ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2024

“உயிரை ஒட்டி” நம் ஆறாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும்

பூரண நிலவாக இருக்கப்படும் போது சந்திரன் முழுமையான வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. காரணம் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளிக்கதிர்களை எந்தக் கோளும் இடைமறிப்பதில்லை…. நேரடியாகச் சந்திரனுக்கு வருகின்றது.

பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசிக்கின்றது. இருந்தாலும் அடுத்த நாளை எடுத்துக் கொண்டால் மற்ற கோள்கள் இடைமறிக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக பதினைந்து நாட்களில் தேய்பிறையாக மாறிவிடுகின்றது அதனுடைய ஒளி மங்கிக் கொண்டே வருகின்றது.

சூரியனிலிருந்து வரக்கூடிய அந்த ஒளிக்கதிர்களை மற்ற கோள்கள் தடைப்படுத்துவதனால் இருளடைந்து அதனுடைய முடிவுக்கு வருகின்றது… முழுமையாக மறைந்து விட்டால் அமாவாசை.

அதே போல் அது சமயம்
1.சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளிக்கதிர்களை மறு பிரதி பிம்பமாக (கண்ணாடி போல்) வெளிப்படுத்தும் சக்தி
2.சந்திரனிலிருந்து வருவது நம் பூமிக்கும் கிடைப்பது தடைப்படுகின்றது.
(பௌர்ணமி முழுமையாக இருந்தால் பூமியில் இரவிலும் அந்த வெளிச்சம் தெரியும்)

ஆனால்
1.அமாவாசைக்குப் பின் வெள்ளிக் கோள் அதன் அருகில் வந்து ஒளிக்ற்றைகளை எடுத்துக் கொடுக்கின்றது
2.சிறுகச் சிறுக சூரியனின் ஒளியைப் பெறப் பெற… சந்திரன் மறுபடியும் பூரண நிலவாக “பௌர்ணமியாக” வருகின்றது.

உயிரணு தோன்றி எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்று நம்மை மனிதனாக உருவாக்கியது நமது உயிர். முழு நிலா எப்படி இருக்கின்றதோ இதைப் போல்
1.மனிதன் இயன்றவரை அனைத்து நிலைகளையும் அறிந்து…
2.தீமைகளை அகற்றி வாழக்கூடிய உணர்வின் உணர்ச்சிகளை எழுப்பும் மனித உடலாக அமைக்கின்றது நமது உயிர்.

இப்படித் தெரிந்து கொள்ளும் சக்தியைக் கார்த்திகேயா என்று காட்டுகின்றார்கள். அதாவது நமது ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

மனித வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிந்து கொண்டு பிறிதொரு மனிதர்களைப் பார்க்கின்றோம். ஒருவன் அவனுக்கு ஆகாதவனை வெறுத்துக் கோபமாகப் பேசுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவனின் சிந்திக்கும் சக்தி இழக்கப்படுகின்றது.

கோபமாக நிந்தித்துக் கொண்டிருக்கும் அந்தச் செயலினை நாம் பார்த்தால்…
1.நமக்குள்ளும் கோபத்தின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
2.சிந்திக்கும் தன்மை இழந்து நிந்திக்கும் உணர்வு நமக்குள்ளும் வந்து விடுகின்றது.

மனிதனாக வருவதற்கு முன் புழுவிலிருந்து எத்தனையோ கோடி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சி பெற்ற நிலையில்
1.தன்னைக் காட்டிலும் வலிமையான உயிரினங்களிடம் சிக்கி
2.அது துன்புறுத்தி உணவாக உட்கொள்ளும் போது அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலையில்
3.உணவுக்காக அந்த மிருகம் இதைக் கொன்று தசைகளைத் தின்றாலும்
4.அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட உணர்வுகள் வலுவாகி
5.இந்த உயிரான்மா அந்த உடலுக்குள் சென்று அதனுடைய உணர்வை எடுத்து அதே உடலாக மாறுகின்றது.
6.அதனுடைய குட்டியாகும் போது அது இதைப் பாதுகாக்கிறது.

இதே மாதிரி ஒவ்வொரு உடலிலும் “தான் தப்பிக்க வேண்டும்” என்ற உணர்வைச் சேர்த்துச் சேர்த்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து… நம்மை மனிதனாக உருவாக்கிய “உயிரான ஈசனை நாம் மதித்து நடக்க வேண்டும்…”

வீட்டை அழகாகக் கட்டி வைத்திருந்தாலும் எப்படியும் அதில் தூசிகள் படுகின்றது… நூலாம்படைகளும் வருகிறது. அதை எல்லாம் துடைக்கத் தவறினால் தூசிகள் அதிகமாகி நெடி வந்துவிடும்.

அந்த வீட்டில் அடுத்து நாம் அமர முடியாது… குடியிருக்க முடியாது

அது போல் பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ தீமைகளைச் சந்தித்திருந்தாலும் அதை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய உடல் அமைப்பைக் கொடுத்தது நமது உயிர்.

சிந்தித்துச் செயல்படும் ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்றி இந்த உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி பெற்றவர்கள் தான் மனிதர்களான நாம்.

உடல் என்பது உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடல் ஒரு ஆலயம்… இது ஒரு கோட்டை.

ஆறாவது அறிவைக் கொண்டு தூய்மையான உணர்வுகளை இந்த உடலுக்குள் பெருக்கி… உயிருடன் ஒன்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடையும் பருவம் பெற்றது…
1.இதே உயிர் தான்…! அவனை ஒட்டி ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தி
2.வாழ்க்கையில் வரும் தீமைகளை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும்.
3.தவறினால் அழுக்குகள் அடைந்து ஒவ்வொரு குணமும் பாழ்பட்டுவிடும்..

எப்படிப் பூரண நிலா கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து முழுவதுமாக இருள் அடைவது போன்று நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் சிறுகச் சிறுக இருளடைந்து… உயிர் அதை இயக்க முடியாத நிலைகள் கொண்டு வெளியே சென்றுவிடும்.

வெளியில் சென்றாலும் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்ட மிருக இனங்களாகத்தான் அடுத்துப் பிறக்க வேண்டி வரும். மனிதனல்லாத உருவாகத் தான் பிறக்க நேரும்.

அதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான் தீமைகள் உங்களுக்குள் வரும் பொழுதெல்லாம்
1.வெள்ளிக் கோள் தன் ஒளிக்கற்றைகளால் சந்திரனுக்கு (அமாவசைக்குப் பின்) ஜீவன் ஊட்டியது போல்
2.அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
3.அருள் உணர்வுகள் உங்களுக்குள் பெருகப் பெருக இருளகன்று என்றுமே ஒளியின் அறிவாக நிலைத்திருக்க முடியும்.