ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 20, 2022

நாம் அனைவரும் சகோதரர்களே…!

 

எவ்வளவு உயர்ந்த நிலைகளை நாம் பேசிக் கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தில் நம் நல்ல எண்ணங்கள் எல்லாம் என்ன ஆகிறது...!

உதாரணமாக... கடலிலே பெருங்காயத்தைக் கலக்கினால் அந்த வாசனை சிறிது நேரமே இருக்கிறது. அடுத்த நிமிடம் அது கரைந்து விடுகின்றது. பெருங்காயத்தின் மணம் இல்லாது போய்விடுகின்றது.

ஆக… கடலைப் போல ஒவ்வொரு நிமிடமும் வேதனையும் வெறுப்பும் உப்பு கைப்பது போன்ற உணர்வுகளே அதிகமாக இந்த மனித வாழ்க்கையில் இருக்கின்றது.

1.நல்லதை எண்ணினாலும் கடலில் கரைத்த பெருங்காயம் போன்று சிறிது நேரமே அது வலுவாக இருக்கின்றது
2.அடுத்த நிமிடம் நமக்குள் இருக்கக்கூடிய அந்த நல்ல எண்ணங்கள் அனைத்தும் மறைந்து
3.கவலையும் வெறுப்பும் சோர்வும் வேதனையும் படக்கூடிய உணர்ச்சிகளை நமக்குள் தூண்டி
4.”நம்மால் முடியாது போலிருக்கிறது...” என்ற நிலை வந்து விடுகிறது.

சிறிது நேரம் சிந்திக்கின்றோம் நல்லது செய்ய வேண்டும் என்று... ஆனால் அடுத்த கணம் அது எப்படி நடக்குமோ…? எப்படி நடக்கப் போகின்றதோ…? நாளைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லையே...! என்று தனக்குத்தானே பலவீனமாகி சந்தேக உணர்வு தோற்றுவிக்கின்றது.

மனித வாழ்க்கையில் இத்தகைய நஞ்சுக்குள் சிக்கப்பட்டு நம் எதிர்காலமே நசிந்து கொண்டிருக்கும் நிலையாகத் தான் இன்று இருக்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால்
1.நாம் கூட்டமைப்பாக இருந்து மெய் ஞானிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் எண்ணி ஏங்கி
2.அந்த உணர்வை நமக்குள் பதியச் செய்து… அந்த உணர்வின் அலைகளாக நமக்குள் பெருகச் செய்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நம் உடலுக்குள் அதைச் சேர்த்து வலுவாக்க வேண்டும்.

அனைவரும் சேர்த்து ஒன்றாக இயக்கி இந்த உணர்வின் தன்மை கொண்டு உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கச் செய்ய வேண்டும்.

நாம் யாரையெல்லாம் சந்திக்கின்றோமோ…
1.எந்த மதத்தவராக இருந்தாலும்
2.எந்த இனத்தவராக இருந்தாலும்
3.எந்த மொழி பேசுவோராக இருந்தாலும் அவர்களை எல்லாம் சகோதரர்களாக எண்ணி
4.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உதாரணமாக… நமக்கு ஒரு பொருள் வேண்டும் என்றால் எந்த மதத்தவரோ... இனத்தவரோ... வேறு மொழி பேசுவோரோ... கடை வைத்திருந்தாலும் அவர்களிடம் சென்று வாங்கத்தான் செய்கிறோம்.

அதே போல் அவர்களுக்குப் பொருள் வேண்டும் என்றால் நம்மிடம் வந்து வாங்கத்தான் செய்கிறார்கள்.
1.இதில் வேற்றுமை இருக்கின்றதா…? இல்லை…!
2.இவ்வாறு வேற்றுமை இல்லாத நிலைகள் வாழப்படும் பொழுது
3.நம் மனதிற்குள் மட்டும் ஏன் வேற்றுமைகளைக் கொண்டு வரவேண்டும்...?

வேற்றுமை ஏற்பட்டால்
1.இந்த மனித வாழ்க்கையில் நமக்கு நாமே நைந்து கொள்ளும் நிலை தான் வருகின்றது
2.மனிதன் என்ற நல்ல உணர்வு அழிந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே… ஒவ்வொரு நிலைகளிலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் எந்த மொழி பேசுவோராக இருந்தாலும் இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடும் நிலையாக
1.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்றும்
2.எங்களுக்குள் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்றும் நாம் எண்ணி
3.நமக்குள் இருக்கும் பகைமை உணர்வுகளை ஓங்கச் செய்யாது அதைத் தாழச் செய்ய வேண்டும்.

இதைச் சிறிது பேர் செய்வதில் பலனில்லை.

காரணம்... எல்லோரும் இதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாதத்தில் ஒரு நாள் பண்டிகையாகத் தேர்ந்தெடுத்து
1.சகோதர உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும்
2.மனிதனின் பண்பை வளர்க்கவும்... இருளை நீக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தவும்
3.மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான் இது.

திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்

எத்தனையோ உணர்வுகள் நமக்குள் மாறி மாறிச் சுழன்று கொண்டிருக்கின்றது. திரும்பத் திரும்பச் சொல்லி நினைவின் ஆற்றலை பெருக்கச் செய்து அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் பருக வேண்டும் என்பதற்குத்தான் சொல்வது (ஞானகுரு).