ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2022

பரமாத்மாவிற்கு நாம் செய்ய வேண்டிய சேவை

 

நம் பூமியில் எங்கெங்கே எந்தெந்த ஊர்களில் பயமும் அதிகமான வெறுப்பும் வேதனையும் கொதிப்பும் கொண்டு அந்த உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்களோ
1.இவை அனைத்துமே மேக மண்டலங்களில் கலக்கின்றது.
2.மழை நீராகப் பெய்யும் பொழுது கடும் நோயாகவே மாற்றுகின்றது.

இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் இன்று விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ புதிது புதிதாக உருவாக்குகின்றார்கள்... படைக்கின்றார்கள். அதில் உள்ள தீமைகளை அகற்றுகின்றார்கள். ஆனாலும்
1.அதிலே நஞ்சினைக் கலக்கின்றான்
2.தீமைகளை அகற்றுவதற்காக இத்தகைய நிலையைச் செயல்படுத்துகின்றான்.
3.தீமையை நீக்கிய அந்த நஞ்சின் உணர்வுகளைச் சூரியன் ஆவியாக மாற்றுகின்றது
4.மேகக் கூட்டங்களில் கலக்கின்றது... மழை நீருடன் கலக்கின்றது.
5.விஷத்தன்மைகளை உலகெங்கிலும் பரப்புகின்றது.

உலக மக்களுடன் நாம் அன்றாடம் பழகுகின்றோம்… உலகத் தொடர்பும் கொண்டுள்ளோம். அதன் மூலம் விஞ்ஞான அறிவால் உலகெங்கிலும் நடக்கக்கூடிய சம்பவங்களை ஒரு நொடிக்குள் நாம் காண நேருகின்றது.

எல்லாவற்றையும் படமாக்கி டி.வி. பத்திரிக்கை மூலம் ஒலி ஒளி என்ற அலைகளைப் பரப்புகின்றனர்.
1.அந்த ஒலிகள் நம் செவிகளில் படுகின்றது… உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது
2.தூண்டியவுடன் கண்ணின் நினைவாற்றலை அங்கே செலுத்துகின்றோம்… அந்த அசம்பாவிதங்களைக் கண் கவர்கின்றது…
3.கவர்ந்த்தை மூக்கின் வழியே நாம் சுவாசிக்கின்றோம்… உயிருடன் இணைக்கப்படுகின்றது… உணர்வின் அறிவாக அறிகின்றோம்.

அதன் உணர்வாக நமது உயிர் “ஓம் நமச்சிவாய…” என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது. உடலுக்குள் அணுவாக்கி விட்டால் நாம் எதை வேடிக்கை பார்த்தோமா… எதை ரசித்தோமோ… அங்கே நடக்கும் அசம்பாவிதங்களைப் பார்த்தவுடன் அந்த உணர்வின் கருவாக இங்கே உருவாகி அதன் உணர்வாகவே நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

உலகில் எங்கெங்கு சிதைந்திடும் நிலையாகிப் போர்க்களங்கள் ஆகி மடியச் செய்யும் உணர்வுகள் பெற்றதோ அதை எல்லாம் நுகர்கின்றோம்.
1.அங்கே மடிகின்றான் என்று உணர்கின்றோம்
2.இதே உணர்வு நமக்குள் வரும் போது நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை அது மடியச் செய்கின்றது
3.மனிதனை மடியச் செய்யும் உணவுகளை வளர்க்கின்றது.

நுகர்ந்த உணர்வுகள் எதிரி என்று ஆகிறது. நன்மைகளை இழக்கச் செய்கிறது… பகைமையை வளர்க்கின்றது.

அதை எல்லாம் செயலற்றதாக ஆக்குவதற்குத்தான் நமது குரு காட்டிய வழியில் கல்யாணராமா…!
1.நம் எண்ணங்கள் உணர்வுகளை ஒன்றாக்கிப் பகைமை என்ற காண்டீபத்தை ஒடித்துவிட்டு
2.அன்பென்ற அரவணைக்கும் சக்தியை வளர்த்து உயர்ந்த நிலைபெறச் செய்வதற்கு இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

யாம் உபதேச வாயிலாகக் கொடுக்கும் இந்த அருள் உணர்வுகளைக் கூட்டமைப்பாக எடுத்து நீங்கள் ஒவ்வொருவரும் அந்த ஞானிகளின் உணர்வுகளை மூச்சலைகளாக வெளிவிடும் போது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்கின்றது. அந்த அருள் உணர்வுகள் மேகங்களில் கலக்கப்படுகின்றது.

மேகக் கூட்டங்களில் இந்த உணர்வுகள் பரவப்படும் போது
1.உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருடனும் பற்று கொள்கின்றோம்
2.நமக்குள் அந்த அருள் பாசத்தை வளர்த்துக் கொள்கின்றோம்.

எதை வைத்து...?

இந்தப் பேரானந்தத்தைப் பேரின்பத்தை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்று செலுத்தப்படும் போது அதே உணர்வின் தன்மை பேரின்பம் பெறும் உணர்வின் தன்மையை நமக்குள் வளர்க்கின்றது.

இத்தகைய உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டால் அந்த மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.
1.பரமான நம் பூமியின் எல்லையில் “பரமாத்மாவாக…” மாறுகின்றது.
2.பூமியில் வாழும் மக்கள் அனைவரும் இந்த பரமாத்மாவிலிருந்து அந்த அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது அவருடைய “ஆன்மாவாக…” அது மாறுகிறது.
3.அப்போது அருள் உணர்வுகளை அங்கே இயக்கி… பேரின்பம் பெறும் உணர்வின் தன்மை அவர்கள் “ஜீவான்மாவாக…” மாறுகின்றது.

ஜீவாத்மாவாக மாறும் பொழுது பகைமையற்ற உணர்வுகளையும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகளையும்… ஒன்றுபட்டு வாழும் உணர்வுகளையும்… அணுக்களாக மாற்றப்படும் பொழுது அது அவர்களின் “உயிரான்மாவாக…” மாறுகின்றது.
1.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மையும்
2.பிறவியில்லா நிலை என்ற நிலையையும் அடைகின்றனர்.

ஆகவே நமது எண்ணங்கள் எவ்வாறோ அதன் வழியே அது நடக்கின்றது. அது தான் கீதையிலே நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.