ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2019

கவலையிலிருந்து மீண்டு விட்டால் “எல்லாமே தீர்ந்து விடுமா…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


மனித உடலில்.. இந்த மனித ஜென்மத்தில்.. பல தவறுகளும் பாவங்களும் நடைமுறையில் எல்லோருமே செய்கின்றோம். அந்தத் தவறைத் தவறு என்று உணர்ந்து கொண்டு “தவறு செய்யாதவர்கள்” யாருமே இருக்க முடியாதப்பா…!

அந்தத் தவறிலிருந்து விடுபட்டு தன் நிலை என்ன..? தான் யார்..? என்ற எண்ணத்துடன் பல நல்ல உணர்வுகளை நற்காரியங்களை எடுத்துக் கொண்டு
1.நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரே எண்ணத்துடன் அவ்வீஸ்வரனை எண்ணும் பொழுது
2.நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்கு.. அச்சக்திதான் ஒரு நிலையில் ஊட்டம் பெறுகிறது,

“அந்த நிலையிலேயே நாம் என்றும் இருந்து கொண்டிருந்தால்…” நம் வாழ்க்கை முறையில் பல இன்னல்களும் பல இன்பங்களும் வந்து மோதும் பொழுதும் நம் உயிர் நிலைக்கு நம் ஆத்மாவிற்கு இவை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாதப்பா..!

ஒரு மனிதனுக்குக் கஷ்டங்கள் கவலைகள் வந்திடும் பொழுது அவற்றிலிருந்து நாம் எப்படி மீண்டு… நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரு நிலைப்படுத்திட வேண்டும் என்று சொல்லுகின்றோமோ அப்படித்தான் இன்பத்திலிருந்தும்… அதி சந்தோஷத்திலிருந்தும்… மீண்டு வர வேண்டுமப்பா…!

1.கவலையிலிருந்து மீண்டு வந்தால் எல்லாமே தீர்ந்தது…! என்று எண்ணிட வேண்டாமப்பா..!
2.நாம் எப்படிக் கவலையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதே போலத்தான்
3.அதி சந்தோஷத்தையும் நம்முள் ஏற்றுக் கொள்ளாமல் மீள வேண்டுமப்பா…!

இன்றைய மனிதர்கள் எல்லோருமே மனித வாழ்க்கையில் உள்ள கஷ்டநஷ்டங்களில் கவலையிலிருந்து மீண்டு சந்தோஷ நிலைக்குச் செல்ல வேண்டும்…! என்று தான் விரும்புகின்றார்கள்.

1.இதிலிருந்து மீண்டு அதற்குச் செல்லும் பொழுது
2.அவ்வெண்ணமும் அந்தச் சுவாச நிலையும் மாறுபட்டு
3.நம் ஆத்ம நிலைக்கே அது பெரும் தீங்காகிறதப்பா…!

இந்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு ஒரு வழிக்குக் கொண்டு வரத்தான் அன்றைய ஞானிகளும் ரிஷிகளும் ஆண்டவனின் ரூபத்தை வைத்துப் பல நூல்களை வடித்தார்கள் “மனிதர்கள் மனதில் பதியும்படி…!”

மனிதர்கள் எண்ணத்தில் சுவாசத்தில் என்றுமே ஒருநிலைப்படுத்தி அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டால் அவர்கள் இருக்கும் ஜெப நிலையிலிருந்து பல உன்னத நிலைகளை அடையலாம்.
1.எண்ணத்திலும் சுவாசத்திலும் தானப்பா நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்திடும் சொத்தெல்லாம் உள்ளதப்பா…!
2.பல ரிஷிகளும் ஞானிகளும் பெற்ற நிலையெல்லாம் அது தானப்பா…!

மனித வாழ்க்கையில் வந்திடும் பல இன்னல்கள் இன்பங்கள் எல்லாவற்றையும்
1.மனிதன் தன் எண்ணத்திலும் செயலிலும் எற்றுக் கொள்ளாமல்
2.பிறரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் தன் மனதைக் கலங்கவிடாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து
3.தன் எண்ணத்தில் வந்து மோதிடும் பல அபிலாஷைகளுக்கு அடிமையாகாமல் அதிலிருந்து மீண்டு
4.தன் சுவாச நிலையில் “ஒரு நிலை எய்தி வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

அது தான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து...!

புள்ளி விபரம் வைத்துப் பல கணக்குகள் போட்டு நட்சத்திர மண்டலக் கணக்குகளை எல்லாம் மனிதர்களுக்குப் புகட்டிட விஞ்ஞானிகள் பல நாட்கள் தன் அறிவையும் நேரத்தையும் செலவழித்து மக்களுக்குப் புகட்டுகிறார்கள்.

இதிலெல்லாம் பெறும் இலாபம் என்னப்பா…! அதனால் மனித ஆத்மாவிற்குப் பயன் என்னப்பா…?

ஆத்மாவிற்கு எந்த நிலையை நாம் தேடிக் கொள்ள வேண்டும்…? என்ற எண்ணம் மனிதனுக்கு வந்துவிட்டால்
1.அவன் ஆத்ம நிலையில் இருந்து கொண்டே அறிந்திடலாம்
2.அகண்ட அண்டத்தில் உள்ள பல கோடி உண்மைகளை…!