மனித வாழ்க்கையில் நமக்குள் உயர்ந்த குணங்கள் இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அதனின் இயக்கச் சக்திகள் மறைந்து நஞ்சுக்குள் சிக்கித் தவிக்கும் நிலைகள் வந்து விடுகின்றது.
இதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு எத்தனையோ காவியங்களை ஞானிகள் எடுத்துரைத்துள்ளார்கள்.
ஆனால் ஆறாவது அறிவைப் பயன்படுத்த முடியாது அதை இழந்ததனால் இன்று எவரோ செய்வார்… தெய்வம் செய்யும்… ஜோதிடம் செய்யும்… காலங்கள் செய்யும்… யாகங்கள் செய்யும்… சாமியார் செய்வார்… மற்றவர்கள் செய்வார்கள்…! என்ற இத்தகைய எண்ணங்களைத் தான் பரப்பி வைத்திருக்கின்றோமே தவிர “தன்னை நம்பப் பழகவில்லை…”
ஏனென்றால் நாம் எத்தகைய உணர்வை நமக்குள் இணைக்கின்றோமோ நமது உயிர் அதை இயக்கி நமது உடலாக மாற்றி விடுகிறது. அதாவது
1.நாம் எண்ணிய உணர்வுகளை வித்தாக (வினையாக) மாற்றி அந்த வித்தின் நிலையை இயக்கி
2.நாம் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி அதே உணர்வின் உடலாக இயக்கி
3.அந்த உணர்வின் சத்துக்களாக நமக்குள் எவ்வாறு விளைகிறது என்ற நிலையை
4.ஞானிகள் தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தாலும் அதனை அறியாது இன்றும் இருக்கின்றோம்.
மற்ற உயிரினங்கள் அதனுடைய (எண்ணத்தால்) தியானத்தால் மனிதனாக வளர்ச்சிக்கு வருகின்றது. அப்படித் தான் நாம் வந்துள்ளோம். ஆனால்
1.மனிதனான பின் தீமைகள் அகற்ற முடியும்
2.மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து நமக்குள் உயர்ந்த நிலைகளை உருவாக்க முடியும் என்று இருந்தாலும்
3.இப்போது நாம் எதைத் தியானிக்கிறோம்…? என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நமது குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதே சமயம் குழந்தை நாம் எண்ணியபடி கல்வியில் சிறந்து வரவில்லை என்றால் அவனைக் கண்டு “இவன் இப்படி இருக்கின்றானே… அவன் எதிர்காலம் என்னவாகும்…?” என்று வேதனைப்படுகின்றோம்.
இந்த வேதனையை மீண்டும் மீண்டும் எடுத்து அவனிடம் கடிந்து இரண்டு தரம் அழுத்தமாகப் பேசும் பொழுது அவன் நம் மீது பாசமாக இருக்கும் உணர்வுகளுடன் கலந்து விடுகிறது.
1.நமக்குள் விளைய வைத்த வேதனையான நஞ்சை அவனுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.நம் சொல் கடினமாகி அவனுக்குள் அவன் அறியாது இயக்க நிலைகள் தடையாகி
3.உடல் நலக் குறைவாகி… காய்ச்சலோ மற்ற குறைபாடோ வந்து விடுகிறது.
ஆனால் அவன் தவறு செய்யவில்லை… நம்முடைய நிலைகள் இவ்வாறு ஆகிவிடுகிறது. இந்த மாதிரி நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்…? ஆனால் என்ன செய்கின்றோம்…!
குழந்தையை எண்ணி எண்ணி இப்படி ஆகிவிட்டானே என்று வேதனையை பாய்ச்சியபின் அந்தக் காய்ச்சலாகும் போது நமக்குள் வேதனை இன்னும் அதிகரிக்கிறது.
அவனைக் காத்திடும் நிலை கொண்டு… “வேதனைகளையே” நமக்குள் சமைத்துச் சமைத்து அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம்.
அவன் காய்ச்சலாக இருக்கப்படும் பொழுது “டேய் கண்ணு… கொஞ்சம் சாப்பிடுடா…!” என்று சொல்கின்றோம்.
அந்த வேதனையால் அவனால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால்… “சாப்பிட வேண்டும்…” என்று அழுத்திச் சொல்லப்படும் போது இன்னும் கொஞ்சம் அவனுக்கு வேதனை அதிகமாகி “நீ போ…” என்று வேகமாகச் சொல்லி விடுகின்றான்.
நாம் அதைக் கேட்ட பின்… அடப் பாவமே… அவன் சாப்பிடவில்லையே இரண்டு நாட்களாகி விட்டது… மூன்று நாட்களாக ஆகிவிட்டதே…! என்ற தாய்ப் பாசத்தால் இந்த உணர்வை நுகர்ந்து
1.அங்கே விளையும் நஞ்சினை இங்கே வித்தாக விளைய வைத்து
2.அவனை எண்ணும்போதெல்லாம் இது ஒரு தியானம் தான்.
இப்படி இருக்கின்றானே…! அவன் என்ன ஆவான்…? என்ற இந்த வித்தினை உருவாக்கி… அந்த உணர்வின் சத்தை நமக்குள் கருவாக்கி… அவனின் நிலையைத் தியானித்து… அந்தத் தீய வினையே நமக்குள் உருவாகிவிடுகிறது.
நாம் தவறு செய்யவில்லை அவனும் தவறு செய்யவில்லை
1.அவன் உயர வேண்டும் என்ற எண்ணத்தை வைத்தோம்
2.உயர வேண்டும் என்ற “செயலை” நமக்குள் வைக்கவில்லை.
பால் சத்தாக இருந்தாலும் அதற்குள் நஞ்சினை விட்டால் அது அந்தப் பாலைச் செயலற்றதாக ஆக்குவது போன்று “நம்முடைய நல்ல உணர்வுகள்” நாம் நுகர்ந்த உணர்வுகளால் நஞ்சாகப் பாய்ந்து… நஞ்சின் செயலாகவே மாறி விடுகின்றது.
இப்படித்தான் இன்று
1.குறைகளை எண்ணி எண்ணி அதையே தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.
2.ஆகவே நாம் எதைத் தியானிக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள்.