நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம்… உதவி செய்கின்றோம். ஆனால் அவன் மீது சிறிது வெறுப்பாகி விட்டால் “எனக்குத் தீங்கு செய்கின்றான்… இவனுக்கு எப்படி நன்மை செய்வது…?” என்ற எண்ணம் வருகின்றது.
அப்பொழுது நன்மை செய்வதற்குப் பதிலாக தீமை தான் செய்வோம். தீமை செய்யும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அந்த தீமையை விளைவிக்கும் அணுக்களே நமக்குள் உருவாகின்றது.
நண்பன் தீமைகள் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு அவன் பெற வேண்டும்
2.தீமையிலிருந்து அவன் விடுபட வேண்டும் என்று எண்ணினால் “நாம் அதுவாகின்றோம்”
3.தீமையிலிருந்து விடுபடச் செய்யும் உணர்வின் அணுக்கள் உடலிலே உருவாகி
4.நமக்குள் “தீமையை நீக்கும் சக்தியாக” உருவாகின்றது (இது முக்கியம்)
கோபமாக இருக்கும் பொழுது ஒரு பொருளின் தரத்தை நம்மால் சரியாகக் காண முடிகின்றதா…! ஒரு நூலையோ துணியையோ அல்லது மற்ற பொருள்களையோ பதார்த்தத்தையோ காண முடிகின்றதா…? கோபமாக இருக்கும் போது தரத்தை நிர்ணயிக்க முடியாது.
நண்பனாக இருந்தாலும் கூட அந்த நேரத்தில் அவனைப் பார்க்கப்படும் பொழுது அவன் ஒரு நல்லதைச் சொன்னால் இந்த நேரத்தில் நீ ஏனய்யா இங்கே வந்து வம்பு செய்து கொண்டிருக்கின்றாய்…? என்று அவரிடம் நாம் கோபமாகத்தான் பேச ஆரம்பிப்போம்.
அவர் நல்லதைச் சொல்லும் போது “நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ…! ஏன் வம்பு செய்கின்றாய்…?” என்று தான் சொல்வோம்.
1.இதைப் போன்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் நாம் அதுவாகின்றோம்
2.கீதாச்சாரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மனிதனின் வாழ்க்கையில் நாம் எண்ணியதை உயிர் தான் உருவாக்குகின்றது… உடலாக்குகின்றது. மீண்டும் நினைவாக்கும் பொழுது அதனைச் செயலாற்றுகின்றது அந்த நினைவுகள்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழிப்படி உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றேன்.
1.இந்தப் பேருண்மையை நீங்கள் நினைவாக்கிக் கொண்டால்
2.உங்களை அறியாது வரும் இருளை நீக்கி மெய்ப்பொருள் காணும் திறன் நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.அதை பெற வேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றேன்.
ஆகவே… இயற்கையின் இயக்க நிலைகளைத் தெளிவாக்குவதற்காக ஞானிகள் எத்தனையோ காவியங்களைக் கொடுத்துள்ளார்கள். காவியமாகப் படைத்து அந்தக் கருத்தினை நான் நுகரப்படும் பொழுது அந்தக் கருத்தே நம் உடலில் உணர்வின் சக்தியாக நமக்குள் விளையத் தொடங்குகின்றது.
உதாரணமாக… தமாசுக்காக ஒருவரைக் கேலி செய்து பாருங்கள்… இந்த உணர்வுகள் விளைந்து கொண்டேயிருக்கும். ஆனால் இவர் சும்மா தமாசு செய்து கொண்டே இருக்கின்றார்…! என்று அவர் நினைப்பார்.
கொஞ்சம் கொஞ்சமாக அவர் நம் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டு வருவார். ஒரு நாள் என்ன ஆகும்…? நான் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்… பொறுத்துக் கொண்டேயிருக்கின்றேன்… “இரு உன்னை என்ன செய்கின்றேன் பார்…!” என்று பகைமை ஆகிவிடும்.
விளையாட்டாகத் தானே…! என்று நாம் நினைப்போம் ஆனால் கடும் விளைவுகளை உண்டாக்கிவிடும். இதனுடைய வளர்ச்சி முதுமைக்கு வரும் பொழுது இப்படித்தான் வரும்.
