ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2022

கண்ணன் தேரின் சக்கரத்தை அழுத்தினான் என்றால் உட்பொருள் என்ன…?

 

அர்ச்சுனன் சகலகலா வல்லவன் என்று காட்டுகின்றார்கள். சகல சக்தியான அந்த வல்லமை பெற்ற நிலைகள் நம் எல்லோருக்கும் உண்டு என்பாதை நினைவுபடுத்திக் கண்ணின் நினைவு கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்றால் உடனே ஈஸ்வரா…! என்று இங்கே புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி அங்கே தாக்க வருபவர் உள்ளத்திற்குள் அதைப் பாய்ச்ச வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையைத் தன் புலனறிவால் எடுத்து
1.தீமை செய்ய வேண்டும் என்று எவன் எய்ய விரும்புகின்றானோ
2.அவனுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சி
3.என்னுடன் நேசமாக வரும் எண்ணங்கள் அங்கே வளர வேண்டும் என்று
4.இந்த அம்பை நம்மை எய்யச் சொன்னார்கள்.

அதாவது அங்கிருக்கும் தீய அலையின் தன்மையை வீழ்த்தச் சொன்னார்கள் ஞானிகள். ஆனால் ஆளையே வீழ்த்தச் சொன்னார் என்றும் அது தான் வீரம்… வல்லமை…! என்று இங்கே காட்டுகின்றார்.

ஒருவன் நமக்குக் கெட்டது செய்கிறான் என்றால் பதிலுக்கு அவனை அழிக்க வேண்டும் என்று தான் பெரும் பகுதி எண்ணுகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் ஈஸ்வரா அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து
1.அறியாத நிலையில் செயல்படுவதிலிருந்து அவன் விடுபட வேண்டும்
2.நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் அவனுக்குள் உதயமாக வேண்டும் என்ற இந்த அம்பை எய்ய வேண்டும்.

இது மனிதனின் தலையாயக் கடமை…!

ஏனென்றால் மனிதன் உருவாக்கும் நிலைகள் பெற்றவன்… பிரம்மாவாகச் சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்றவன். ஒளியின் சிகரமாகச் செல்லக்கூடியவன். இதை அனுபவத்தில் கொண்டு வருவதற்குத் தான் கீதா உபதேசத்தின் நிலைகளைக் காட்டினார்கள்.

எந்தெந்த உணர்வின் தன்மை தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளை நினைவு கொண்டாயோ அந்த உணர்வின் தன்மை கொண்டு
1.சகலத்தையும் உருவாக்கும் ஆற்றலாக இந்த உடலை உருவாக்கினேன்.
2.அனைத்திலும் நான் கலந்துள்ளேன்
3.எதை எடுத்தாலும் எதை நினைத்தாலும் நான் அதிலே கலந்தே வந்தவன்.
4.நீ எதை நினைக்கிறாயோ அதை நான் வழி நடத்திச் செல்கின்றேன் என்று கண்ணன் சொல்வதாக…
5.அதாவது “நம் கண்கள்…!” சொல்வதாகக் கீதையில் அவ்வளவு தெளிவான நிலைகளைத் தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.

இதை நாம் உணர்ந்து கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்ய பழகிக் கொள்ள வேண்டும்… தயவு செய்து அலட்சியப்படுத்தி விடாதீர்கள். ஒவ்வொரு நொடிக்கும் அதை எடுத்துப் பழகுங்கள்.

1.எப்பொழுது ஒருவர் நமக்குத் துன்பம் ஏற்படுத்தும் நிலைகள் ஏற்படுத்துகின்றாரோ
2.அந்தத் துன்பம் நமக்குள் வந்த பின் அவனைத் துன்ப்படுத்த வேண்டும்… அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ
3.அது தான் ஓ…ம் நமசிவாய சிவாய நம ஓ…ம்.
(துன்பம் ஏற்படுத்தியது நமக்குள் சிவமாகி ஓ…ம் நமசிவாய… நம்மிடமிருந்து அதுவே அடுத்தவரைத் துன்ப்பபடுத்தும் சக்தியாக வெளி வருகிறது சிவாய நம ஓ…ம்)

எந்தக் குணத்தை எண்ணுகின்றேனோ அது எனக்குள் ஜீவன் ஆகி ஓ…ம் என்று பிரணவத்தின் சக்தியாக வளர்கின்றது. அந்தச் சக்தி என் உடலுக்குள் சேருகின்றது. அது தான் ஓ…ம் நமசிவாய சிவாய நம ஓ…ம். நான் எதை எண்ணினாலும் அந்த உணர்வு எனக்குள் சிவமாகிறது (உடலாகிறது).

