ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 23, 2019

உடல் நோயை நீக்கினாலும் “ஊழ்வினையை” மாற்றியே ஆக வேண்டும்


பத்தாவது நிலையை அடையக் கூடிய தகுதி பெற்றது தான் இந்த மனித உடல். நம் உடலில் எத்தனையோ நல்லவைகள் இருப்பினும் கோபம் வெறுப்பு சலிப்பு வேதனை சஞ்சலம் சங்கடம் இவை எல்லாம் நம் உடலில் அரக்க குணங்களாக இருக்கிறது,

அதைக் காட்டுவதற்காகத்தான் இராமாயணத்தில் பத்துத் தலை இராவணன் என்று காட்டுகின்றார்கள். இராவணன் என்ன செய்கிறான்...? சீதாவைச் சிறை பிடிக்கின்றான்.

ஆக ஒருவர் செய்யும் தவறைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வருகிறது. கோபம் வரும் பொழுது...
1.நம் உடலில் நல்ல குணங்கள் இருந்தாலும் அந்தக் குணத்தைச் செயலற்றதாக மாற்றி
2.தவறு செய்பவனை உதைக்க வேண்டும்...! என்ற எண்ணங்கள் தான் வரும்.

அதே மாதிரி ஒருவனை வேதனைப்படுத்துகிறான் என்றால் அவனை நினைக்கும் போது...
1.அந்த வேதனைப்படுத்தும் உணர்வு காற்றிலே இருக்கிறது.
2.நாம் நுகர்ந்து அறியப்படும் போது அதே உணர்வு நம்மையும் வேதனைப்படுத்தும் செயலைச் செயல்படுத்துகின்றது.

ரேடியோ TV அலைகளை எந்த அலைவரிசையில் ஒலிபரப்பு செய்கின்றனரோ அந்தந்தச் சுவிட்சைப் போட்டவுடன் அதே நிலை வருகின்றது.

அதே போல் தான்...
1.மனித வாழ்கையிலும் ஒவ்வொரு ஸ்டேசனாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.
2.திட்டியவர்கள்... வெறுப்புடன் போனவர்கள்... சண்டை போட்டவர்கள்... என்று
3.அவர்களை நாம் நினைக்கும் போதெல்லாம் காற்றிலிருந்து இழுத்து நமக்கு அந்தந்த உணர்வுகள் தான் வருகின்றது.

நாம் இதே வழியில் போனால் அதை எல்லாம் துடைக்க வேண்டும் அல்லவா.. அதற்குச் சக்தி வேண்டுமல்லவா...! ஏனென்றால் இத்தகைய தீமையின் நிலைகளை எல்லாம் நீக்கிப் பழகியவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி உணர்வுகளைத் தான் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கிறோம்.

பின் பதிவான அந்தச் சக்தியை தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய திறனையும் உங்களுக்கு உண்டாக்குகிறோம்.

காலை துருவ தியானம்... மதியம் இரவு நேரம் தியானம்...! செய்வதன் மூலம் அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கி வைத்துக் கொண்டால் தீமைகள் வரும் பொழுது மாற்றிக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு கோபப்படுபவனை நாம் பார்த்தால் நம் உயிரிலே அந்தக் கோப உணர்ச்சிகள் பட்ட பின் நமக்கும் கோபம் வரும். அப்பொழுது
1.அந்த நேரத்தில் நாம் கோபிக்கின்றோமா...
2.நாம் நுகர்ந்த அந்த உணர்வு நம்மைக் கோபிக்கச் செய்கிறதா…? என்று சிந்தித்துப் பாருங்கள்...!

நாம் கோபப்படவில்லை.. நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகிறது. இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஆனால் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்தக் கோபப்படும் உணர்வுகள் உமிழ் நீராக மாறி அது நம் சாப்பாடுடன் சேர்த்து இரத்தமாக மாறும் போது அதிலே கார உணர்ச்சியைத் தூண்டும் கருத்தன்மை அடைகிறது.

ஒரு தடவைக் கோபப்பட்ட பின் அடிக்கடி அதே மாதிரிக் கோபமாக எண்ணினால் அந்த அணுக்கள் நம் உடலிலே பெருகத் தொடங்கினால் இரத்தக் கொதிப்பு வந்துவிடும்.

அந்த இரத்தக் கொதிப்பை மாற்றுவது யார்...?

1.டாக்டரிடம் சென்று மருந்தைச் சாப்பிட்டு சௌகரியம் செய்யலாம்.
2.ஆனால் அந்த கோபக்காரனைக் கண்ணால் பார்த்த உணர்வு நம் உடலின் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக இருக்கிறது.
3.அதிலிருந்து அது மீண்டும் வந்து கொண்டே தான் இருக்கும்.

அதை எப்படி மாற்றுவது...?

அந்த மாதிரி வராதபடி அப்போதைக்கு அப்பொழுது நாம துடைக்க வேண்டும் என்றால் உடனே ஈஸ்வரா...! என்று சொல்லிப் புருவ மத்தியில் உயிரை எண்ணித் தடுக்க வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அனுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் அந்த உணர்வைச் செலுத்தி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

இப்படிச் செய்தால் அந்தக் கோபமான வித்திற்குப் பக்கத்திலேயே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகும். இது வலுவான பின் கோப உணர்வின் வித்துக்கு உணவில்லாதபடி அதைச் செயலிழக்கச் செய்துவிடும்.
1.இப்படிச் செய்தால் தான்
2.எந்த ஒரு தீமையான வினையிலிருந்தும் நாம் விடுபட முடியும்...!