ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2019

ஆலயங்களில் பல விளக்குகளைப் போட்டுக் காண்பிப்பதன் உட்பொருள் என்ன...?


நாம் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே தீபாராதனை காட்டும் பொழுது அங்கிருக்கும் பொருள்கள் அனைத்தும் தெளிவாகத் தெரிகின்றது.

ஆகவே ஒரு விளக்கைக் காட்டினால் அங்கு பல பொருள்கள் தெரிகின்றது. அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்..?
1.பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா...! என்று
2.புருவ மத்தியில் உயிரை எண்ணிச் சுவாசிக்க வேண்டும்.

இந்த ஆலயம் வருவோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும். நாங்கள் பாரப்போர் குடும்பம் எல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும், வியாபார நிமித்தம் எங்களிடம் தொழில் செய்வோரும் அவர்களது குடும்பமும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் ஒரு அவசரம் நிமித்தமாகக் கொஞ்ச நேரம் கால தாமதமாகி விட்டது என்றால் நாம் என்ன செய்கிறோம்..?

உடனே கோபிக்கின்றோம். ஏன்டா இவ்வளவு நேரம்...? என்று குழந்தைகளை அதட்டுகின்றோம்... மிரட்டுகின்றோம்..!

அடுத்தாற்போல் ஏதாவது ஒரு காரியத்திற்காக உட்கார்ந்து இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். உட்கார்ந்து வெகு நேரம் ஆனால் உடனே நம்மையறியாமல் வேதனைப்படுகின்றோம்... கோபப்படுகின்றோம்...!

யாரை நினைத்து இந்த வேதனை உணர்வை நுகர்கின்றோமோ அவரை எண்ணும் போதெல்லாம் வெறுப்பும் குறைபாடுகளும் வந்து விடுகின்றது. நம்மை அறியாமலே இப்படி வந்து விடுகின்றது

அப்படி வராமல் தடுப்பதற்குத் தான் ஆலயங்களில் விளக்கைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.. தீப ஆராதனையும் காட்டுகின்றார்கள்.

அதாவது
1.“என்ன நிமித்தமோ...! அதனால் நேரம் ஆகிவிட்டது...
2.சரி பரவாயில்லை... அவர்கள் சீக்கிரம் வரவேண்டும்...! என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்
3.நமக்கு யார் மீதும் வேதனையும் வராது... வெறுப்பான உணர்வுகளும் வராது.
4.ஒன்றுபட்டு வாழும் தன்மையும் சங்கடங்கள் வளராத நிலைகளும் நமக்குள் வரும்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் குடும்பத்தில் கணவன் மனைவியாக வாழும் நீங்கள் வாழ்க்கையில் சில குறைபாடுகள் வந்தாலும் அந்தப் பொருளறிந்து செயல்படும் சக்தியைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

குழந்தைகளினாலோ உறவினர்களினாலோ அல்லது நண்பர்களினாலோ சிறு குறைகள் வந்தாலும் அது எது சந்தர்ப்பமோ..
1.அவர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.வாழ்க்கையில் தெளிந்து நடக்க வேண்டும்
3.நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுக்க வேண்டும்.

இப்படி இருந்தால் இல்லற வாழ்க்கையில் என்றுமே தெளிந்த மனம் கொண்டு வாழலாம்... மகிழ்ந்து வாழ்ந்திடவும் இது உதவும்.