ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 6, 2022

கடலில் அலைகள் பாய்வது போல… புயல் அடிப்பது போல… வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் வருகிறது

 

நன்றாகத் தான் இருப்பீர்கள். ஒன்றுக்கும் ஆகாதவன் யாராவது வந்து “நீ என்னய்யா செய்துவிடுவாய்…?” என்பான்.

கேட்டவுடனே “உன்னைத் தொலைத்து விடுகிறேன்…” என்று மனதில் வேகம் வரும். “இவனுக்குக் குசும்பைப் பார்….” என்போம். இப்படி உணர்ச்சி வசப்படும் நிலை வந்து விடுகிறது. அப்பொழுது என்ன செய்கின்றோம்…?

1.அவன் சொல்லக்கூடிய நிலைகளில் அகம் (நான்) என்ற அலைகளில் நாமும் சிக்கி
2.அவனை அழித்து விட வேண்டும் என்றே நினைப்போம்.
3.அதற்குண்டான முயற்சிகளை எல்லாம் எடுத்துக் கொண்டே இருப்போம்
4.அவனை அழித்து விட வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வந்து நம்மை அழித்துவிடும்.
5.நாம் சேர்த்து வைத்த செல்வத்திற்கு வேலை வந்துவிடும்.

செல்வத்தைச் சேமிக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் மேலே சொன்ன மாதிரி “அடுத்தவனை அழிக்க வேண்டும்…” என்று கோர்ட்டு… கேஸ்… சாப்பாடு… அது இது என்று பணத்தை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு
1.என்றைக்கு இதிலிருந்து விடுபடப் போகின்றோமோ…? தெரியவில்லை...! என்பார்கள்.
2.இப்படித்தான் அந்தப் பணம் காணாமல் போகும்.

இவருக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் ஆதரிப்பார்கள் ஆனால் பணம் எல்லாம் போய்க் கொண்டே இருக்கும் சம்பாதித்த பணம் காணாமல் போய்விடும். இந்த அலைகளில் சிக்கி விடுகின்றோம்.

அதே போன்று குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருப்பார்கள். ஒரு பையன் சொன்னபடி ஏதாவது கேட்காது இருப்பான்.
1.அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும்...
2.இவனுக்குச் சொத்தே கொடுக்கக் கூடாது... என்று மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள்.

“நல்லவனாக நடக்க வேண்டும்” என்று அவன் வந்தாலும் கூட “தொலைந்து போகிறவன் எங்கேயோ போடா… ஒரு காசு கூட உனக்குக் கிடையாது…!” என்று சொல்வோம். இந்த அலைகளில் சிக்கி விடுவோம்.

அவன் மேல் முதலில் பாச அலையாக இருக்கின்றோம். திடீரென்று வெறுப்பலை வந்துவிட்டால் அதில் மூழ்கி விடுகின்றோம்.

இவனை எண்ணி இங்கே மூழ்கினாலும் மற்ற பிள்ளைகளிடமும் அதைப் பேசுவோம் டேய்… அவனை மாதிரி யாரும் ஆகிவிடாதீர்கள்…! என்போம். இந்த அலைகள் அங்கேயும் போய் மோதும்.

என்னுடைய அப்பா எப்பொழுது பார்த்தாலும் அவனை வைத்துக் கொண்டு என்னையும் சும்மா ஜாடை பேசிக் கொண்டே இருக்கிறார் என்று அடுத்த பிள்ளையும் சொல்ல ஆரம்பிப்பான். அங்கேயும் வெறுப்பலைகளில் சிக்கிக் கொள்வோம்… அதிலேயும் மூழ்கிவிடுவோம்.

1.எதை எதைச் சம்பாரிக்க வேண்டும்…
2.எப்படி எல்லாம் நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டும்…
3.தான் உயர்வாக எப்படி வர வேண்டும்…
4.எல்லோரும் என்னை எப்படிக் கௌரவமாக மதிக்க வேண்டும்… போற்ற வேண்டும்… என்ற
4.பல வகையான எண்ணங்களில் இந்த அலைகளில் சிக்கிக் கொண்டு அப்படியே தத்தளித்துக் கொண்டிருப்போம்.

எத்தனை சம்பாரித்து வைத்து என்ன பலன்…? இந்த மாதிரிச் செய்கின்றார்களே…! என்று வருவோர் போவோர் அனைவரிடமும் இந்தக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்போம்.

இந்த அலைகளில் தான் மூழ்கிக் கொண்டிருப்போம். மீட்கும் நிலையோ மீளும் வழியோ இல்லாது தத்தளித்துக் கொண்டிருப்போம்.

நிறையக் குடும்பங்களில் இப்படித்தான் இருக்கும். மனிதனுடைய வாழ்க்கையில் மீளாத் துயரத்தில் இப்படிச் சுழன்று கொண்டு இருக்கிறோம்.

காரணம்… உயர்ந்த சரக்குகளை எடுத்து அதிலே நஞ்சினை கலந்து விட்டால் நஞ்சின் செயலாக்கம் எவ்வாறு இருக்குமோ… அதைப் போன்றுதான் மனிதனுடைய வாழ்க்கையில்
1.உயர்ந்த குணங்களை கொண்டோர் அனைவரும்
2.வாழ்க்கையில் எத்தனையோ அலைகளில் சிக்கி... புயலில் சிக்கி விடுகின்றோம்.

உதாரணமாக ஒரு புயல் அடித்தால் அது சுழன்று பெரும் நிலைகளாகப் பரவி எல்லாவற்றையும் அழித்துச் செல்கின்றது. புயல் ஓய்ந்த பின் பார்த்தோம் என்றால் எதையும் காணவில்லை… அடித்துச் சென்றுவிடுகிறது.

இதைப் போல மனிதனின் உணர்வில் (வாழ்க்கையில்) பெரும் புயல் வீச ஆரம்பித்தால் என்ன ஆகும்…? என்ன வாழ்க்கை...? என்ற நிலையில் கொண்டு தனக்குள் அனைத்தும் இருள் சூழச் செய்து கடைசியில் தற்கொலைக்கே அழைத்துச் செல்கின்றது.

அத்துடன் நமக்குள் வளர்த்த ஆசைகள் அனைத்தும் அழிந்து விடுகிறது. அந்தப் புயலின் நிலைகளில் சிக்கும் பொழுது நமக்குள் என்னென்ன ஆசைகள் இருந்ததோ அது அனைத்தையும் நொறுக்கிவிடுகிறது.

ஆகவே
1.நமக்குள் தீமை செய்து கொண்டிருக்கும்
2.அது போன்ற அலைகளைப் பிளக்கும் தன்மை வரவேண்டும்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழிகள் கொண்டு நம் எல்லையை வகுப்போம்.

மகரிஷிகள் அனைவரும் எத்தகைய இருளையும் ஒளியாக மாற்றிக் கொண்டு உள்ளார்கள் பேரானந்தப் பெரு வாழ்வு என்ற நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலாமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டே உள்ளார்கள்.

அந்த அருள் ஞானிகள் சென்றடைந்த எல்லையை நாம் அனைவரும் அடைவோம்.