ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 17, 2022

“சாமி செய்து தருவார்…” என்ற எண்ணத்தை வளர்த்தால் உங்களுக்கு அதிலே ஏமாற்றம் தான் வரும்

 

நம்மை ஒருவர் திட்டினால் அதைக் கூர்ந்து கவனிக்கின்றோம். அடுத்தாற்போல் அதே செயலில் நாமும் இயங்க ஆரம்பித்து விடுகின்றோம்.

அது போன்று யாம் (ஞானகுரு) இங்கே உபதேசிக்கும் போது யார் ஒருவர் இதைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ
1.சாமி சொன்ன வழிகளில் நாம் போக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால்
2.அந்த உணர்வுகள் உங்களுக்குள் வருகின்றது.

கீதையிலே சொன்னது போல் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகின்றாய்... மூஷிகவாகனா...! எதை நினைக்கின்றீர்களோ அதையே நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்.

அப்படி அந்த ஞானிகளை நினைப்பதற்குண்டான ஆற்றலையும் அதை நீங்கள் பெறுவதற்கும் அதைச் சுவாசிக்க கூடிய நிலைகளுக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும் நிகழ்ச்சி தான் தியானம்.

அந்த முறைப்படி நினைக்கப்படும் பொழுது மெய் ஞானிகள் காட்டிய வழிகளிலே அங்கே போகலாம்.
1.சாமி செய்து கொடுப்பார் என்று எண்ணினால் ஏமாந்து தான் போக வேண்டும்.
2.சாமி பெரிய மகான்...! அவர் கொடுக்கின்றார் பிரசாதம் கொடுக்கின்றார்... அது கொடுக்கின்றார்... என்று எண்ணிக் கொண்டிருந்தால்
3.உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

இயற்கையின் உண்மை இதுதான் என்று உங்களுக்குள் அருள் உணர்வின் வித்தாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த விதைக்கு நீரூற்றி வளர்க்க வேண்டியது “உங்களுடைய பொறுப்பு…”

குருநாதர் எனக்கு அந்த அருள் வித்தைக் கொடுத்தார்… அதற்கு வேண்டிய பக்குவத்தைச் சொன்னார்… எடுத்துக் கொண்டேன். அதன்படி விளைய வைத்த வித்தின் தன்மையை உங்களுக்குள் கொடுக்கப்படும்போது அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கின்றேன்.

“சாமி கொடுப்பார்...” என்று கோவிலில் தெய்வத்திடம் சென்று வரம் வாங்கிக் கொடு...! என்று கேட்பது போன்று கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

சாமி பெரிய சக்தி வாய்ந்தவர்…! என்ற எண்ணத்தில் தலைவலி என்னை விட்டே போக மாட்டேன் என்கிறது… முழங்கால் வலி போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்லிக் கேட்கின்றார்கள்.

வலி நீங்கி நான் நன்றாக வேண்டும் என்று கேட்கச் சொல்கின்றேன். மீண்டும் தலை வலி விட மாட்டேன் என்கிறது… ஐந்தாறு மாதமாக விட மாட்டேன் என்கிறது… என்னென்னமோ வைத்தியம் பார்த்தேன் என்றே சொல்கிறார்கள்.

இப்போது என்ன வேண்டும்...? என்று கேட்டாலும் அது தான் வலி விட மாட்டேன் என்கிறது என்று மீண்டும் அதையே தான் கேட்கிறார்கள். ஏனென்றால் அந்த உணர்வுதான் நம்மைப் பேச வைக்கின்றது.

எத்தனை தடவை சொன்னாலும் கூட அதைத்தான் திருப்பிக் கேட்கின்றார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு நமக்குள் பக்தியை வளர்த்து வைத்து விட்டார்கள்.

டாக்டரிடம் சென்று தலை வலி... இடுப்பு வலி மேல் வலி என்று சொல்கிறார்கள். அவர்கள் அதற்குண்டான மருந்தை கொடுத்து மற்ற எல்லாம் சொல்கின்றார்கள்.

டாக்டர் சொன்ன வழிப்படி செய்தால் தானே அந்த நோய் சரியாகும்.

ஊசியையும் போட்டு மருந்தையும் உட்கொண்ட பின் ருசியாக இருக்கிறது என்று டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொன்னதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்...?

மீண்டும் கை கால் குடைச்சல் உடல் வலி வரத்தான் செய்யும்.

அதே போன்று இங்கே தியானத்தைச் சொல்லிக் கொடுத்து மெய் ஒளியின் தன்மையைப் பதிவு செய்கின்றோம். அதை எடுத்து உங்களுக்கு வரக்கூடிய தீமையைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது அதை நீங்கள் செய்தால் தான் சரியாகும்.
1.உங்களை நீங்கள் நம்புங்கள் என்று தான் சொல்கிறேன்
2.நான் சரியாக்கித் தருகின்றேன் என்று சொல்ல வரவில்லை.