ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2022

ஓ...ம் நமச்சிவாய… சிவாயநம ஓ…ம்…! - இதனின் உட்பொருள் என்ன…?

 

நம்மைத் திட்டியவர்களைக் கூர்ந்து கவனித்த பின் நாம் என்ன சொல்கிறோம்.

“இருக்கட்டும்… நான் பார்க்கின்றேன்… உதைக்கின்றேன் பார்… அவன் வந்துவிடுவானா… நான் பார்த்து விடுகிறேன்…!” என்றெல்லாம் உணர்ச்சிவசப்படுகின்றோம்.

வருவோர் போவோரிடம் எல்லாம் இதைச் சொல்லி “இப்படிச் செய்கிறான்… அவன் உருப்படுவானா…?” என்று சொல்கிறோம்.

கீதையிலே சொன்னது… நீ எதை நினைக்கிறாயோ அதுவாகின்றாய்.

அவன் உருப்படுவானா…? என்று சொல்லும்போது நாம் கெட்டு… அதைச் சமைத்து… வாக்கைச் சொல்லி… அங்கே பட்டு… அடுத்தவரிடம் சொல்லி அப்படியா…? என்று இரண்டாவது வருகின்றது.
1.முதலில் நாம் தான் கெடுகின்றோம்.
2.இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் திட்டுகிறோம் என்று சொன்னால் நம் உயிரான ஈசன் உடனே அதைப் பிரணவம்… ஜீவன் ஆக்கி விடுகின்றான். நமக்குள் சக்தியாக அது இயங்க ஆரம்பிக்கிறது.

ஓ…ம் நமச்சிவாய… நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வு ஓ…ம் பிரணவம். அந்த உணர்வின் சக்தி எனக்குள் சேர்ந்தபின் சிவமாகிறது (உடலாகிறது). ஓ…ம் நமசிவாய… சிவாய நம ஓ…ம்.

நான் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன். சொல் வெளிப்பட்டவுடன் அந்த உணர்வு எனக்குள் ஜீவன் பெறுகின்றது அந்த உமிழ் நீர் எனக்குள் சிவம் ஆகின்றது. ஓ…ம் நமச்சிவாய என்னுடைய சொல் உங்களிடம் சென்றபின் அது உதவி செய்ய வைக்கும்.

ஆனால் “உதைக்கிறேன்…” என்று சொல்லைச் சொன்னேன் என்றால் அடுத்து சிவாயநம… உதைக்க வேண்டும் என்று இந்த உடலையே இழுத்துக் கொண்டு போகும்.

1.நான் எடுத்துக் கொண்ட உணர்வின் அலை ஈசனிடம் பட்டவுடன் பிரம்மமாகி
2.“பிரணவம்…” அந்தச் சக்தி என் உடலில் அந்த ஆற்றலாக இயக்கும்.
3.ஏனென்றால் சிவம் (உடல்) என்பது உயிரிலே படும் உணர்வால் இயக்கக்கூடிய பொம்மைதான்.

கோபம் வந்துவிட்டால் என்ன செய்கிறோம்…? கையைப் பிடித்து நிறுத்திப் பாருங்கள்… நிற்க முடியுமா என்று…!

கோபம் வந்துவிட்டால் கொஞ்சம் நிறுத்து… இரு…! என்று யாராவது சொன்னால் கேட்போமா…? எல்லாம் உன்னால்தான் வந்தது…! என்று அவரையே உதைக்கச் செல்வோம்.

ஆகவே நான் எதை எடுக்கிறோமோ உயிருக்குள் பட்டவுடன் ஈசனுக்கு எரிச்சல் ஆகிறது. இந்த உணர்வைத் தாங்கி உடலுக்குள் சக்தியாகப் பட்டால் என்ன செய்யும்…?

நம் மீது நெருப்பு பட்டால் என்ன ஆகும்…? சிவன் மேலே பட்டால் ஐய்யய்யோ… ஐயோ…! என்று துள்ளுவோம்.

அதே மாதிரியான உணர்வுகள் ஈசனுக்குள் (உயிருக்குள்) பட்டவுடன் ஐய்யய்யோ.. ஐயோ…! என்று துள்ளுவோம். ஆகவே இதை எல்லாம் நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தந்த உணர்வின் தன்மை நாம் சுவாசிப்பது எதுவோ அதனின் செயலின் தன்மையாகத் தான் நாம் இயக்கப்படுகின்றோம்.
1.தீமை செய்யும் உணர்வின் தன்மை என்றால் அது நமக்குள் சிவமாகி
2.ஐய்யய்யோ என்று உடலிலே குடைந்து நோயாக வந்து கொண்டே இருக்கும்.

அதைக் காட்டுவதற்குத் தான் மூஷிகவாகனா (மூச்சு - வாகனம்) விநாயகருக்கு முன் மூஞ்சூரைப் போட்டு வைத்திருக்கின்றார்கள். ஒருவனை அழித்து விடுவேன் என்ற உணர்வை நாம் சுவாசித்தால் நம் உடலான கட்டிடத்தை அந்த உணர்வுகள் கவர்ந்து இடித்துவிடும்.

ஆனால் முதலிலே விநாயகருக்கு முன் மாம்பழத்தைத் தான் போட்டுக் காட்டினார்கள். காய் கனிகளைச் சாப்பிட்டுத் தனக்குள் வாகனமாக அந்தச் சுவை கொண்டுதான் உடலை வளர்த்து வந்தது என்று காட்டினார்கள்.

அதாவது விநாயகர் தத்துவத்தைப் படமாகக் காட்டும் போது முதலிலே எலி இல்லாது இருக்கும். அதற்குப் பின்னாடி தான் எலியைப் போட்டுக் காண்பித்தார்கள்.

இது எல்லாம்... அந்த இயற்கையின் நிலையை நாம் கண்ணுற்றுப் பார்த்ததும் தெரிந்து கொள்வதற்காக வேண்டி ஞானிகள் தெளிவான நிலையில் நமக்குக் கொடுத்திருக்கின்றார்கள்.