ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 24, 2024

குல வழியில் வரும் சாப அலைகளின் தாக்கம்

நம்முடைய மூதாதையர்கள் பண்டைய காலங்களில் இரண்டு தலைமுறை அல்லது மூன்று தலைமுறை வரையிலும் ஒன்றாகச் சேர்த்து “ஒரு பெரிய குடும்பமாக” வாழ்ந்து வந்திருப்பார்கள்.

காலத்தால் சிறு வேதனைகள் வளர்ந்து மனஸ்தாபம் ஆகி ஒருவரை ஒருவர் பிரிய நேர்ந்தால் இவர்களுக்குள் சொத்து பாகங்கள் பிரிக்கப்படும் பொழுது சிறிதாகிவிடும்.

ஏகமாக இருக்கப்படும் பொழுது சொத்தின் பெருமான அளவு அது அதிகரித்திருக்கும். ஆனால் பிரித்து வரப்படும் பொழுது
1.அவர்கள் உழைப்புக்கொப்பத் தன் பங்காகத் தனக்கு நிறையக் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்
2.அது குறைவாக வரப்படும் பொழுது “என்னை இப்படி மோசம் செய்து விட்டார்களே…” என்று சாப அலைகளை விடுவார்கள்.

நான் ஒன்றி வாழ்ந்தேன்… நம்பி இருந்தேன் என்னை மோசம் செய்து விட்டார்கள்…! என்ற இந்த உணர்வின் சக்தியை வளர்த்து விட்டால் அதற்கப்புறம் ஒவ்வொரு நிமிடமும் அவர்களைக் காணும் போதெல்லாம் வெறுப்பின் தன்மை வரும். “இதுவும் தியானம் தான்…”

அந்த வெறுக்கும் தன்மை வளர்ந்து வளர்ந்து இவரைப் பார்க்கும் பொழுது அவருக்கு வெறுப்பும்… அவரைப் பார்க்கும் பொழுது இவருக்கு வெறுப்பும் இப்படி வந்து விடுகிறது.

அதே சமயத்தில் இவரைச் சார்ந்தவர்கள் இரண்டு பேர் சாட்சியாக வருவார்கள் அதே மாதிரி அவர் பக்கம் ரெண்டு பேர் சாட்சியாக வருவார்கள்.

சார்ந்து பேசினாலும் இவர்கள் இடும் சாப அலைகள் அவருடன் இணைந்த மற்றவர்களுக்கும் இது இணைந்து விடும்.

எனக்கு மோசம் செய்தானே… இவன் எல்லாம் உருப்படுவானா…? அவன் குடும்பம் நன்றாக இருக்குமா…? என்று இப்படிச் சொல்லும் பொழுது இவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்ன சொல்வார்கள்…?

நீ இப்படிச் சொல்லலாமா…? நீதான் அப்படி ஆவாய். அவனுக்குச் சாட்சியாக இருந்து அவனைக் கெடுத்தவனே நீ தான்…! என்று
1.நண்பனுக்காக அல்லது இவனைப் போற்றி வளர்க்கும் நிலைகள் சாட்சியாகச் சொல்லப்படும் பொழுது
2.கேட்டறிந்த உணர்வுகள் கடும் சாப வினைகளாக இப்படிச் சிக்கிக் கொள்கின்றார்கள்.

அடிக்கடி இப்படிப் பேசி வித்தாக ஆனபின் என்ன நடக்கிறது…?

ஒரு மரத்தில் விளைந்த வித்தை ஒரு இடத்தில் நாம் ஊன்றினால் அந்த உணர்வின் துணை கொண்டு… காற்றிலிருந்து தன் தாய் மரத்தின் சத்தை நுகர்ந்து அது அதே மரமாக விளைகின்றது.

அது போன்று
1.ஒருவன் சாபம் இட்ட உணர்வுகள் நாம் கேட்டறிந்த பின் அந்த வித்தாக நமக்குள் விளைந்து
2.அந்த வித்து தன் மணத்தை அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வை அதைக் கவரும் பொழுது
3.ஆன்மாவாகச் சேர்த்து நம் உணர்வுடன் சேர்க்கப்படும் பொழுது
4.”அந்தச் சாபமிட்ட நிலைகள்” அடுத்து நாம் எந்தக் காரியம் செய்தாலும் அதைத் தடைப்படுத்துவதாக இது வந்து கொண்டேயிருக்கும்.

பாலில் பாதாமைப் போட்டு எவ்வளவு சுவையாக வைத்திருந்தாலும் அதிலே ஒரு மிளகாய் பட்டு விட்டால் அந்தக் காரத்தின் சுவை முன்னணியில் இருந்து அதை ரசிக்க விடாது செய்யும்.

இதைப் போன்று தான் சாபத்தின் நிலைகள்
1.உயர்ந்த குணங்கள் கொண்டு இருந்தாலும்… நல்லதைச் செய்தாலும் நல்ல பெயர் வாங்க முடியாது
2.இவர் என்ன பெரிதாகச் செய்தார்…? என்று எதிர்மறையான கேள்வியைக் கேட்டு விடுவார்கள்.
3.அவர் சொன்ன அந்தச் சொல்லையே நாம் திரும்பத் திரும்ப எண்ணி இதுவே நஞ்சாகி… கடுமையான வினைகளாக நமக்குள் விளைந்து விடும்.

அந்தச் சாப அலையின் தொடர் குடும்பத்தில் பாய்ந்து தாய்மார்கள் கர்ப்பமுற்றார்கள் என்றால்… இத்தகைய உணர்வுகளைக் கேள்விப்பட்டு அதைக் கவர நேர்ந்தால் கருவிலிருக்கும் குழந்தைகளுக்கும் குல வழியில் சாப அலைகள் தொடர்ந்து விடுகிறது.

குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அந்தக் குடும்பத்தில் வளர்ந்த குழந்தைகளுக்குத் தன்னை அறியாமலே சில தவறான நிலைகளும்… பல பல நோய்களும் உருவாகி விடுகின்றது.

ஆக… கருவில் இருக்கும் போது சாபங்களைக் கேட்டு நுகர்ந்தறிந்தால் தான் அது பதிந்து அந்த நிலை வருகின்றது

1.ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால் எல்லோருக்கும் அந்த சாப அலைகள் சாடுவதில்லை.
2.சாபமிட்டதைப் பற்றிப் பேசி… சாபமிட்ட குடும்பத்தைப் பற்றிப் பேசி இருந்தால்
2.கருவற்றிருக்கும் குழந்தைகளில் அது வித்தாகி… அதுவே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

சாப அலைகள் “குல வழியில்” இப்படித்தான் வருகிறது…!

இவர்கள் தவறு செய்யவில்லை என்றாலும்… சந்தர்ப்பத்தால் எதனை உற்றுக் கேட்டு அதைக் கவர்ந்தனரோ வந்து இவ்வாறு இயக்கிவிடுகிறது.

இதையெல்லாம் துடைப்பதற்காக எத்தனையோ வழிகளை மகா ஞானிகள் கண்டுணர்ந்தார்கள். அதைத்தான் உங்களுக்கு திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.