ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2022

வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்கள்

 

ஆதிமூலம் என்ற உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வு கொண்டு சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடலை உருவாக்கியது.

மனித உடலை உருவாக்கிய எண்ணங்களுக்கு எல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர்…. கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கிய உயிரைக் கணேசா…! என்று ஞானிகள் காரணப் பெயர் வைத்துள்ளனர்.

மூஷிகவாகனா… எதை எதையெல்லாம் சுவாசித்தோமோ சுவாசித்த உணர்வின் தன்மைகளை வாகனமாக அமைத்துப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

1.ஆதியிலே அவ்வாறு வளர்ச்சி அடைந்த முதல் மனிதன் அகஸ்தியன்…
2.தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைச் சுவாசித்தான்.
3.தன் உணர்வின் தன்மையை ஒளியாக்கி அந்த உணர்வின் துணையால் மூஷிகவாகனா…
4.ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். “வசிஷ்டரும் அருந்ததியுமாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து…” இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியாகச் சென்று உள்ளார்கள்.

திருமணமாகும் ஒவ்வொரு கணவன் மனைவியும் இந்த நினைவினைத் திருப்பூட்டும் போது எடுத்து அதைத் தமக்குள் வினையாக்க வேண்டும். ஆக… அருள் மகரிஷிகளுடன் ஒன்றி வாழும் நிலைகள் எப்படிப் பெற வேண்டும் என்பதற்குத்தான் அருந்ததி என்ற நட்சத்திரத்தைக் காணச் செய்தார்கள்.

விநாயகரை வணங்கும் பொழுது…
1.எங்கள் அன்னை தந்தையின் அரவணைப்பில் தான் மனிதனாகப் பிறந்துள்ளோம்.
2.எங்கள் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பொழுது அந்த வசிஷ்டரும் அருந்ததியும் போன்று
3.இரு மனமும் ஒன்றி வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
4.அவர்கள் வாழ்ந்த காலத்தில் தங்கள் வாழ்க்கையில் இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்த அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற
5.இந்த உணர்வினை ஏற்று… இந்த உணர்வினைப் பதிவு செய்து விண்ணை நோக்கி ஏகி
6.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த அலைகளைப் பரப்ப வேண்டும்

கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்த இணைகள் இருவரும் ஒன்றாகி சூரியனின் காந்த சக்தியால் அது கவரப்பட்டு அலைகளைத் தொடரச் செய்வதுதான் இது.

இவ்வாறு அதை இணைந்து விட்டுத் திருப்பூட்ட வரும் பொழுது
1.விஷ்ணு அக்கினி… தனக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை எண்ணி
2.அந்த உணர்வின் துணையால் எங்கள் இரு மனமும் ஒன்றாக வேண்டும் என்று இன்று இணைக்க வேண்டும்.

பின்… மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் எங்களிலே வளர வேண்டும்.
1.என்றென்றும் எங்கள் அன்னை தந்தையரின் அரவணைப்புடன் நாங்கள் வாழ்ந்திட வேண்டும்.
2.அவர்கள் உணர்வுகள் எங்களுக்குள் குருவாக இருந்து வழி நடத்தும் அந்த அருள் சக்தி நாங்கள் இருவரும் பெற வேண்டும் என்று
3.திருப்பூட்டும் முன் மணமக்கள் ஏங்கி இருக்க வேண்டும்

அதே சமயத்தில் வாழ்த்துரைக்க வந்த மற்றவர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழச் செல்லும் அவர்கள் இருவரையும் ஒன்றாக இணைக்கச் செய்ய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டு அந்த மணமக்களைப் பார்த்து…
1.வசிஷ்டரும் அருந்ததியும் போல இரு மனமும் ஒன்றி அவர்கள் வாழ வேண்டும்
2.வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
3.அவர்கள் அன்னை தந்தை அருள் ஒளியால் தெளிந்த மனங்கள் கொண்டு மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் என்று
4.அனைவரும் இதை எண்ணிக் கண் ஒளியால்… நினைவால் அந்த உணர்வலைகளைப் பரப்ப வேண்டும்.

மணமக்களைக் கருத்தில் கொண்டு இந்த எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது இந்த உணர்வின் சக்தி அங்கே அவர்களுக்குள் ஆழமாகப் பதிந்து நம்முடைய வாழ்த்துரைகள் அவர்கள் வாழ்க்கையைச் சீராக்க இது உதவும்.

ஆக…
1.மணமக்களை எவ்வாறு வாழ்த்த வேண்டும்…?
2.வாழப் போவோருக்கு நாம் எப்படி நல்லாசி கூற வேண்டும்…?
3.நாம் கொடுக்கும் அந்த ஆசிகள் இருளைப் போக்கிடும் அரும் பெரும் சக்தியாக எப்படி வலுப்பெறச் செய்ய வேண்டும் என்று தான்
4.நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.