ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 22, 2019

இப்பொழுது இருக்கும் இந்த மனித உடலே நமக்குக் “கடைசி உடலாக” இருக்க வேண்டும்...!


நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பல  தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான உணர்வுகளை எடுத்துத்தான் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

ஒரு முயல் என்ன செய்கிறது...? நாயிடமிருந்து தப்ப எண்ணுகிறது. அதே சமயத்தில் அந்த நாய் நரியிடமிருந்து தப்ப எண்ணுகிறது.
1.அப்பொழுது தப்ப வேண்டும் என்ற அந்த எண்ணங்களைச் சுவாசித்து
2.அந்த உணர்வின் தன்மை தன் உடலுக்குள் பெருக்கிக் கொள்கிறது.
3.இப்படித்தான் எல்லா உயிரினங்களும் வளர்ச்சி அடைந்து வந்தது.

ஒரு மான் சாந்தமானது. புலியோ கொடூரமானது. அந்தப் புலியிடமிருந்து மான் தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கின்றது.

இப்படிச் சிறுகச் சிறுக எண்ணி அந்த உணர்வு பெற்ற பின் கடைசியில் என்ன நடக்கின்றது...? அதாவது பல கோடி உடல்களை எடுத்துப் பல தீமைகளிலிருந்து நீக்கிடும் அருள் சக்தி பெற்ற இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.

அதைத்தான் தீமைகளிலிருந்து விடுபடும் எண்ணத்தை உருவாக்கி வந்ததை “இராமேஸ்வரம்” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இராமன் என்றால் எந்தச் சுவையை எடுக்கின்றோமோ அந்த எண்ணங்கள் வரும். அது தான் சீதாராமா என்பது. எதன் சுவையோ அதன் அந்த உணர்ச்சிகளின் எண்ணங்கள் வருகிறது,

ஆகவே இதைப் போல தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வுகள் எடுத்துக் “கோடிக்கரை” என்ற நிலையில் இருக்கின்றோம்.
1.அதாவது நாம் எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று
2.இன்று நாம் கடைசி உடலாக இருக்கின்றோம்.

கோடிக்கரை என்ற கடைசி உடலில் இருக்கப்படும் பொழுது இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டும்..?

தனுசு கோடி...! அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி மனித வாழ்க்கையில் வந்த இந்தத் தீமைகளை எல்லாம் நீக்கியவன். நாம் அகஸ்தியன் அடைந்த நிலையை அடைய வேண்டும்.

கோபப்படுவோரைப் பார்த்தவுடன் “ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் நினைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுத்தப்படுத்தி முடிந்தவுடனே என்ன செய்ய வேண்டும்...?

கோபமாகப் பேசிவர்களுக்குள் சாந்தமும் ஞானமும் விவேகமும் வர வேண்டும். நல்லது செய்யக்கூடிய அந்த உணர்வுகள் வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இப்படி நாம் எண்ணினால் அவன் கோபித்த உணர்வு நமக்குள் வருவதில்லை.
2.நமக்குள் நாம் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

ஒரு குழம்பை வைக்கும் பொழுது அதை எப்படி ருசியாக மாற்றுகின்றோமோ நம் உடலில் அந்தத் தீமைகள் புகாது... தீமைகள் வளர்ந்திடாது தடுத்துக் கொள்கிறோம்.

இல்லை என்றால் அந்தக் கோபப்படுவோரின் உணர்வைப் பதிவாக்கி விட்டால் அடுத்தாற்போல் வரப்படும் பொழுது... அவனைப் பார்த்தாலே “அவன் மோசமானவன்...” என்று நம்மைச் சொல்ல வைக்கும்.

யாராவது அவனைப் பற்றிச் சொன்னார்கள் என்றால் அல்லது அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் இதே நிலை வரும். அந்த நேரத்தில் எல்லாம் நமக்குள் பல கெடுதலான நிலைகள் வந்துவிடுகின்றது.

பின் நோயாகின்றது... பரிணாம வளர்ச்சியில் வந்த இந்த மனித  உடலை வீழ்த்தி விட்டுத் தேய் பிறையாகிக் கீழே செல்ல வைக்கின்றது.

அதைத் தடுப்பதற்காகத்தான் இதை எல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கிறோம்.

யாம் (ஞானகுரு) உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் எப்பொழுது எண்ணினாலும் அந்தச் சக்தி கிடைக்கும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப்படும் பொழுது
1.உங்கள் உடலில் உள்ல பல கோடி உணர்வுகளுக்குள்ளும் அது ஒன்றாகித் தனுசு கோடி ஆகின்றது.
2.அழியா ஒளிச் சரீரம் பெற ஏதுவாகின்றது.