நான் ரோட்டில் நடந்து செல்லும் போது
1.ஒருவன் செய்கையைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி… அந்த உணர்வை எனக்குள் சேர்க்கும் பொழுது உமிழ் நீராகச் சேர்ந்து சிவம் (உடல்) ஆகின்றது.
2.அடுத்து ஒருவன் தவறு செய்கின்றான்… அயோக்கியத்தனம் செய்கின்றான்… என்று பார்த்து அந்த உணர்வை எடுத்தவுடனே அதுவும் உடலாகிறது

இப்படி சதாசிவமாக நம் உடலாக ஆகிக் கொண்டே உள்ளது. வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சையும் உடலாக ஆக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

கீதையில் சொன்னது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகிந்றாய். நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அந்தச் சுவாசத்தின் வழி அதுவாகிறாய்.

எப்பொழுது தீமை உங்களுக்குள் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மெய் ஒளியின் சக்தியை நமக்குள் சிவமாக ஆக்கிடல் வேண்டும்.

1.எதிரிகள் எத்தகைய நிலைகள் கொண்டு நம்மைத் துன்புறுத்துகின்றனரோ
2.தீய உணர்வுகள் நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறதோ
3.எத்தகைய ஆவியின் தன்மை நமக்குள் தீமையை உருவாக்குகின்றதோ
4.அப்போதெல்லாம் ஈஸ்வரா என்று (புருவ மத்தியில்) குருக்ஷேத்திரப் போரில் நின்று
5.அந்த மகரிஷிகள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எனக்குள் இருக்கக்கூடிய ஆன்மாக்கள் அனைத்தும் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும்
5.என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கக் கூடிய சக்தியாக வளர வேண்டும்
6.என் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுக்க வேண்டும்.

யார் நமக்குத் தீமை செய்தாலும் மேலே இந்த உணர்வின் தன்மை அங்கே பாய்ச்சப்பட்டு அவன் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும் பிறருக்கு நன்மை செய்யக்கூடிய சக்தி அங்கே ஓங்கி வளர வேண்டும் என்று
1.இந்த அம்பை அங்கே பாய்ச்ச வேண்டும்
2.அர்ஜுனன் சகலகலா வல்லவன் என்று சொன்னாலும் அந்த அருள் உணர்வின் தன்மை கொண்டு
3.இந்த எண்ணத்தை அந்த ஸ்தலத்திலே நிறுத்திவிடு… குருக்ஷேத்திரப் போராக நடத்து…! என்று காட்டினார்கள்.

ஆனால் போரை நடத்த வேண்டும் என்றாலும் அங்கே என் குருநாதர் இருக்கின்றார் என் சகோதரர்கள் இருக்கிறார்கள் இவர்களை வைத்து நான் எப்படி சண்டையிடுவது…?

உன் சகோதரன் என்று இருந்தாலும் அவனை அறியாத விஷமான எண்ணங்கள் அவனையே அந்த உணர்வுகள் அழித்திடும் எண்ணமாக வருகின்றது. தீமையுடன் சேர்த்துத் தீமையை உருவாக்கும் நிலையாக வருகின்றது.

1.அவன் தீமை செய்யும் எண்ணத்தை அழிக்க நீ எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் சக்தியை
2.உயர்ந்த உணர்வின் அம்பாக அங்கே பாய்ச்சு… அங்கே தீமையை வீழ்த்து…! என்று சொன்னான்.

இதனுடைய ரகசியத்தை அன்று மெய் ஞானியான வியாசன் சொன்ன நிலைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“கண்ணன் தேரின் சக்கரத்தை அழுத்தினான்…” என்று காட்டினால் அதனுடைய உட்பொருள்
1.அந்தத் தீமையான உணர்வு தனக்குள் வராதபடி அழுத்தி
2.தன் உணர்வின் எண்ண அலைகளை அங்கேயே பாய்ச்சி அந்த உணர்வை அழித்தான்
3.நல்ல உணர்வின் தன்மையை ஊட்டச் செய்தான்… இந்த அம்பைப் பாய்ச்சினான்.

இதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.