் ஒன்றி அறியும் திறனும் உண்டு.
1.ஆனால் ஐந்தறிவு படைத்த மனிதனோ
2.பகுத்தறியும் அறிவாற்றல் பெற்ற மிகுந்த திறன் உடையவன்.

இயற்கை ஞானத்தை மெய் ஞானமாக வளர்க்கும் பக்குவத்தில் அண்டங்களின் செயல்பாட்டை மூலச் சக்தியை அறிந்து கொள்ளும் செயலுக்கு ஒவ்வொரு மனிதனும் முற்பட வேண்டும்.

அந்த நிலையை அடைவதற்கு மகரிஷிகள் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை உடல் என்ற இந்தப் பிண்டத்தில் பக்குவமாக ஒவ்வொரு நாளும் விளைய வைக்க வேண்டும்.

எப்படி...?

1.உலகோதய ஆசை என்ற வலைக்குள் சிக்காமல்
2.அகத்தின் (தனக்குள்) எண்ணச் செயலில் தூய்மையும் சொல்லிலே அன்பும் கனிவும் கொண்டு
3.பரம்பொருளை அறிந்து கொள்ளும் வைராக்கியத்தைப் பெற்றிடும் பாக்கியமாகத் தன்னை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

மூல சக்தி... அது ஆட்டுவிக்கும் மூவுலகம்...!” என்ற செயலை உணரும் பக்குவம்… தன்னைத்தான் உணரும் செயலில் தான் (அது யாராக இருந்தாலும் சரி) அறிந்து கொள்ள முடியும்.