ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2022

நம்முடைய நண்பன் யார்… எதிரி யார்…?

 

கடை வைத்து நாம் வியாபாரம் செய்கின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்து விட்டுக் கடையில் உள்ள சரக்குகளைப் பார்க்க வேண்டும்.
1.இந்தப் பொருளைப் பயன்படுத்துபவர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்.
2.அவருடைய உள்ளங்களில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
3.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்…. எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்.
4.எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்.
5.பிறர் எங்களைப் பார்க்கும் பொழுது நல் உணர்வின் தன்மை கொண்டு பார்க்க வேண்டும் என்று
6.இத்தகைய உணர்வலைகளைக் கடையில் முதலில் பரப்பிவிட்டு வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்.

ஒரு தடவைக்கு இரண்டு தடவை மூன்று தடவை மாற்றி மாற்றி அதைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் உணர்வின் தன்மை வலுப்பெறும்… தொழில் சீராகும்… வியாபாரத்தில் நஷ்டம் என்பது வராது.

ஒவ்வொரு நிமிடமும்…
1.நாம் எடுத்துக் கொண்ட இந்த உயர்ந்த உணர்வுகள் ஒலிபரப்பாகி
2.அது மீண்டும் நமக்குள் கவரப்பட்டு ஒரு பாதுகாப்புக் கவசமாக
3.சக்தி வாய்ந்த உணர்வின் அலையாக அங்கே தேங்கி நிற்கும்.

அப்போது நாம் யாரைச் சந்தித்தாலும் நாம் பேசும் உணர்வுகள் இது முன்னணியில் சென்று அங்கே நல்ல உணர்வுகளை ஊட்டும். யானை வரும் பின்னே… மணி ஓசை வரும் முன்னே…!

உதாரணமாக சங்கடமான அல்லது வேதனையான உணர்வுகளை ஒரு பதினைந்து நிமிடம் நாம் எடுத்து விட்டால் அடுத்து நாம் எந்த நல்ல காரியத்திற்குச் சென்றாலும் அல்லது நல்லதையே செய்தாலும் நாம் பேசும்போது
1.இந்த உணர்வுகள் முன்னணியில் சென்று
2.நாம் எந்த வேதனைப்பட்டோமோ அந்த உணர்ச்சிகளை அடுத்தவருக்குத் தூண்டி
3.அந்த உணர்வின் எண்ணத்திலேயே நம்மைப் பார்க்க வைக்கும்.

எந்த வேதனையினால் துடித்துக் கொண்டிருக்கின்றோமோ இந்த உணர்வின் தன்மை அங்கே செயல்பட்டு நாம் எடுத்துக் கொண்ட அந்த காரியத்திற்குத் தடை விதிக்கும் நிலையாக உருவாகிவிடும்.

இதைத்தான் “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…” என்று சொல்வது.

ஆகவே நாம் வெளிப்படுத்தும் உணர்வின் நிலைகள் உடனே அங்கே காட்டிக் கொடுத்து நம்முடைய உணர்வே அங்கே நம்மை எதிர்க்கச் செய்யும்… மற்றவர்கள் அல்ல.

1.நேற்று நல்லதைச் சொன்னார்கள்… இன்று என்னமோ கெட்டதாகச் சொல்கிறார்கள் என்று நாம் எண்ணினாலும்
2.நாம் அன்று எடுத்துக் கொண்ட உணர்வின் நிலை அவர்களுக்குள் பாய்ந்து அவ்வாறு அவர்களைப் பேசச் செய்கின்றது.
3.அவர்கள் நம்மை அவ்வாறு பேசவில்லை… நம் உணர்வே நமக்கு எதிரியாக மாறி விடுகின்றது.

ஆனால் நம்முடைய உணர்வே நமக்கு நண்பனாக வேண்டுமென்றால் அடிக்கடி அவசியம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். ஆத்ம சுத்தி மூலம் நல்ல உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கச் சுவாசிக்க நம் உயிர் அது அனைத்தையும் படைக்கின்றது.

இதைத் தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய் என்று சொல்வது.

இவ்வாறு மகரிஷிகளின் அருள் ஒளியை உயிரின் துணை கொண்டு நமக்குள் படைத்து
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலே சுழல வேண்டும் என்ற நினைவைக் கூட்டி வளர்த்தால்
2.மீண்டும் ஒரு உடல் பெறாத நிலையில் நாம் அங்கே விண் செல்கிறோம்.