ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 16, 2019

“மனதை ஒருநிலைப்படுத்தவே தியானம்...!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்ளுதல்) என்றிட்ட ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்... அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தத்தம் செயலுக்கு சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்...” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்... உணர்தல்... தெளிதல்... என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால் எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்...?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற்றிட வேண்டும் ஈஸ்வரா...” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்...!”