இரண்டு பேர் சண்டை போடுவதை (அடிக்கடி) வேடிக்கையாகப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.நாளடைவில் இவன் மோசமான ஆள் என்று அடுத்தவரிடம் சொல்ல ஆரம்பிப்போம்… திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்போம்
2.இந்த உணர்வுகள் அடுத்து “நம்மையே மோசமான ஆளாக” மாற்றக்கூடிய அளவுக்கு அணுக்களாக விளையத் தொடங்கும்
3.எதை “மோசம்” என்று சொன்னோமோ அதுவே இங்கு வேலை செய்யத் தொடங்கிவிடும்.
இதைப் போன்ற நிலையெல்லாம் மாற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடனுக்குடன் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்கடுத்து…
1.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்
2.நல்லதை நுகரும் சக்தி அவர்களுக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
முதலில் அவர் செய்யும் தீமையைக் கண்ணின் கருவிழி பதிவாக்கி உயிரிலே பட்டு நுகரும் போது தான் அதை அறிகின்றோம். ஆனால்
1.அதற்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்து விட்டால் அது அடங்குகின்றது
2.நமக்குள் தீமையை வளர்க்கும் தன்மையைக் குறைக்கின்றது.
இவையெல்லாம் ஆலயத்தின் பண்புகளாக ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டப்பட்ட நிலைகள்.
அகண்ட உலகில் உருவாகும் உணர்வினைச் சூரியன் நுகர்கின்றது… பிரபஞ்சமாக உருவக்கி வாழ்க்கையைத் தொடங்குகிறது… உயிரணுக்களை உருவாக்குகின்றது.
உயிரணுவாகத் தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனாக்குகின்றது உயிர். தீமைகளை மாற்றி விட்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் சக்தி மனிதனுக்குத் தான் உண்டு.
மிருக நிலையில் இருந்து வளர்ச்சியாகி மனிதன் ஆன நிலையில் ஆதிமூலம் என்றும் விநாயகர் என்றும் உயிரால் உருவாக்கப்பட்ட நிலையை விநாயகர் தத்துவம் தெளிவாகக் காட்டுகின்றது. ஆக மனிதனாக உருவானபின் அவனே முழு முதல் கடவுள்.
அதே சமயத்தில் இந்த மனித உடல் பெற்ற நிலையில்
1.உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக மாற்றி ஒளிச் சரீரமாக உருவாக்கவில்லை என்றால்
2.அடுத்து நாம் தேய்பிறை தான்… வளர்ச்சி குன்றுகிறது (மனிதனல்லாத உருவாகப் பிறக்க வேண்டி வரும்).
மனிதனைக் காட்டிலும் மற்ற உயிரினங்கள் எப்படி எல்லாம் வேதனைப்படுகிறது என்று பார்க்கின்றோம் அல்லவா. நாம் இன்று மனிதனாக இருக்கலாம். சந்தர்ப்பத்தால் விஷத்தன்மையை அதிகமாக நுகர்ந்து விட்டால் விஷம் கொண்ட ஜந்துக்களாக உயிர் மாற்றிவிடும்.
காரணம் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் வளர்ந்து விட்டால் உடலை உருவாக்கிய அணுக்களை அது உணவாக உட்கொள்ளும் டிபி போன்ற எத்தனையோ கொடிய நோய்களாக வந்து கடுமையான விளைவுகளை அனுபவிக்க வேண்டி வருகிறது.
அப்போது உணர்வுகள் குறைந்து விட்டால் உடலும் சுருங்கிவிடும். உடலில் வேதனை அதிகரிக்கும் பொழுது எவ்வளவு வலுக் கொண்டவர்களாக இருந்தாலும் சுருங்கி விடுகின்றது. இதெல்லாம் இயற்கையினுடைய சில நியதிகள்.
1.ஆனால் அருள் ஒளியின் உணர்வை நாம் கூட்டக் கூட்ட
2.“என்றும் ஒளியின் சுடராகப் பரவுகின்றது… இருளை மாய்க்கின்றது…”
இருளை மாய்த்து ஒளியின் உணர்வின் சக்தியைப் பெற வேண்டும் அதற்குத்தான் இந்தப் பயிற்சியை உங்களுக்கு திரும்பத் திரும்ப கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
ஆகவே நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான். பேரின்பப் பெரு வாழ்வு என்றும் பெருவீடு பெரு நிலை என்றும் அது வளர்ச்சி ஆகிக் கொண்டே இருக்கும்.